அணிந்துரை : தமிழ்ப்பாஷை

தமிழின் நிலை தாழ்வுற்ற 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் அதற்குப்பின் வந்த 18 ஆம் நூற்றாண்டிலும் தனித்தமிழ்மொழி பொருட்டான பல்வேறு கருத்தியல்கள் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கிடையே ஏற்படலாயிற்று. 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் அயலவர்களான விஜயநகர நாயக்கர்கள் முதலாய தெலுங்கு மன்னர்களின் ஆதிக்கம் கோலோச்சிய வேளை தமிழ்மொழி காக்க சைவத்தின் பேரால் அரண்செய்யப்பட்ட ஆதீன மடங்களின் தமிழ் வளர்ச்சிக்குப் போக்குகளில் ஏற்பட்ட தோய்வும் போதாமையும் தமிழ்ச்சிந்தனையாளர்களிடையே ஆய்வு நிலையில் உயர்ச்சியுடைய தமிழியல் நிறுவனமயப்படுத்தலைத் தேடியதெனலாம். இளம்பூரனர், காக்கைப் பாடினியார், சிறுகாக்கைப் பாடினியார், அவிநயர், பல்காயனார் மயேச்சுவரர் கால்லாடனர், சேனாவரையர் தெய்வச்சிலையார், குனசாகரர் அமிர்தசாகரர் பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலாய பல பேராசிரியமாரின் சிந்தனைப்பள்ளிகளின் வழி பரந்து வளர்ந்த தமிழியல் ஆய்வுமரபு சிலதேக்க நிலைகளுக்குப்பின் காலனிய காலக் கல்விநிலையில் ஏற்பட்ட மாறுதலுக்கேற்ப தானும் ஒரு மறுகட்டமைவிற்கு உட்படுவதாயிற்று அதனையடியொட்டியே மாணவர்களால் தமிழ்ச்சங்கங்கள் மீளவும் உருவாக்கப்பட்டது. அவ்வகையிலேயே தமிழ் மொழியைக் கற்றறிதல்ப் பொருட்டும் உயர்மட்ட ஆராய்ச்சிநிலையில் தமிழ்மொழியை ஆய்தல் குறித்தும் தமிழ்ச்சங்கங்கள் தோன்றிவளரலாயின. அவ்வகையில் தமிழ்மொழியைக் கற்றல் தொடர்பாக மாணவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சங்கமாக அமைவது சென்னைத்துரைத்தன பாடசாலைத் தமிழ்ச்சங்கமாகும். இச்சங்கத்திலேயே சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் தமது சிறப்புமிக்க தமிழ்பாஷை எனும் சொற்பொழிவினை நிகழ்த்துவாராயினர். இச்சங்கம் தொடங்கிய 1892 ஆண்டிற்கு இராண்டுகளுகு முன்பு 1890 ஆம் ஆண்டு அன்றைய முதுபெரும் அறிஞர்மார் பலர் ஒன்றுகூடி ஆய்வுநிலையில் ஒரு தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தினர் என்பதினை ஏ.கே.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகள் எனும் நூலின் வழி பின்வருமாறு அறியலாம்.

தென்னாட்டுத் தமிழ்ச் சங்கம் :
மேற்குறித்த பேரால் தமிழ் பாஷாபிவிருத்தியை நாடிய சங்கமொன்று ஸ்தாபிப்பதற்காகச் சென்ற மாதம் பட்டணம் தொண்டை மண்டலம் ஸ்கூல் ஹாலில் கூடிய கூட்டத்தில் நியமிக்கப்பட்ட கமிட்டியார் நாளது மாதம் க-தேதி “காஸ்மாபொலிடன் க்ளப்” கட்டடத்தில் ஒரு கூட்டம் கூடினார்கள். அப்பொழுது ம-ள-ஸ்ரீ சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் தற்கால அக்கிராசனாதிபதியாக விருக்கப் பின்வரும் கனவான்கள் கமிட்டி மெம்பர்களாக ஆஜராயிருந்தார்கள்

