பதிப்புரை : யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்

யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்

யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்

தொண்ணூறுகளில், குறிப்பாக அம்பேத்கார் நூற்றாண்டுக்குப்பிறகு தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சி பெறுகின்றது. இந்த எழுச்சியானது தமிழகத்தின் சமூக, பண்பாட்டுச் சூழலில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், தலித் சமூகத்தின் அரசியல், வாழ்வியல், சமூகவியல் சார்ந்த பல்வேறு கற்கை நெறிகளும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணமாகவும் அமைந்தது. இதே காலப்பகுதியில் ஈழத்தில் தேசிய விடுதலைப் போராட்டம் அதன் முழுவீச்சில், ஆயுதப் போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தமும், மக்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலைகளும் மக்களை அப்போதைய முதன்மையான பிரச்சனையாக சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையே கருதவைத்தன. தவிர, இக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமற்ற தமிழர் அரசொன்றை நிர்வகித்து வந்தார்கள். புலிகளுடைய நிர்வாகத்தால் சாதியப் பாகுபாடு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப் பட்டிருந்ததனால் வெளிப்படையாகச் சாதிகளைக் குறிப்பிட்டுக் கதைப்பதும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட பிற கதையாடல்களும் மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால், பேசாமல் இருப்பதன் மூலம் சாதியத்தை ஒழித்துவிடலாம் என்பது மிகத் தவறான அணுகுமுறை என்பதையே வரலாற்றில் இருந்து நாம் அறிந்துகொள்ளக் கூடியதாயிருக்கின்றது. சாதி ஒழியவேண்டும் என்று நினைப்பவர்களும், அதற்காகச் செயற்படுபவர்களும் சாதியமைப்பு மற்றும் சாதியமைப்பின் காலத்துடனான மாற்றம் பற்றிய ஆழமான அறிவுடனும் புரிதலுடனும் இருந்தால் மாத்திரமே சாதி ஒழிப்புக் கைகூடும் என்பது நடைமுறையில் உணரப்பட்டுமிருக்கின்றது.

ஈழத்துச் சாதியமைப்புப் பற்றிய தரவுகளும், ஆய்வுகளும், புத்தகங்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பது ஈழத்துச் சாதியமைப்புப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கும், சாதி ஒழிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் மிகப் பெரிய தடையாக உள்ளது. குறிப்பாக தமிழில் ஈழத்துச் சாதியக்கட்டமைப்பு தொடர்பாக விரல் விட்டு எண்ணக் கூடிய நூல்களை மாத்திரமே காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக தமிழகச் சாதியமைப்பே ஈழத்திலும் இருப்பதாகக் கருதுவதோடு, ஈழத்துச் சாதியமைப்புகளில் காட்டப்படும் பாகுபாடு, ஆதிக்க சாதியினரின் சாதி வெறி போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது சர்வசாதாரணமாக தமிழகத்து நிகழ்வுகளை மேற்கோள் காட்டிப் பேசுவதையும் அவதானித்திருக்கின்றோம். நுணுக்கமான வேறுபாடுகளைத் தம்மிடத்தே கொண்டுள்ள ஈழத்துச் சாதியமைப்பையும், தமிழகத்துச் சாதியமைப்பையும் ஒரே விதமாக அணுகுவது சாதியம் தொடர்பான கற்கைகளையும், செயற்பாடுகளையும் ஒருபோதும் ஆரோக்கியமான பாதையில் நகர்த்தாது.

இந்தச் சூழ்நிலையில் அறிவுசார் செயற்பாடுகள் ஊடாக சாதியம் பற்றிய முறைமையான அறிவுசார் கற்கை நெறிகளை ஊக்குவிக்கவும், சாதியமைப்புகளைத் தெரிந்துகொள்வதிலும், சாதி ஒழிப்பிலும் அக்கறை உள்ளோரிடம் பரவலாக அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எழுநா பதிப்பகத்தின் நோக்கங்களில் ஒன்றின் முதன் முயற்சியாக “யாழ்ப்பாண தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்” என்ற இந்நூலை வெளியிடுகின்றோம். ஈழத்துச் சாதியமைப்பு என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே மட்டக்களப்புச் சாதியமைப்பிற்கும், யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பிற்கும் இடையே சமூகரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும் அனேக வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் கருத்திற் கொள்ளப்படவேண்டும் என்பதாலேயே “யாழ்ப்பாண தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்” என்கிற இந்நூலில் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பை மையமாகக் கொண்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் 1) யாழ்ப்பாணத்தில் சாதி: மரபும் மாற்றமும், 2) யாழ்ப்பாணச் சமூகத்தின் புலப்பெயர்வு, பணவருவாய் மற்றும் சாதி, வகுப்பு, மத அடையாளங்களின் இயங்குநிலைகள், 3) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும், 4) யாழ்ப்பாணத்தில் சாதியும் இனத்துவமும்: அடையாளக் கட்டுமானங்கள் என்கிற நான்கு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கட்டுரைகளூடாக போரும், அதன் நிமித்தம் நடந்த தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் சாதியக் கட்டுமானத்தில் என்னென்ன மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பது புள்ளிவிபரங்கள் ஊடாகவும், பரவாலாகச் சேர்க்கப்பட்ட வாய்மொழித்தரவுகளூடாகவும் தொகுக்கப்பட்டு அத்தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கருதுகோள்கள், அனுமானங்கள், முடிவுகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன.

கட்டுரையாசிரியர் பரம்சோதி தங்கேஸ் சாதியம் தொடர்பான கற்கைசார் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகத் தன்னை ஈடுபடுத்திவருபவர். தனது கலைமாமணிப் படிப்பிற்கான ஆய்வுக்கற்கையை யாழ்ப்பாணத்தில் சாதி மற்றும் இனத்துவ அடையாளங்களுக்கிடையிலான இடைவிளைவுகள் பற்றியதாக மேற்கொண்டவர். ஒரு சமூகவியலாளராக சாதியத்தின் கட்டுமானத்தை குறிப்பாக போர் மற்றும் போரின் விளைவுகளால் அதன் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாக்கங்களை கற்கைசார் ஒழுங்குடனும் தரவுகளுடனும் தனது எழுத்துக்களில் முன்வைத்துள்ளார். சாதியக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நுணுக்கமான மாற்றங்களையும் மாற்றங்களினூடு சாதியம் தன்னை எவ்வாறு நிலைநிறுத்தியுள்ளது என்பதையும் ஆராய்வது சாதிய விடுதலையை நோக்கமாகக் கொண்டு செயற்படும் ஒவ்வொருவருடைய மிக முக்கிய கடமையாகும். அவ்வகையில் இன்றைய யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பை விளங்கிக் கொள்ள உதவும் இவ் ஆய்வுப் பிரதி, சாதிய விடுதலையுடன் தொடர்புடைய செயற்பாட்டளர்களுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அதுமட்டுமல்லாது, வர்க்க விடுதலையை நோக்கமாகக் கொண்டு செயற்படுபவர்களுக்கு புதிய வர்க்க ஆய்வுக்கான ஆதாரமாகவும், தேசிய விடுதலையை முன்னகர்த்தும் செயற்பாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான தேசிய உள்ளடக்கத்தை உருவாக்கும் ஆதாரமாகவும் இருக்கும் என்று நம்பிக்கையுடன் வெளியிடுகின்றோம்.

எழுநா
டிசம்பர் 2012