மலையகத் தலைமைத்துவம் : ஒரு மீளாய்வு

(தொண்ணுாறுகளின் இறுதியில் இக்கட்டுரைகளின் தொகுப்பாக்க முயற்சி நடைபெற்ற போது இர. சிவலிங்கம் எழுதியிருந்த முன்னுரை. பின்னர் மலையகம் எழுகிறது நுால் வெளிவராத நிலையில் அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு வெளியிட்ட மலையக சிந்தனைகள் (2001) நுாலில் இடம்பெற்றது.)

இளைய மலையகத்துக்கு எழுபதுகளிலேயே எழுச்சி கீதம் பாடிய எனக்கு இலங்கையிலே இன்னும் பிரித்தானிய காலத்திலிருந்த வயோதிக தலைமையே மலையகத்தின் தலையெழுத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது, என்று எண்ணும் பொழுது வரலாறு எங்களை மறந்து விட்டதோ என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

மலையகத்தில் தலைமைத்துவத்தை, அதன் உடும்புப் பிடியை ஆழ்ந்து விமர்சனம் செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்த முயற்சியில் ஒரு ஆரம்ப நிலையாக சிறைக் கம்பிகளுக்குள் இருந்து கொண்டு தனது சிந்தனையை ஓட விட்டிருக்கிறார் முன்னணித் தோழர் வி. டி. தர்மலிங்கம் அவர்கள்.

நமது நாட்டின் அரசியல் தலைமைத்துவ வரலாற்றை உற்று நோக்கில் இலங்கையில் வாழுகின்ற அத்தனை சமுதாயங்களும் எத்தனையோ தலைமைகளை பரீட்சித்துப் பார்த்திருக்கின்றன. மலையக சமுதாயம் பரீட்சை எழுதப் பயப்படும் மாணவனைப் போல மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு ஏமாற்றுத் தலைமையின் கீழ் சிக்கி எதிர்காலத்தை இருள்மயமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இளமை, என்பது இலட்சியம் மிக்க சக்தி, மாற்றம் ஏற்படுத்தத் துடிக்கின்ற பெரும் சக்தி என்ற உண்மை மலையகத்துக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

நண்பர் தர்மலிங்கம் அவர்கள் தனது மாணவப் பருவத்தில் இருந்தே, தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தை நேசித்த ஒரு இளைஞன். “இளைஞன் குரல்” என்ற பத்திரிகை நடத்தியவர், நாடகங்களில் நடித்தவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கல்லெறிகளால் அர்ச்சனை செய்யப்பட்டவர், சதிகாரர்களின் சாணக்கியத்தால் சிறையில் சித்திரவதைப் படுத்தப்பட்டவர். ஆகவே, புடம் போட்டம் தங்கம் இன்னமும் பட்டறையில் தான் இருக்கிறது. விரைவில் மலையக சமுதாய மக்களுக்கு அழகு தரும் ஆபரணமாக உருப்பெறும் என்ற நம்பிக்கை உண்டு.

அவரது எழுத்தின் வேகம், சிந்தனைப் போக்கு, விமர்சனப் பார்வை என்பன இந்தக் கட்டுரைகளிலேயே தென்படுகிறது. அன்றாடம் பூத்துப், பூத்து மடியும் மலர்களைப் போல மலையகத்தில் தோன்றித் தோன்றி மறைந்த இளைஞர் முயற்சிகளின் வரலாற்றை விமர்சன ரீதியாக இக்கட்டுரைகளிலே விளக்கியிருக்கிறார்.

இளைய மலையகத்தின் வரலாறு, தொழிற் சங்க முழக்கங்களின் மத்தியிலே முனகல்களாக மாறிவிடாமல் எதிர்கால சந்ததிக்கு பயன்படும் வகையில் வரலாற்று ரீதியாக எழுதியுள்ளார்.