ராவ்பகதூர் பூண்டி அரங்கரநாத முதலியார் அவர்கள் எம்.ஏ
ம-ள-ஸ்ரீ பி.விஜயரங்க முதலியார் அவர்கள்
சேஷகிரி சாஸ்திரியார் அவர்கள் எம்.ஏ
சி.டப்ள்யூ.தாமோதரம் பிள்ளை அவர்கள் பி.ஏ.பி.எல்
ராவ்பகதூர் சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் எம்.ஏ.பி.எல்
எம்.வீரராகவாச்சாரியார் அவர்கள் பி.ஏ
டி.பாலசுந்தர முதலியார் அவர்கள் பி.ஏ (தற்கால காரியதரிசி)

மேற்படி சங்கத்தின் நோக்கங்கள் பின்வருவனவாக இருக்கத் தக்கதென்று தீர்மானிக்கப்பட்டது. அவை:

(க) தமிழ்ப் புத்தகசாலையொன்று ஏற்படுத்தி அதற்கு இதுவரையில் தமிழில் அச்சாகியிருக்கும் கிரந்தங்களையெல்லாம் சேகரித்தல்
(உ) இதுவரையில் அச்சிடப்படாத கிரந்தங்களின் ஏட்டுப் பிரதிகளையும், அச்சிடப்பட்டுள்ள நல்லகிரந்தங்களை இனிமேல் எப்போதாவது இன்னும் நன்றாய்ச் சீர்திருத்துவதற்குபயோகமாகும்படி அவைகளின் ஏட்டுப் பிரதிகளையும் சேகரித்து வைத்தல்
(ங) தமிழில் சுயமாகவேணும், மொழிபெயர்ப்பினாலேனும் எளிய செந்தமிழ் நன்னடையில் ஜனங்களுக்கு அனுபவத்திலுபயோகப்படத் தக்கதாகலாவது சாஸ்திர சம்மந்தமானதாகவாவதுள்ள நூல்களை வசன ரூபமாகச் சித்தஞ்செய்து பிரசுரிக்க வேண்டிய ஏற்பாடுகள் செயல்
(நு) தமிழில் பிரபலமாயுள்ள எல்லா கிரந்தங்களினுடைய பேர்களும் கூடுமான வரையில் அவற்றிலடங்கிய விஷயங்களின் விவரமும், அவைகள் இன்னார் வசமிருக்கிறதென்கிற விவரமுமடங்கிய சரியான ஜாபிதாவொன்று தயார் செய்யல்
(ரு) தத்துஞான சம்பந்தமாகவாவது, வித்தியா சம்பந்தமாகவாவது அருமையாயுள்ள விஷயங்களைப் பற்றிச் சிறந்த பிரபந்தங்கள் எழுதி வாசிக்க அல்லது உபந்நியாசங்கள் செய்ய ஏற்பாடு செய்யல்
(சா) இதுவரையிலும் அச்சிடப்படாது இப்போது கையேட்டுப் பிரதிகளாயிருக்கும் நூல்களில் பிரசுரிக்கத் தகுந்ததைப் பார்த்தெடுத்து அவற்றைப் பிரசுரிக்க உதவி செய்யல்
ஆகிய இவைகளேயாம்

சுதேசமித்திரன் 10.05.1890 , பக்கம் – 146
இவ்வாறு திட்டமிட்டு நிறுவப்பட்ட இச்சங்கத்தினைக்குறித்த வேறு செய்திகள் கிட்டாதவாயினவாகின. இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பின் மதுரைமாநகரிலே வள்ளல் பாண்டித்துரைச்சாமித்தேவரால் நிறுவப் பெற்ற மதுரைத்தமிழ்ச்சங்கமே முழுமையான கட்டமைவுடன் தமிழ் ஆய்வுப்பணியாற்றியதாக அமைகிறது.

