பதிப்புரை : யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்

யாழ்ப்பாண சமூக உருவாக்கத்தில் விபுலானந்தரின் பங்கு (1920களில்) என்ற இச்சிறுநூல் எழுநாவின் விசேட வெளியீட்டுத் திட்டங்களில் ஒன்றாகிய மீள்வெளியீடுகள் என்னும் பிரிவின் கீழ் வெளியாகின்றது. முதல்பதிப்பு வெளியாகிய காலப்பகுதி, தமிழ் அரசியலில் ஆசிரியரின் பங்களிப்பு, தமிழ் அரசியல் இன்று வந்தடைந்திருக்கும் இடம், தமிழ் அரசியலின் இன்றைய போக்கு போன்ற பல காரணிகள் இந்நூல் மீள்பதிப்பிக்கப்படுவதற்கான காரணிகளாகின்றன.

இந்நூல் வெளியாகிய காலப்பகுதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நூலாசிரியரின் பாத்திரத்தையும் சற்று விரிவாகப்பார்க்க வேண்டியுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு போராட்ட சக்திகள் களத்திலிருந்து அகற்றப்பட்டு புலிகள் தமது நடைமுறை அரசுக்கான தயார்ப்படுத்தலை மேற்கொண்டிருந்த காலப்பகுதியில் தீவிர இடதுசாரிப் பின்புலத்திலிருந்த கௌரிகாந்தன் அவர்களால் இந்நூல் எழுதப்பட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இடதுசாரிச் செயற்பாட்டாளராக தனது பயணத்தைத் தொடங்கிய கௌரிகாந்தன் இரண்டாம் தலைமுறை இயக்கத்தில் ஒன்றான கீழைக்காற்று இயக்கத்தில் முக்கிய பங்காற்ரியவர். அதன் தொடர்ச்சியில் தேசியவாத இயக்கமொன்றிலும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டுள்ளார். புலிகள் இயக்க காலப்பகுதியில் மக்கள் இயக்கச் செயற்பாடுகளில், முக்கியமாக மாணவ அமைப்புக்கள் சார் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.

தேசியப் போராட்டம் தொடர்பாகப் பல்வேறு பார்வைகளைக் கொண்டிருந்த அமைப்புக்கள் களத்தில் இல்லாத காரணத்தால் தேசியவாதம் தன்னை ஒருமுகப்படுத்தியிருந்த காலப்பகுதியது. குறிப்பாக தமிழ்த்தேசம் நடைமுறை அரசுக்கான தயார்ப்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. தமிழ்த்தேசத்தின் மரபார்ந்த ‘சொந்தக்காரர்களாக’ இருந்த சக்திகள் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியத்தைத் தம்முடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கும் தேசியத்தின் பாதையும் குணாம்சமும் மாறிவிடாதபடி பேணுவதற்குமான வேலைத்ததிட்டங்களில் தம்மை ஈடுபடுத்தியவாறிருப்பர். அவ்வாறே, முற்போக்கு சக்திகளும் தேசியத்தின் பாத்திரத்தை முற்போக்காக மாற்றுவதற்கும் முற்போக்கு பாத்திரத்தையுடைய தேச உருவாக்கத்திற்குமான வேலைத்திட்டங்களில் நிச்சயமாக ஈடுபட்டிருப்பர். இவ்வாறான இருவேறு பார்வைகளையுடைய தேசிய சக்திகளுக்கிடையேயுள்ள முரண்பாட்டின் விளைவாகவே இந்நுல் வெளியாகியுள்ளதென்பதை நூலாசிரியர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ரீதியான ஒடுக்குமுறை நிகழும் காலங்களிலும் அதற்கெதிரான தேசிய ரீதியான விடுதலைப் போராட்டம் நடைபெறும் காலங்களிலும் ஓர் இடதுசாரி, தன்னை இடதுசாரியாகவும் மார்க்சியவாதியாகவும் தொடர்ச்சியாக உணரும் அதேவேளை, ஒரு தேசியவாதியாகவும் தன்னுடைய பாத்திரத்தை வகுத்துச் செயற்படுவது உலகப் பொதுமையானது.