ஒரு முப்பது ஆண்டு கால முயற்சிகளை அதாரபூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஆரம்ப கால போராட்ட தலைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வு இல்லாதது வருந்தத்தக்கது. அவர் எழுதியுள்ள சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் பொழுது இது ஒரு பெரும் குறையாக எனக்குத் தென்படவில்லை. எனினும் சிந்திக்கத் தெரிந்த இளஞர்களை மேலும் சிந்திக்க வைக்கும் தூண்டுகோலாக இக்கட்டுரைகள் அமைந்திருப்பது மிகச் சீரிய சிறப்பாகும். அவருடைய எழுத்தோட்டம் அவரின் தமிழ் நடைக்கு சான்று பகர்கிறது. நம்மைச் சிந்தனைப் பூர்வமாக இழுத்துச் செல்லும் இனிய எளிய நடை, நண்பர் தர்மலிங்கம் ஒரு தமிழ் எழுத்தாளர் என்பதற்கு இது அச்சாரம்.

இந்தக் கட்டுரைகளிலே அவருடைய அனுபவங்களும், ஆர்வங்களும், விரக்திகளும், தளராத நம்பிக்கையும் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இதற்கு முன்னுரை எழுதுகின்ற பொழுது என்னை அறியாமலே மலையக தலைமைத்துவத்தை மீளாய்வு செய்கின்ற ஒரு உந்துதல் ஏற்படுகின்றது.

1960லிருந்து 1980 வரை ஒரு இருபது ஆண்டு காலம் மலையக இளைஞர்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து பதவிப் பருவம் வரை எடைபோட்டுப் பார்த்த அனுபவம் எனக்குண்டு. பாலையில் விதைத்த பயிர்கள் போல் நல்ல பள்ளிகளற்ற ஒரு சமுதாய அமைப்பில் மலையக இளைஞர்கள் தொடக்கக் கல்வியிலே துவண்டு போனார்கள். ஐந்தாம் வகுப்புக்கு மேல் எங்கு செல்வது என்று தெரியாமல் தோட்டத் தொழிலாளர்களாகவே செக்கு மாடுகள் போல பல தலைமுறைகள் சீரழிந்து விட்டனர். தோட்ட வாழ்வே ஒரு சிறை வாழ்வாக அமைந்து விட்டது. கல்வியின் தாக்கமோ அரசியல் கருத்துக்களின் ஊக்கமோ ஒரு புத்துலகப் போக்கின் நோக்கமோ அற்ற ஒரு சூழ்நிலையில் எத்தனை மலையக மலர்கள் கனியாகாமல் உதிர்ந்தனவோ அதற்குக் கணக்கேயில்லை.

இந்தக் கட்டுரைகளிலே ஒரு முல்லோயா கோவிந்தனையும் டெவன் சிவனு – லட்சுமணனையுமே போராட்டத் தியாகிகளாகத் தர்மலிங்கத்திற்குக் காட்ட முடிந்திருக்கிறது. இந்தத் தியாக இளைஞர்கள் கூட தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வந்தவர்கள். நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரைகளில் பட்டியலிட்டிருக்கும் இளைஞர் இயக்கங்கள் அத்தனையும் படித்த இளைஞர்களின் இயக்கங்கள். படித்த இளைஞர்கள் நல்ல கருத்துக்களைக் கூறினார்கள்.
புரட்சிகரமாகச் சிந்தித்தார்கள். ஆனால் அவர்கள் எந்த புரட்சிகரமான போராட்ட களத்தையும் சந்திக்க முடியவில்லை.

நமது குடியுரிமை பறிக்கப்பட்ட பொழுது, இலங்கை – இந்திய காங்கிரஸ் தலைவர்கள் போலிப் போராட்டம் நடத்தினார்கள் என்று கேலி செய்திருக்கிறார் தர்மலிங்கம். ஆனால் இலங்கையின் அத்தனை சமுதாயங்களிலிருந்தும் வீராவேசமான இளைஞர் போராட்டங்கள் வெடித்திருப்பதைச் சுட்டிக் காட்டும் தர்மலிங்கம் மலையகத்தில் அப்படியானதொரு உதாரணம் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அவருக்கும் இருக்குமென நம்புகிறேன்.