சென்னைத்துரைத்தனக் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் பரிதிமார் கலைஞரவர்கள் தமிழ் உயர்தனிச் செம்மொழி எனும் ஆய்வுக்கட்டுரையின் வழி தமிழின் வடமொழிக்கு முற்பட்ட தனித்தன்மைகளையும் அதன் செவ்வியல் சிறப்புகளையும் வெளிப்படுத்தினார். இக்கட்டுரை 1902 ஆம் ஆண்டு வெளிவந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் இதழில் வெளிவந்தது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அதே சென்னைத் துரைத்தனக் கல்லூரியின் (பிறசிடென்சி கல்லூரி) தமிழ்ச்சங்கத்தில் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்களால் தமிழ்பாஷையின் செம்மைகள் குறித்த இக்கட்டுரை மொழியப் பெற்றுள்ளது. தமிழியல் ஆய்வுகளிலும் பதிப்புகளிலும் அன்றைய ஈழத்து அறிஞர்கள் ஒரு படிமேலே நின்றனர் என்பதற்கு இவைபோன்ற பலகாட்டுகளைக் கூறலாம். தமிழியல் வரலாற்றாய்வுகளில் வி.கனகசபைப்பிள்ளையும், பதிப்பு முன்னோடி நிலையில் ஆறுமுகநாவலரும் அவருக்குப் பின் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களும் அரச கோசரி தொடக்கம் அ.குமாரசாமிப்புலவர் வரையிலான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளை வழங்கிய இலக்கிய இலக்கண செம்மல்கள் கோலோச்சிய காலகட்டம்.

1906 ஆம் ஆண்டு ரா.ராகவையங்கார் அவர்களால் எழுதப்பட்ட வணத்தமிழ் வீரமாதர் எனும் கட்டுரை செந்தமிழ் இதழில் வெளிவந்தது. புறநானூறு முதலாய சங்க இலக்கியங்கியப் பால்களின் தரவுகளைக் கொண்டு பண்டைத்தமிழ் மாதரின் வீரவுணர்வுகள் இக்கட்டுரையின் வழி வெளிப்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் இக்கட்டுரையை நோக்கும் ஆய்வாளர்களுக்கு இதுமிகவும் எளிய கட்டுரையாகத் தோன்றினும், சங்க இலக்கிய நூல்கள் வெளிவந்து கொண்டிருந்த அக்காலகட்டத்துடன் இவ்வாய்வுப் பணியினை வைத்து நோக்கும் போது அக்கட்டுரை அரியகட்டுரையாக அமைவதனை உணரலாம். அதற்கமைய அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கிய வரலாற்றினை முறைப்படுத்தியும் அதன் செவ்வியல் இலக்கிய வளத்தினை ஆராய்ந்தும். தமிழ் வளர்ச்சிக்கான தேவையினை ஆய்ந்து உணர்த்துவமான நோக்கில் இக்கட்டுரை இன்றியமையாததாக அமைகிறது.

தமிழ்வடமொழியில் இருந்து தோன்றியதென்றும் வடமொழிமரபினை முற்றாகத்தழுவிய தென்றும் கருத்துக்கள் உச்சத்தில் நின்ற காலகட்டத்தில் செந்தமிழில் வெளிவந்த ‘பானினிய வகுதீபிகை ‘எனும் நூலின் முகவுரையில் பேராசிரியர்.எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமிழின் செவிலித்தாய் ஆரியம் எனக்குறிப்பிட்டுச் செல்வார். இதற்கு ஆய்வியல் நிலையில் மறுதலை முடிவொன்றைக் கட்டுரையாக்கி விடையளிப்பார் ஈழத்து வவுனியாவின் இராசையனார். அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் வடமொழியில் இருந்து தமிழ் தோன்றிய கதைகள் ஒவ்வாதன என சான்றுவழி விளக்குவார். ஆயினும் வடமொழியால் தமிழ் திருத்தியது எனும் கருத்தையும் கூறிச்செல்வது அன்றைய தொடக்கநிலை ஆய்வுகளின வழியே.

