பதிப்புரை : கிளிநொச்சி ! போர் தின்ற நகரம்

கிளிநொச்சி : போர் தின்ற நகரம்

கிளிநொச்சி : போர் தின்ற நகரம்

கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்ட தீபச்செல்வன், ஒரு மாணவர் இயக்கச் செயற்பாட்டாளரும் கூட. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்கும் முக்கியமானது.

இறுதி யுத்ததின் பாதிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளித்தெரியும் என எதிர்பார்த்த அரசு, கண்ணில் நெய்யை ஊற்றிக் கொண்டு பல்கலைக்கழகத்தையும் மாணவர்களையும் அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளராக கடமையாற்றிய தீபச்செல்வன், போர்க் காலப்பகுதியிலும் போருக்குப் பின்பான காலப்பகுதியிலும் யுத்தப் பிரதேசத்துச் செய்திகளை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றியவர். யுத்தத்தின் இறுதி நாட்களில் மிக மோசமான ஊடக அடக்குமுறை நிலவியபோது யுத்தப் பிரதேசத்துச் செய்திகளை அவர் துணிச்சலாக வெளியே கொண்டுவந்தார்.

வெளிநாட்டுச் செய்தியாளர்களை அனுமதிக்காமலும் உள்நாட்டுச் செய்தியாளர்களை பாரபட்சம் பார்க்காமல் கொன்றும் சிறையிலடைத்தும் வந்த வேளையில், முக்கியமாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான வன்னியையும் அதன் மக்களையும் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

இவ்வகையில், தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பான அழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ் செய்திகள் (www.globaltamilnews.net) இணையத்தில் தீபச்செல்வன் எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்பட்டு இப்பொழுது நுாலாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எழுத்துக்களை தனித்தனிக் கட்டுரைகளாக வாசிக்கும் போது அவை வெறும் செய்திகளாக எஞ்சிப் போகக்கூடிய அபாயம் இருக்கிறது. மாறாக, ஒட்டுமொத்தமாகத் தொகுக்கப்படும் போது, பின்யுத்த காலத்தின் முக்கிய ஆவணம் என்ற நிலையை அவ் எழுத்துக்கள் அடைவதோடு, அழிந்து போன நகரத்தையும் வாழ்வழிக்கப்பட்டு எஞ்சியுள்ள நகரத்தின் மனிதர்களையும், அவர்களது வாழ்வையும் கண்முன்னே நிறுத்துக்கின்றது.

இத்தொகுப்பில், யுத்தம் விழுங்கிய மனிதர்களுடைய இன்றைய அவல வாழ்வைப் பதிவு செய்திருக்கும் அதேநேரத்தில், யுத்ததிற்கு முன்பான அவர்களுடைய செழுமையான வாழ்வும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் கிளிநொச்சியின் அழிவையும், அழிவின் கோரத்தையும், மனிதர்களின் துயரத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.

போரிலக்கியங்களும், போர்க்கால எழுத்துக்களும் அவதானிக்கப்படும் அளவிற்கு போருக்குப் பின்பான படைப்புக்கள் கவனிக்கப்படுவதில்லை. போரில் சின்னாபின்னமாகிய நிலங்களையும் மக்களையும் போல, இலக்கியங்களும் படைப்புக்களும் கூட அனாதரவாகக் கைவிடப்பட்டுவிடுகின்றன. போருக்குப் பின்பான சமூகம் முளைவிட்டு உயிரோட்டமான இயல்புநிலையை அடைவதற்கு, போருக்குப் பின்பான படைப்புக்கள் அரசியல் வேறுபாடற்றுக் கவனிக்கப்பட வேண்டியது அவசியமானது. வலியில் இருந்து எழும் குரல்களுக்குச் சிலவேளைகளில் அரசியல் இல்லாமல் இருக்கலாம். அவற்றை வெறுமனே அரசியலற்ற முனகல்கள் என்று புறமொதுக்கிவிட முடியாது. அது வெறும் முனகல் சத்தமல்ல. முளைவெடிக்கும் ஓசை என்ற புரிதல் அவசியமானது.

தீபச்செல்வனின் இப்பதிவுகள் வெறுமனே மக்களின் துயரடர்ந்த வாழ்வை மாத்திரம் பேசவில்லை. அத்துயரத்திற்கான காரணத்தையும் அரசியலையும் தனக்குள் கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி நகரின் மக்களுக்கு, சொந்தமாக இப்பொழுது எதுவுமேயில்லை என்ற உணர்வை விதைக்கின்றது. தமது கட்டமைப்புக்களையும் சந்தோசமான வாழ்வையும் தமக்கான அரசியலையும் இழந்து சொந்த நிலைத்தில் புலம்பெயர் வாழ்வொன்றுக்காகச் சபிக்கப்பட்ட நிலையை எடுத்தியம்புகின்றது.

தீபச்செல்வனுடைய இத்தொகுப்பு கிளிநொச்சி மக்கள் எவ்வாறான வாழ்வில் இருந்து மீண்டு வந்தார்கள் என்பதை எதிர்காலத்திற்குக் கூறப்போகும் ஓர் ஆவணமாகும்.

எழுநா
டிசம்பர் 2012