முன்னுரை : யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்

இலங்கையில் அறுபது மற்றும் எழுபதுகளில் சாதி பற்றிய முக்கியமான ஆய்வுக்கற்கைகள் பல இடம்பெற்றன. குறிப்பாக மேற்கத்தேய மானிடவியலாளர்களால் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர்களின் சாதிமுறைமை பற்றிய மிக முக்கியமான பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. Nur Yalman (1967), E. R. Leach (1961), J. Jiggins (1979), Bryce Ryan (1993), Roberts Michael (1982, 1983), R. Jayaraman (1975), Michael Banks (1957, 1960), Kenneth David (1973a, 1973b, 1974a, 1974b), M. D Raghavan (1957, 1953, 1967), Pfaffenberger (1982, 1990) முதலிய ஆய்வாளர்களால் எழுதப்பட்ட கற்கைகளை இதற்கான எடுத்துக்காட்டாக குறிப்பிட முடியும்.

எண்பதுகளைத் தொடர்ந்து இலங்கையில் இனமுரண்பாடு வலுவடைந்து, இனத்துவப் பிரக்ஞை மேலோங்கத் தொடங்கியது. இப்பின்னணியில் சாதி என்ற சமூக முறைமையின் முக்கியத்துவம் குறைந்து, இனத்துவவாதம், தேசியவாதம், விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம் முதலிய எடுத்துரைப்புக்கள் சமூக விஞ்ஞானக் கற்கைகளில் முக்கிய ஆய்வுப் பொருள்களாக உருவாகின. மதம், திருமணம், அரசியல், புலப்பெயர்வு, சமூக அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன சமூக, பொருளாதார, கலாசார விடயங்களில் தாக்கம் செலுத்தி நிற்கும் சாதி என்ற சமூக முறைமை முக்கியமற்ற அல்லது தேவையற்றதொன்றாக மாறியது. இந்தக் காரணிகளால் சமூக அறிவியலில் சாதி பற்றிய தற்கால இயங்குநிலையினைப் புரிந்துகொள்வதற்கு ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நிவர்த்திசெய்யுமொரு முயற்சியாக இப்புத்தகத்தில் இடம்பெறும் ஆய்வுக் கட்டுரைகள் அமைகின்றன.

யாழ்ப்பாணச் சாதியமைப்பு தொடர்பாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் வெளிவந்த எழுத்துக்கள் பல்வேறு அறிவியல் தளங்களில் இடம்பெற்றமை கவனிக்கத்தக்கது. இவ்வெழுத்துக்களை “நிறுவனப்படுத்தப்பட்ட” சமூக ஆய்வுசார் கற்கைகளுடன் (மானிடவியல், சமூகவியல், அரசியல், கலாசாரக் கற்கைகள்) மட்டும் குறுக்கிவிடாமல் நோக்கும்போது, யாழ்ப்பாணச் சாதிபற்றிய எழுத்துக்கள் பின்வரும் நான்கு தளங்களில் இடம்பெறுவதாகக் கூறமுடியும்.

முதலாவதாக யாழ்ப்பாணத் தமிழர் தொடர்பாக வெளிவந்த நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் சாதிபற்றிய முக்கிய பல விடயங்கள் இடம்பெறுகின்றன. இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் சாதிக் கொடுமைகள் மற்றும் தீண்டாமை தொடர்பான கருத்துக்களை கூறுவதாக அமைகின்றன. கே. டானியல், டொமினிக் ஜீவா, தெணியான், ருத்திரமூர்த்தி போன்றோர்களின் எழுத்துக்களை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இவர்களது எழுத்துக்கள் பல கற்பனைப் கதாபாத்திரங்களுடன் பின்னப்பட்ட சமூகத்திலுள்ள நிஜவாழ்க்கைக்கான எடுத்துரைப்புகளாக உள்ளன.