ஒரு முறை நான் ஹட்டனில் இருந்து மட்டக்களப்புக்கு புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக என்னோடு சமசமாஜக் கட்சிப் பிரமுகர்களில் ஒருவரான தோழர் எட்மன்ட் சமரக்கொடியும் பயணம் செய்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது “நீங்கள் மலையகத்துக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டார்” நான் ” படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயக்கம் அமைத்துக் கொண்டிருக்கிறேன்” எனச் சொன்னேன். அதற்கு அவர் “நீங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொழிலாள வர்க்க இளைஞர்களை ஒன்றிணைத்து இயக்கம் அமையுங்கள்” எனக் கூறினார். இந்தப் பணியை இன்று வரை எவரும் செய்யவில்லை என்ற எனது ஆழ்ந்த துயரம் இப்போதும் வெளிப்படுகிறது.

நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரைகளில் ஆரம்ப கால இந்திய சமுதாயத்தின் தலைமை பட்டணங்களில் படித்த வர்க்கத்தின் மத்தியில் இருந்து உருவானது. அது நகரங்களிலேயே பவனி வந்தது. அதைத் தோட்டங்களுக்கு திருப்பிய பெருமை அன்று இளைஞனாக இருந்த ஜனாப் ஏ. அசீஸ் அவர்களுக்கே சேரும்.

திரு. வள்ளியப்ப செட்டியாரும், திரு. பெரி. சுந்தரம் அவர்களும் அதிகார வர்க்கத்தோடு கைகுலுக்கி அவர்களை வலம் வருவதையே அரசியலாகக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னர் திரு. நடேச ஐயரும் சமசமாஜக் கட்சியின் புரட்சிகர தலைவர்களும் வளர்த்துவிட்ட ஒரு புரட்சிகரப் போக்கு வணிகப் பெருமக்களின் தலைமைப்பிடியில் சிக்கிய பொழுது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான போக்கு பிசுபிசுத்து விட்டது.

திரு. நேரு, திரு. காந்தி போன்றவர்களின் மாயையை மலையகத்தில் அவிழ்த்து விட்டார்கள். நம்முடைய இந்தியத்துவத்தையே வலியுறுத்தினார்களேயொழிய நம்முடைய வர்க்க சொரூபத்தைக் காட்ட மறந்தார்கள். கருத மறந்தார்கள். அதனால்தான் அவர்கள் அமைத்த இயக்கத்திற்கு இலங்கை – இந்திய காங்கிரஸ் எனப் பெயர் வைத்தார்கள்.

பிற்போக்கு சிங்களத் தலைவர்களான திரு. டி. எஸ். சேனாநாயக்கா போன்றவர்கள் இந்த இந்தியத்துவத்தை வைத்து நம்மை இழிவுபடுத்தினார்கள்.

சமசமாஜக் கட்சித் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கையின் முதலாளித்துவ சக்திகள், இலங்கை – இந்திய காங்கிரஸை நன்றாக வளர்த்து விட்டார்கள். இலங்கை இந்திய காங்கிரசுக்குத் தோட்டத் துரைமார்களே சந்தா சேர்த்தார்கள். அவர்களின் சதி எவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்பதற்கு திரு. தொண்டமானின் தலைமை தோன்றியதே மிக முக்கியமான சான்றாகும்.

வெவண்டன் தோட்ட முதலாளி மலையகத் தொழிலாளர்களின் மிகப் பெரிய தொழிற்சங்கத்திற்குத் தலைவரானார். அன்று புரட்சி தோற்றது. போலித்தனம் கோலோச்சியது. அந்தப் போலித்தனம் இன்னும் கோலோச்சுகிறது என நண்பர் தர்மலிங்கம் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய அரசி எலிசபெத்தின் கணவர் எடின்பரோ கோமகன் தனது மனைவியுடன் இலங்கைக்கு வருகை தந்தார். அவர் கேட்ட கேள்வியை மலையகத் தொழிலாளர்கள் இன்னும் கேட்கவில்லை. அவர் திரு. தொண்டமானைப் பார்த்து “ஒரு தோட்ட முதலாளியான நீங்கள், துரைமார் சங்கத்தில் உறுப்பினரான நீங்கள் எப்படி ஒரு பெரிய தொழிற்சங்கத்தின் தலைவனாக இருக்க முடிகிறது” என வியப்போடு கேட்டார். மலையகத் தொழிலாளர்களுக்கு இதைக் கேட்க முடியவில்லையே?