வரலாற்றில் பல மார்க்சியவாதிகள் தேசிய விடுதலைப் போராட்ட காலப்பகுதியில் தம்மைத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு செயற்பட்டுள்ளனர். தேசியத்திற்கு இயல்பாக இருக்கக்கூடிய அசமத்துவத்திற்குச் சார்பான குணாம்சத்தை மாற்றியமைத்து, சமத்துவம் சார்பான கூறுகளை தேசியத்தின் குணாம்சங்களாக மாற்றும் நோக்கம் அவர்களிடம் இருந்திருக்கின்றது. கலாச்சாரக் கூறுகள் நிறைந்த தேசியவாதம் தன்னை அரசியல் கூறுகள் நிறைந்ததாக மாற்றிக் கொள்ளும் செயல்முறை தேசிய விடுதலைப் போராட்டக் காலப்பகுதியில் விரைவுபெறும். அவ்வேளையில் அதனை முற்போக்கான திசைவழியே முன்னகர்த்துவதற்கான செயற்பாட்டில் இடதுசாரிகளின் பங்கு மிக முக்கியமானதாயிருக்கும். தேசியவாதத்தின் முற்போக்கான பாத்திரத்திற்குரிய உள்ளீடுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகத்தின் இடதுசாரிகளின் பங்களிப்புக்களால் ஆனவை. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்திலும் இடதுசாரிகளின் பங்கு அளப்பரியதாக இருந்திருக்கின்றது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்போக்கான திசைவழி நகர்த்துவதற்கான செயற்பாடுகள், பல்வேறுபட்ட பின்னணிகளிலிருந்து செயற்பட்ட இடதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் கௌரி காந்தன் அவ்வாறான ஒருவர்.

தமிழ்த்தேசியத்தின் குணாம்சத்தை மாற்றியமைக்க முற்பட்ட வேளையில், நடைமுறைச் சமூகப் படிநிலை அமைப்பிலிருந்து வெளிக்கிளம்பக்கூடிய எதிர்ப்பைக் கருத்திற் கொண்டு, மையக்கருத்தியலில் கைவைக்காமல் – விளிம்புநிலையாக்கப்பட்ட கருத்தியல்களை மையத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அவ்வகையில் யாழ்ப்பாணச் சமூக உருவாக்கத்தின் முற்போக்கான பக்கத்திற்கு, கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த ஒருவரின் பங்கு குறித்துப் பேசுவதே இந்நூல். அந்நபர் சுவாமி விபுலானந்த அடிகளார். இலக்கியம், மொழியியல், சமயம், அறிவியல், இசை போன்ற துறைகளில் விபுலானந்தரின் பங்கு குறித்து ஏராளமாகப் பேசியாகிவிட்டது. அரசியல் தளத்தில் விபுலானந்தரின் பங்கு குறித்த ஆய்வுகள் மற்றைய துறைகளுடன் ஒப்பிடுகையில் குறைவானவை என்று கூறலாம். அவ்வகையில், இந்நூல் அரசியல் தளத்தில் விபுலானந்தரின் பங்கைப் பேசுகின்றது.

விபுலானந்தரின் அரசியல் பணியை மூல ஆவணங்களில் இருந்து பூரணமாக அறிந்துவிட முடியாது. அவருடைய பிற பணிகள் தொடர்பான ஆய்வுகளில் இருந்தும் அக்காலப்பகுதிக்குரிய பிற ஆவணங்களில் இருந்துமே அறிந்து கொள்ள முடியும். விபுலானந்தர், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசுடன் இணைந்து சில காலங்கள் இயங்கியுள்ளார். இளைஞர் காங்கிரசின் காலத்திற்குப் பின்பான காலப்பகுதிகளில் விபுலானந்தர் அரசியல் ரீதியாக நேரடியாக இயங்கியதற்கான ஆதாரங்கள் இல்லாதபோதிலும் அரசியல் தளத்திற்கு மிக நெருக்கமான சமூகத்தளத்தில் இறுதிவரை இயங்கியுள்ளார். ஒடுக்கப்பட்டோர் சார்பான அவருடைய அரசியலின் தாக்கம் சமூகத்தளங்களிலான அவருடைய செயற்பாடுகளில் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளது. முக்கியமாக முஸ்லிம்கள் தொடர்பான அவருடைய பார்வைக்கு ஜனாப் ஏ.எம்.நஹியா எழுதிய ‘முஸ்லிம் நேசர் சுவாமி விபுலானந்தர்’ என்ற நூல் சிறந்த உதாரணமாகும்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பாத்திரம் தொடர்பாக இவ்விடத்தில் சில விடயங்களைக் கூற முடியும். இலங்கைத் தீவின் இடதுசாரி அரசியலுக்கான விதை யாழ்ப்பாண காங்கிரஸ் ஊடாகவே ஊன்றப்பட்டது என்று சொல்வது மிகையானதல்ல. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், அகில இலங்கை இளைஞர் காங்கிரஸ் என்ற அச்செயற்பாட்டாளர்களின் பயணம், பிற்காலத்தில் சூரியமல் இயக்கம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களின் தாக்கம் லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றத்திலும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திலும் கூட இருந்துள்ளது.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பாத்திரம் அதனுடன் தொடர்புபட்டவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதன் முற்போக்கான பாத்திரம் தொடர்பாகப் பெருமளவு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், இவ்விடத்தில் அவற்றை இருவகையான சட்டகங்களுக்குள் உட்படுத்திப் பார்ப்பது அவசியமானது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் புறநிலையான பார்வையை நோக்கினால், காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட முடியும். புறநிலையில் முற்போக்கான பாத்திரத்தை வகித்ததுடன் மாத்திரமல்லாது, அகநிலையில் சமூக மாற்றம் தொடர்பாக 1920களிலேயே மிகவும் முற்போக்கான கருத்துக்களையும் முன்வைத்தது. தேசிய ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்துதல், தீண்டாமைக்கும் சாதியத்திற்கும் எதிரான போக்கு, கூட்டுறவுக் கலாச்சாரத்தை சமூகமட்டத்திற்குக் கொண்டு செல்லுதல், சுய பொருளாதாரக் கொள்கை என ஏராளமான முற்போக்கான கருத்துக்களை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கொண்டிருந்ததுடன் அவற்றுக்காகப் போராடியுமிருந்தது.