இரண்டாவதாக வரலாற்றுரீதியில் இடம்பெற்ற சாதி அடக்குமுறைகள், அதற்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களை ஆவணப்படுத்தும் முகமாகத் தோற்றம்பெற்ற எழுத்துக்கள். இதற்கு உதாரணமாக வெகுஜனன், இராவணாவினால் (2007) எழுதப்பட்ட “இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்” என்ற நூலைக் கூறலாம். இந்நூல் வரலாற்றுரீதியில் இடம்பெற்ற சாதி ஒழிப்புப் போராட்டம் பற்றிய குறிப்புக்களை அதன் காலஎல்லையுடன் புரிந்துகொள்ள தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூலாகும்.
மூன்றாவதாக சாதி தொடர்பாக ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தும் முகமாகத் தோன்றிய எழுத்துக்களைக் குறிப்பிடலாம். இவ்வெழுத்தினை சுயசரிதை (Autobiogrpahy) என்று கூறலாம். ஆங்கிலக் கலாசாரத்தில் இத்தகைய எழுத்துக்கள் பிரசித்திபெற்றவையாக உள்ளபோதும் தமிழில் மிக அரிதாகவேயிருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் யோகரட்ணம் (2011) என்பவரால் எழுதப்பட்ட “தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்” என்ற நூலினை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட முடியும்.

நான்காவதாக நிறுவனப்படுத்தப்பட்ட கல்விசார் துறைகளான மானிடவியல், சமூகவியல், அரசியல் மற்றும் கலாசாரக் கற்கைகளின் துறைகளைச் சேர்ந்த புலமையாளர்களால் எழுதப்பட்ட ஆய்வுக் கற்கைகள் உள்ளன. அதிலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்புப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியல் கற்கைகள் ஆங்கில மொழியிலேயே அதிகமான உள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக மேற்கத்தேய புலமையாளர்களான David Kenneth, Michael Banks, Bryan Pfaffenberger, M. D. Raghavan போன்றோர்களது ஆய்வுக் கற்கைகளைக் குறிப்பிட முடியும். இவ்விடத்தில் கா. சிவத்தம்பி, க. அருமைநாயகம், சைமன் காசிச் செட்டி, “கண்டி” பேரின்பநாயகம் போன்றோர்களது பங்களிப்பும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதே. பெரும்பாலான நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியல்சார் கற்கைகள் சமூகத்தினை ஒழுங்குபடுத்துமொரு முறைமையாக சாதியினைக் கற்பதற்கு (Caste as a Social and Functional System) முயற்சிக்கின்றன. அந்தவகையில் இக்கற்கைகள் தொழிற்பாட்டுவாத அணுகுமுறையினை (Funtional Perspective) கொண்டுள்ளன எனலாம். மேலும் இவ்வறிவியல் கற்கைகள் சாதி என்ற சமூக முறைமையில் நிலவும் உள்வாரியான பாகுபாட்டு வடிவங்களை ஆராய்வதில் அதிகம் அக்கறை செலுத்துவதில்ல்லை என்ற விமர்சனமும் உண்டு. அவ்விமர்சனத்தின் பின்னணியில் தோன்றியதாக “Casteless or Casteblind? Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka (2009)” என்ற ஆய்வு நூல் உள்ளது.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு காலகட்டத்தில் ஆய்ந்து எழுதப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்களின் சாதி, இனத்துவம், வகுப்பு மற்றும் மத அடையாளங்களின் இயங்குநிலை தொடர்பான நான்கு கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் வெவ்வேறு நோக்கங்களுக்காக குறிப்பாக சாதி என்ற சமூக முறைமையினை பற்றி எழுதப்பட்டமையால் சிலசமயம் கூறியது கூறல் இடம்பெறுகின்றது. எனினும், கட்டுரைகளின் ஓட்டம், ஒழுங்கமைப்புக் கருதி அவை அவ்வாறே விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சாதியமைப்பின் தற்காலப்போக்கினை பகுப்பாய்வு செய்வதில் இப்புத்தகத்தின் தேவை சமூக அறிவியலில் அவசியமானதொன்று என்பது எனது வலுவான நம்பிக்கையாகும்.

இப்புத்தகத்தினை வெளியிடுவதற்கு முன்வந்த எழுநா நிறுவனத்திற்கு எனது நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.

பரம்சோதி தங்கேஸ்
London, December 2012