திரு. தொண்டமானின் தலைமைத்துவத்தின் தோற்றத்தையும், தொடர்ச்சியையும் இப்பொழுதாவது சற்று கூர்ந்து, ஆழ்ந்து விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

முதற்காரணம் திரு. தொண்டமானின் தலைமை உருவாவதற்கு ஏற்ப ஒரு அரசியல் சூழ்நிலை இலங்கையில் அப்போது ஏற்பட்டது. மிக வீராவேசமாக கனல் பறக்கும் சொற்பொழிவுகள் ஆற்றி, பிரித்தானிய அரசைக் கலக்கிய இளம் தலைவர் ஜனாப் ஏ. அசீஸ் ஆவார். இரண்டாம் யுத்த காலத்தில் பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பேசிய காரணத்தினால் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். அதிலிருந்து அவரது தலைமைத்துவம் சரிய ஆரம்பித்தது. மிதவாத அல்லது முதலாளித்துவப் போக்குடையவர்கள் இலங்கை – இந்திய காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்றினார்கள்.

சமசமாஜக் கட்சியின் தலைமை வெறுத்து ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் புரட்சிவாதிகள் என்பது தான்

திரு. நடேசய்யர் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ் அலையும், கங்காணிகளின் பழிவாங்கல்களும், அதன் பிறகு ஒரு பெரிய கங்காணியின் மகன் இன்னொரு பெரிய கங்காணியின் மகனுக்கு தலைமையைத் தாரை வார்த்துக் கொடுத்தார். பெரி. சுந்தரம் அவர்கள் திரு. தொண்டமானுக்குத் தலைமையை தாரை வார்த்துக் கொடுத்தார்.

காங்கிரஸ் கதராடை அணிந்த காரணத்தினாலும், அஸீஸ் பாகிஸ்தானை ஆதரித்த காரணத்தினாலும் திரு. தொண்டமானுடைய தலைமை தோற்றுவிட்டது.

ஒரு தோட்ட முதலாளி என்ற செல்வச் செருக்கும், காந்தி, நேரு புகழ்பாடும் ஒரு போலித்தனமும் அன்று இவரை எதிர்த்து நிற்க முடியாத நிலையும் இவரது தலைமையை உறுதிப்படுத்தியது. பல்வேறு வகையான சூழ்ச்சிகளினால், தந்திரங்களினால், தலைமையைத் தக்க வைத்துக் கொண்டவர் திரு. தொண்டமான் அவர்கள்.

ஒரு தலித் மகனான ராஜலிங்கம் அவர்கள் தலைவராக வந்த பொழுது, சதி செய்து அவருடைய தலைமைத்துவத்தை அகற்றி விட்டார். ஒரு தோட்ட இளைஞனின் தலைமை அன்று அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

அடுத்ததாக திரு. தொண்டமானுக்கு எதிராக தலைமைத்துவத்திற்கு போட்டியிட்டவர் திரு. சோமசுந்தரம். இவர் தொடர்ந்து காங்கிரசிலேயே அங்கம் வகிக்க முடியாத நிலைக்கு திரு. சோமசுந்தரம் அவர்கள் இலங்கையிலிருந்தே விரட்டப்பட்டார்.

அடுத்தபடியாக திரு. தொண்டமான் அவர்களின் தலைமைக்கு சவால் விட்டவர் வி. கே. வெள்ளையன் அவர்கள். அவரையும் சதி செய்து, காங்கிரசிலிருந்து வெளியேற்றினர்.

அவர் புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பித்தாலும், அவரின் அகால மரணத்தினால் திரு. தொண்டமான் அவர்களுக்குத் தலைமைத்துவப் போட்டி தளர்ந்துவிட்டது.

அதற்கு பின்னர் வந்த மலையகத்தின் சிறந்த கவிஞரான சி. வி. வேலுப்பிள்ளை அவர்களால் கூடத் தொண்டமானின் தலைமைத்துவத்தை தகர்க்க முடியவில்லை.

