சந்தியாவிற்கு..

எழுநா வெளியீடாக வெளியாக உள்ள சுனந்த தேசப்பிரியவின் பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல் – கட்டுரைத் தொகுப்பில் நன்றியுடன் பயன்படுத்தப்பட்ட இரு கவிதைகளில் ஒன்று.

எங்கோ தொலைவில் கேட்கும்
துப்பாக்கிச் சன்னம்,
திடீரென்று ஒலிக்கும் தொலைபேசி
வாசலில் கேட்கும் வாகனச்சத்தம்,
அச்சம் தரும் நிகழ்வுகளாக . .
வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும்
எழுதப்படும் ஒவ்வொரு வரியும்
கீறப்படும் ஒவ்வொரு சித்திரமும்
மௌனிக்கப்படும்
துர்ப்பாக்கிய தேசத்தின்
புதல்வி நீ
உனது கனவுகள் நொருக்கப்பட்டு
உனது சிறு குருவிக்கூட்டின் அழகு சிதைந்தது.
துயரும், கண்ணீரும் கலந்த
வெறுமையும் உன்னை நெருக்க,
அப்பாவைப் பற்றிக் கேட்கும்
உன் குழந்தைகளிற்கு பதில்களைத் தேடும்
உன் பிரயத்தனங்கள்.
உனது கணவனைத் தேடியும்
உன்னைப் போன்ற தோழிகளின்
சுமையையும் சுமந்து
நீ எடுக்கும் எத்தனங்கள்,
சீற்றத்துடனும் நம்பிக்கையுடனும்
எழுந்து வரும் அலையென
அதிகாரப் பாறையிற்பட்டு
நிசப்தமாய் மீளவும் தொடர்கின்றன.
உனது உறுதியும்,
நம்பிக்கையும் கோபமும்
நீதித் தாயின் கண்கட்டைக்
கிழித்தெறிந்து
அசமத்துவ தராசுகளை
உடைத்தெறியும்.
அந்தப் பொழுதில்
உதிக்கும் சூரியனின் கதிர்களின் வெப்பம்
விழிநீர் பொசுக்கி
உனது முகத்தில்
புன்னகையின் சித்திரங்களைக் கீறிச் செல்லும்.
-உமா
(துாமை இணையத்திலிருந்து.. )