உலகின் பண்டைய மொழிகளின் வரலாற்றுப் போக்கிலும் ஆத்தீகம், நாத்தீகம் எனும் இரு வகை நிலைகளைக் காணலாம் மொழிஆத்தீகம் என்பது மொழியைக் கடவுளோடும் சமயத்தோடும் பிணைத்து உச்ச சிறப்புநிலைக்குக் கொண்டு சென்று கடவுளின் மொழியாக்கி மற்றைய மொழிகளைத் தாழ்மைப்படுத்தி,மற்றைய மொழியியலாரின் சிந்தனை மரபையும் தாழ்மைப்படுத்தி, அச்சிந்தனை மரபை தமதாக்கிக் கொண்டு கடவுளின் மொழி எனும் ஆதிக்க மொழியின் மரபை உயர்த்திக் காட்டுவதாக அமைவதினைக் காணலாம்.

மொழி நாத்திகம் என்பது மொழியின் இயற்கை உற்பத்தியைக் குறிப்பதாகவும் பிறமொழிகளின் ஆதீக்கத்திலிருந்து விடுபடுதலை நோக்கியதாகவும் தங்களது மூலமொழிமரபினைப் பாதுகாத்து உயர்த்துவதாக அமையும். இந்நிலையில் இக்கட்டுரை மொழியின் இயற்கை உற்பத்தியைக் நோக்கிய சிந்தனைமரபைச் சார்ந்ததாக அமைகிறது. தமிழைச் சூழ்ந்த இருளாக தமிழின் தோற்றம் குறித்தும். தமிழ்ப்புலவோர் வரலாறுகள் குறித்தும் புனையப்பட்ட கதைகள் அமைவனவாகலாம். ஒருமொழியைச் சார்ந்து இத்தனைக்கட்டுக்கதைகள் எழுவது உலகில் வேறெந்த மொழியிலும் தமிழில் அமைந்தது போல் உண்டோ என்பதனை எண்ண ஐயமேமிகும். தமிழின் தொடக்க நாயகராக உருவான அகத்தியர் இலக்கணம் தொட்டு சோதிடம் வரையான அனைத்து தமிழியல் துறைக்கும் காலம் கடந்த படைப்பாளராவர். இதுபோலவே திருவள்ளுவர் கதைகள், ஒளவையார் கதைகள் (வடமொழிமரபில் உள்ள சிவசூத்திரங்களினும் பிரமசூத்திரங்களினும் உயரிதாக தமிழ் மரபில் அகத்தியர் கதைகள் கன்னம் கொண்டனவெனலாம்) தொல்காப்பியர் கதைகள், புகழேந்திப்புலவர் கதைகள், கம்பர், ஒட்டக்கூத்தர் கதைகள், காலமேகப்புலவர் கதைகள் என்பனவாக எல்லாக் காலத்திலும் இக்கதைகள் நீளும் நாட்டுப்புற இலக்கியங்களில் மாத்திரமல்லாமல் செவ்வியல் இலக்கிய நிலைகளிலும் இக்கதைகள் போற்றப்பட்டனவாகின்றன. தமிழ்ப்புலவோர் தொடர்பான கதைகள் பார்ப்பானன் தமிழ்ச்சூத்திரச்சியை மணந்து அதன் வழிப் பிறந்த பிள்ளையே தமிழறிவு பெற்றதாக தாழ்ச்சி செய்து சேரநாட்டில் மலையாளக் குடிமுறைகள் தோன்றியமையை நினைவூட்டுவதாக அமையும். இது ஒரு வகை மொழி வழிப்பட்ட இனவியல் ஆதிக்கத்தின் வெளிப்பாடே எனலாம். இக்கட்டுரை அளவையியல் முறையில் அறிவுசார் ஆய்வின் வழி சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் முறிக்கின்றார். ஆயினும் கடவுள் தமிழியற்றியதற்குச் சான்றாக இவ்வறிஞர் காட்டும் காஞ்சிப்புராண திருவிளையாடற்புராண மேற்கோள்கள். இவரது கருத்திற்கு ஏற்புடையனவாகும். ஏனெனில் மேற்கண்ட நூல்களைப் போன்றே தமிழ்விடுதூது, அருணைக்கலப்பகம் முதலாய நூல்களில் வரும் இறைவனின் மேலாய் தமிழை நிறுத்தும் கருத்துக்கள் வடமொழி ஆதிக்கமரபிற்கு எதிரான தமிழ் மரபின் எதிர்ப்பையே சமய நிலையில் காட்டுவதாக இன்றைய ஆய்வுகளின் வழி அமைக்கலாம். எனினும் அவரது காலகட்டத்தின் தேவையாக சில கருத்தியல் புறக்கணிப்புகள் அமைவது இயற்கையே.