இன்னும் ஒரு முயற்சியை இடதுசாரிகள் மேற்கொண்டார்கள். தோழர்கள் எஸ். நடேசன், பி.பி. தேவராஜ், ரொசாரியோ பெர்னாண்டோ போன்றவர்கள் ஆஸீஸ் ஆரம்பித்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரசுக்குள் புகுந்து திரு. தொண்டமான் அவர்களின் தலைமையை எதிர்த்தார்கள். தோழர் என். சண்முகதாசன் அவர்கள் ஒரு மாபெரும் மார்ச்சீய சிந்தனாவாதி, தொழிலாளர் வர்க்கத்தைத் தட்டியெழுப்பி, திரு. தொண்டமான் அவர்களின் தலைமையை தகர்க்க முயற்சித்து அவரும் தோற்றார்.

என்னைப் பொறுத்தளவில் மலையக புத்தி ஜீவிகளை தொழிற்சங்கங்கள் மதிக்கவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. அதேவேளை புத்தி ஜீவிகளும் தொழிற்சங்கங்களை விமர்சிப்பதிலேயே அடங்கி விட்டனர். அவர்களது சிறு, சிறு இயக்க முயற்சிகள் நண்பர் தர்மலிங்கத்தின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும், தோட்டங்களிலேயே புரட்சிகரமாகச் சிந்திக்கின்ற கதை, கட்டுரை, கவிதை, நாடகங்கள் எழுதுகின்ற இளைஞர்களை உருவாக்கினார்கள். அதன் எதிரொலிகள் இ.தொ.கா.வின் கோட்டையிலேயே கேட்டது. காங்கிரஸ் அமைப்புக்குள்ளேயே திரு. தொண்டமானின் தலைமையை விமர்சிக்கிற இலம் புரட்சிவாதிகள் தோன்றினார்கள். காங்கிரஸ் தலைமைத்துவத்தை விமர்சனம் செய்தார்கள். அவர்களைப் பல்வேறு வகைகளில் காங்கிரஸ் அடக்கியது. சிலருக்கு பதவிகள் கொடுத்தார்கள். சொகுசான வாழ்வை அமைத்துக் கொடுத்தார்கள். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்களின் புரட்சிகர சிந்தனையையே மழுங்கடித்து தாசாணு தாசனாக்கினார்கள். இதற்குப் பணியாதவர்களை வன்முறைகள் மூலமும், சூழ்ச்சிகள் மூலமும் துன்புறுத்தி அவர்களின் துடிப்புகளை அடக்கினார்கள்.

இ.தொ.கா.வில் ஊழல் செய்பவர்களை உத்தியோகத்தில் அமர்த்தினார்கள். தங்கள் தலைமைத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தொழிற்சங்கத்தில் அடிமைகளையும், அடிவருடிகளையும் வளர்த்தெடுத்து ஊழல்கள் பெருகுவதை ஊக்குவித்தார்கள்.

அதே சமயத்தில் தங்களின் சுயநல பாதுகாப்பிற்காக எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, பண பலத்தினால் தங்களுடைய பாதுகாப்புகளை வளர்த்துக் கொண்டார்கள். நான் சிறிது காலத்திற்கு முன் “புதுக் கரடி” என்ற கட்டுரையில் எல்லா அரசியல் கூடாரங்களிலும் புகுந்து சர்க்கஸ் விளையாட்டுக் காட்டிய தலைமைத்துவம் திரு. தொண்டமானுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளேன். இந்த மாதிரியாக அரசியல் வித்தைகளில் நிகரற்ற திறமை வாய்ந்த வேறொரு தலைவனை இலங்கை வரலாறு கண்டதில்லை.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றிக் கொண்டதற்குக் காரணம் சமசமாஜக் கட்சி தலைவர்களில் ஒருவரான டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் தான். “நீங்கள் ஒரு தொழிற்சங்கமாக இருந்து கொண்டு, ஏன் இந்திய காங்கிரஸ் சங்கமாக பெயர் வைத்துள்ளீர்கள்” என்று விமர்சித்தார். அதற்கு ஈடு கொடுக்கும் முகமாகத்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றிக் கொண்டார்கள்.

இ.தொ.கா.வின் அரசியல் பிரவேசமும் தொண்டமானின் தலைமையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி (யூ. என். பி) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் திரு. தொண்டமான் அவர்களை மொத்த ஓட்டு தரகராகத்தான் உபயோகித்துக் கொண்டே வருகிறார்கள்.