விபுலானந்தர், அரசியல் ரீதியாகத் தொடர்புபட்ட அமைப்பாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மாத்திரமே இருந்துள்ளது. ஆக, அவருடைய அரசியல் பரிணாமம் அதனூடாகவே நேரடியாக அளவிடப்படக்கூடியது. மேலதிகமாக, சமூகத்தளத்தில் அவருடைய செயற்பாடுகளின் போதான அணுகுமுறையில் இருந்தும் மறைமுகமாக அளவிட முடியும்.

சமூகத்தளத்தில் முக்கியமாக கல்வித்துறையில் விபுலானந்தரின் பங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு சார்பானது என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்பின்புலத்தில் வைத்தே விபுலானந்தருடைய ‘அரசியலை’ உய்த்துணர்ந்து கொள்ள முடியும். யாழ்ப்பாணச் சமூக உருவாக்கத்திலும் அதன் பிற்காலத்தைய அரசியல் அசைவியக்கத்திலும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பங்கு இன்றியமையாதது. அக்காலத்தில் அது வகித்த முற்போக்கான பாத்திரம் அதன் பின்வந்த பல அரசியல் இயக்கங்களால் கூட தொட்டுப்பார்க்க முடியாத உச்சத்தில் இருந்தது.

இந்நூல் இப்போது மீள்பதிப்பிற்குள்ளாகும் வேளையில், அதன் இக்காலத்தைய அவசியத்தையும் குறிப்பிட வேண்டும். அதற்கு, இன்றைய அரசியல் சூழல் பற்றிய பார்வையும் அவசியமானது. அதனூடாகவே இந்நுலை வெளியிட வேண்டியதன் அவசியம் பற்றிய புரிதலை வந்தடைய முடியும்.

2009 மே இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டது. அந்நிகழ்வுக்கு முதலான இறுதி 20 வருடங்களும் ஆயுதப்போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் மாத்திரம் நடாத்தப்பட்டது. இந்நிலையில் அவ்வமைப்பு அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியலில் ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளதை மறுக்க முடியாது. வரலாற்று ரீதியாக இலங்கையில் இரு தேசங்கள் இருந்துள்ளன. நடைமுறையில் இரு தேசங்களும் இரு அரசுகளாக செயலாற்றியுள்ளன. தொடர்ச்சியான சிங்கள பேரினவாத நடைமுறைகளால், தமிழ்த்தேசிய அரசியல், கலாச்சார கூறுகளுக்கு மேலதிகமாக அரசியல் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு சமூகத்தளத்தில் தன்னை மீள ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றது.

இன்றைய தமிழ்த்தேசிய அரசியலானது, தேசியவாதத்திற்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய பிற்போக்கான கூறுகளைக் கொண்ட வலதுசாரித் தேசியமாக பிற்போக்கான பாத்திரத்தை கொண்டுள்ளது மறுக்க முடியாத உண்மையாகும். இந்நிலையை மாற்றி தமிழ்த்தேசிய சட்டகத்தில் இயங்கும் அரசியல் இயக்கங்கள் முற்போக்கான பாத்திரத்தை வகிக்க வேண்டியது அவசியமானது. ஆனால், இன்றுள்ள அமைப்புக்களிடம் வரலாற்று ரீதியான புரிதல் பெருமளவிற்கு இல்லை. இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் இயக்கங்கள் வெறுமனே சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையின் எதிர்வினை இயக்கங்களாகவும் பிற்போக்கான குணாம்சங்களையுடைய தேசியவாதக் கருத்தியலை உற்பத்தி செய்வனவாகவும் மாத்திரமே தொழிற்படுகின்றன.

ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் அரசியல் என்ற அறரீதியான பாத்திரம், அவற்றுக்கு முற்போக்கான பாத்திரத்தை வழங்கிவிடப் போதுமானதல்ல. அல்லது, புறநிலையான பார்வையும் இயக்கமும் முற்போக்கான கருத்தியலைக் கொண்டிருப்பது மட்டும் அவற்றுக்கு முற்போக்கான பாத்திரத்தை வழங்கிவிடாது. இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் எவ்வாறான பாத்திரத்தை வகிக்க வேண்டும் அல்லது இன்றிருக்கும் தமிழ்த்தேசிய செயற்பாட்டியக்கம் எவ்வாறான குணாம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு நாம் மீண்டும் 1920களில் செயற்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசிடம் செல்ல வேண்டியுள்ளது. புறநிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பும், தமிழ்த்தேசத்தின் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் இறையாண்மையையும் வலியுறுத்தும் தன்மையும் இருக்க வேண்டும். அவ்வாறே, அகநிலையில், அசமத்துவங்கள் தொடர்பான தீர்க்கமான பார்வையைக் கொண்டிருப்பதுவும் அவசியமானது. சாதியப்படிநிலையுடன் கூடிய சமூக அசமத்துவக் கட்டமைப்பை கருத்தியல் ரீதியல் மட்டுமல்லாது நடைமுறையிலும் எதிர்கொள்ளத் துணிய வேண்டும். அதற்கெதிராகப் போராட வேண்டும். அவ்வாறே, வர்க்க ரீதியான சமத்துவத்திற்கு ஆதரவான தனது கொள்கைப் பிடிப்பைப் பகிரங்கப்படுத்த வேண்டியதும் அவசியமானது. மேலும், இதர சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்பான தன்னுடைய பார்வையை முற்போக்கானதாக வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமானது. இன்னும், பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்டோர் சார்ந்த நிலைப்பாடுகளையும் அவற்றுக்கெதிரான செயற்பாடுகளையும் கொண்டதாக தன்னுடைய பாத்திரத்தை வகுத்துக் கொள்வதே தமிழ்தேசியத்தின் இன்றைய தேவையாகவுள்ளது.

இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, 1990களின் ஆரம்பத்தில் தேச உருவாகச் செயற்பாடுகளின் போது, பிற்போக்கான உள்ளடக்கத்துடன் நிகழும் தேச உருவாக்கம் தேச உருவாக்க நகர்வைத் தவறான திசைவழி நகர்த்திச் செல்லும் என்று முற்போக்காளர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியத்தின் குணாம்சத்தை முற்போக்குப் பாத்திரம் நிரம்பியதாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் சிறிய அணிகள் போராடியுள்ளன. அதற்கான உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்நூலும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று, வெற்றிடத்தில் இருந்து பிற்போக்கான கூறுகளுடன் சுய விமர்சனமற்று நகர முற்படும் தமிழ்த்தேசிய அரசியலின் திசைவழியை முற்போக்கான வழியில் பயணிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுநா இதனை மீள்பிரசுரம் செய்கின்றது.

நடைமுறை அரசொன்றை நிறுவ முற்பட்ட காலப்பகுதியும், வெற்றிடத்தில் இருந்து அரசியலை மீளத் தொடங்கும் தற்போதைய காலப்பகுதியும் ஒன்றல்ல என்ற போதிலும் தற்போதைய சூழல் இவ்விடயத்தை வலியுறுத்துவதற்குப் பொருத்தமான காலம் என்றே கருதுகின்றோம். ஈழத்தமிழர்களில் 1/3 பகுதியினர் புலத்திலும் 2/3 பகுதியினர் தாயகத்திலும் நிலைகொண்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. புலம்பெயர் அமைப்புக்களினதும் நீண்ட தூரத் தேசியவாதத்தினதும் செல்வாக்கிற்கு உட்பட்டே தமிழரசியல் தன்னை நகர்த்த வேண்டியுள்ளது. நீண்ட தூரத்தேசியவாதத்திற்கு தமிழ்த்தேசியத்தின் குணாம்சத்தை முற்போக்கானதாக மாற்றியமைக்க வேண்டிய தேவையிருக்காது. மேற்கத்தைய அதிகாரக்களின் ஏவல்படையாக இருப்பது முற்போக்கான வரலாற்றுப் பாத்திரம் அல்ல. இவ்விடத்தில், தாயகத்தில் உள்ள அமைப்புக்களே தேசியத்தின் முற்போக்கான பாத்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதற்கான கடப்பாடும் தேவையும் அதிகமுள்ளவர்கள் அவர்களே. இவற்றைக் கவனத்தில் கொண்டே முற்போக்கு சக்திகள் செயற்பட வேண்டும்.

அவ்வகையில் இந்நூல், தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டளர்களிடையே குறைந்தபட்சம் உள்ளக உரையாடலைத் தொடக்கி வைக்குமென்பது எம்முடைய நம்பிக்கையாகும்.

எழுநா

மே 2013