திராவிட மொழிகளின் தோற்றம் குறித்து முரன்பாடுடைய கருத்தியல்கள் இன்றளவும் நிலவிக் கொண்டே இருக்கின்றன. பழந்தமிழில் இருந்தே படிப்படியாக கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் என்பனவாக திராவிட மொழிகள் பிரித்தன என்றும், இந்தியக்கண்டம் முழுவதும் வழங்கிய ஒரு மூலத்திராவிட மொழியல் இருந்து முதலில் தமிழும் அதன்பின் படிப்படியாக திராவிட மொழிகளும் பிரிந்ததாகவும். குமரிக்கண்டத்தில் இருந்து சிந்துவெளி வரை வழங்கிய தமிழ்மொழி வடபுலத்தே ஆரியர்களின் வருகைக்குப் பின் மகதி, அர்த்தகமதி முதலாய மொழிகளின் தாக்கத்தால் பலவாகத் திரிந்து மாறியதெனவுமான கருத்தியல்கள் பல உண்டு. திராவிடமொழிகள்சார் ஆய்வுலகும் இக்கருத்தியல்களின் அடிப்படையில் பிளவுரும் இதேநிலைப்பாடே ஈழத்து அறிஞர்களிடமும் நிலவியது. வி.கனகசபைப்பிள்ளை, ந.சி.கந்தையா இராசையனார் முதலானோர் பழந்தமிழே மூலமொழி எனும் கோட்பாட்டைக் கொண்டிருந்தாலும் இவ்விடயத்தில் சரவணமுத்துப்பிள்ளை மாறுப்பட்ட நிலையையே கொண்டார் எனலாம்.

கந்தபுராணம் ஈழமண்டலம் எங்கும் வாசிக்கப்படும் புகழைப்பெற்றதோடு அதற்கு ஈழத்து அறிஞர் பலரால் உரைகள் செய்யப்பட்டன. ஈழத்திலும் தமிழகத்திலும் உச்சம் பெற்ற முருக வழிபாட்டு மரபின் பதிவே கந்தபுராண பரவலாக்கம் எனினும் தமிழக மருங்கில் கம்பராமாயாணம் போல் இந்நூல் புகழ் பெறாமை ஈழத்தின் தொன்மைமிகு கந்த வழிபாட்டின் எச்சமரபாகலாம். அன்றேல் ஒருசிற்றூருக்கு 27 முருகன் கோயில்கள் தோற்றுவிக்கப்படுவது வேறெங்கும் கண்டிட்டில்லாததொன்றே. இச்சிறுநூலில் பல்வகைக் கருத்தியல்களைக் கூறிச்செல்லும் ஆசிரியர் மரபுவழிப்பட்ட தாயகங்களுக்கும் வாழ்வாதாரத் தாயகங்களுக்கும் எல்லை கூறுவதும் பெருஞ்சிறப்பே. இன்றைய தமிழியற் துறைசார் ஆய்வாளர்களுக்கு தங்கள் ஆய்வுமரபின் முன்னோடி ஆய்வான இவ்வாய்வுக் கட்டுரை பெரிதும் பயனுடையதாக அமையும்.

முனைவர் ஜெ.அரங்கராஜ்