திரு. ஜே.ஆர். ஜயவர்த்தனா அறிமுகப்படுத்திய விகிதாசார தேர்தல் முறையும், திரு. தொண்டமானின் அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவே உதவியது.

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரமும் மலையக மக்களின் புரட்சிகரமான சிந்தனையை மழுங்கடித்ததோடல்லாமல், மலையக மக்கள் மத்தியில் மொட்டவிழ்த்துக் கொண்டிருந்த புத்தி ஜீவி இயக்கங்களையும் சிதறடித்து சின்னாபின்னப்படுத்தினர் என்றாலும், புத்தி ஜீவிகள் பரப்பிய கருத்துகளும், அடிகோலிய நடவடிக்கைகளும் மலையக மக்களின் எதிர்கால மாற்றத்திற்கு வழி வகுத்துள்ளன.

தோட்டப் பாடசாலைகளை அரசுடமையாக்குவதற்கு வழிகோலியவர்கள் புத்தி ஜீவிகளே. இதன் தாக்கம் இன்று மலையக கல்வியில் எல்லா தொழிற்சங்கங்களையும் அக்கறை கொள்ள வைத்துள்ளது. மலையக சமுதாயத்தில் கல்வி வளர்ச்சி வளர்ந்து வருகின்ற ஆரம்ப அறிகுறிகளைக் காணலாம்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பரிணாம வளர்ச்சியும் இதன் வெளித் தோற்றமே. ஒரு புதிய தலைமுறை இப்போது தன்னுடைய சுய நம்பிக்கையின் அடிப்படையில் மலையகத்தின் எதிர்காலத்திற்கு கட்டியம் கூறுகிறது. இலங்கை மலையக அரசியல் வரலாற்றிலேயே திரு. வைத்தியலிங்கம், ஜனாப் அஸீஸ் ஆகியோருக்குப் பிறகு திரு. தொண்டமானின் ஆதரவு இல்லாமல் பிரதி அமைச்சராக பதவி பெற்றவர் திரு. பெ. சந்திரசேகரன் அவர்கள்.

சிறையிலிருந்தே வெற்றி பெற்று சுயநல கோரிக்கைகளை முன் வைக்காது திருமதி. சந்திரிகா குமாரணதுங்கா அவர்கள் அரசு அமைவதற்கு கை கொடுத்த முதல் மலையக இளைஞன் திரு. பெ. சந்திரசேகரன் அவர்கள். இதன் மூலம் புதிய அரசியலுக்கு, புதிய தலைமைத்துவத்திற்கு கட்டியம் கூறப்பட்டுள்ளது. ஒரு தலைமை சரிந்து இன்னொரு தலைமை உருவாகி வருகிறது.

மலையகத்தின் திறந்த வெளிச் சிறைச்சாலைகள் போன்ற தோட்டங்களில் கல்வியறிவின்றி நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதால் அரசியல் விழிப்புணர்ச்சியும், பங்கேற்புமின்றி சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினால் சிதறடிக்கப்பட்டு, தமிழின விடுதலைப் போராட்டத்தினால் தட்டுத் தடுமாறி செய்வதென்னவென்று தெரியாத ஒரு மயக்கத்தில் திரு. தொண்டமானின் இ. தொ.கா. விலே சரணாகதி அடைந்து இருந்த மலையக தொழிலாள வர்க்கம் தன்னார்வத்துடன் புதிய தலைமையை உருவாக்கும் கால கட்டத்தில் இருக்கின்றது.

அந்த சமுதாயத்திற்கே உரிய பல்வேறு பிரச்சினைகள், அவர்களை அரசியலில் பின் தங்கி விட்டாலும், புதிய உத்வேகத்துடன் வீறு கொண்டு எழுந்து இலங்கை வரலாற்றில் சரிநிகர் சமானம் எய்துவர் இந்நாட்டிலே என்ற நம்பிக்கைக்கு நண்பர் வி. டி. தர்மலுங்கத்தின் கட்டுரைகள் கட்டியம் கூறுபவனவாக அமைந்துள்ளன.

இர. சிவலிங்கம்