பதிப்புரை : படுவான்கரை

படுவான்கரை

படுவான்கரை

உலகில் பெரும் போர் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் போருக்குப் பின்னான காலங்கள் ஒத்த அரசியல் சமூகத் தன்மைகளையே கொண்டிருந்தன. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடக் குழப்பங்களும், தெளிவற்ற பாதையும் ஏற்பட்டு விட சமூக மட்டத்திலோ பெரும் மனிதத் துயர் மிகுந்ததாக அக்காலங்கள் விரிகின்றன. காணாமல்போய்விட்ட அல்லது மாண்டுபோன உறவுகள், சிதைந்த குடும்பங்கள், தனித்து விடப்பட்ட குழந்தைகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வாழ்வாதாரங்களின் அழிவு, வறுமை, சமூகச் சிதைவுகள், குற்றச்செயல்கள் என்பன சமூக மட்டத்தில் உருவாகின்றன. துரதிஷ்டவசமாக இலங்கையில் 2009 மே போர் அழிவிற்குப் பின்னரும் இவ்வாறானதொரு நிலைமை உருவானது.

பொறுப்பு வாய்ந்த அதிகாரமொன்றினால் இந்நிலைமையை கரிசனையோடு அணுகித் தணிக்க முடியும். சரியான திட்டமிடலும், நேர்மையான நோக்குமிருந்தால் இச் சமூகச் சிதைவை பொருளாதார வழியிலும், உளவள ரீதியிலும் இலங்கை அரசாங்கத்தினால் அணுகியிருக்க முடியும். குறைந்தபட்சம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான பொறிமுறைகளையாவது ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இவ்விடயத்தில் அரசு அசமந்தப் போக்கினையே தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழ் மக்களுக்கு அணுக்கமாக அதன் செயற்பாடுகள் ஒருபோதும் அமையப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. வெல்லப்பட்ட சமூகங்களின் கலாசார பொருளாதார சிதைவுகளை ஊக்குவிப்பதுவும், துரிதப்படுத்துவதும் அதிகாரங்கள் பரவலாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே.

இந்நிலையில் நுாலின் ஆசிரியர் சஞ்சயன் , மட்டக்களப்பின் படுவான்கரைப் பகுதிகளுக்கு பயணம் செய்கிறார். போரில் எஞ்சிய மனிதர்களை சந்திக்கிறார். அந்த மனிதர்களின் அனுபவங்களையும், இன்றைய வாழ்வின் துயரங்களையும் பதிவு செய்கிறார். அவற்றை வெளிக்கொணர்கிறார். கூடவே அவரிடமிருந்து கேள்விகளும் எழுகின்றன. அரசினால் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தினைத் தாங்கிக்கொள்ள வேண்டியது யாருடைய பொறுப்பு என்று அவர் கேட்கிறார். இலங்கைக்கு வெளியேயான நாடுகளில் ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சி பெற்று வாழும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் போரில் சிதைந்த தமது சொந்தங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது தார்மீக கடமை என்கிறார். தவிரவும், போரின் அழிவுக்கு முன்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வலுவான கட்டமைப்புக்களோடு விளங்கிய அமைப்புக்களிடத்திலும் கேள்விகளை முன்வைக்கிறார். போருக்கு உதவியளித்த அமைப்புக்களும் மக்களும் தம் சொந்தங்களைக் கைவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டுகின்றார். சிதைந்தவற்றை மீளக் கட்டியமைக்க வேண்டிய பெரும் பொறுப்புடையவர்கள் புலம்பெயர் சமூகத்தவர்களே என்பதை எடுத்தியம்புகின்றார். இவ்வாறான துயரம் நிறைந்த சம்பவங்களும் கதைகளும் அவர்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் என்ற நம்பிக்கையுடன் அவற்றை வெளிக்கொணர்கின்றார்.

போரின் காலத்தில் அதன் வெற்றிக்கதைகள் பெரும்பாலும், வடபகுதியை மையமுற்றே வெளியாகின. அவ்வாறே போரின் முடிவிலும் அதன் துயர நாட்களின் கதைகள் பெரும்பாலும், வன்னியை மையமுற்றே வெளிக் கொணரப்படுகின்றன. படுவான்கரை என்ற இந்நுால், போரின் சகல அடிகளையும் மௌனமாகத்தாங்கி, சிதைந்தும் அழிவுற்றும் போய், வெளிச்சொல்ல வழியேதும் அற்று தமக்குள் அழுந்திக் கொண்டிருந்த ஒரு மக்கட் கூட்டத்தின், மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தின் கதைகளை வெளிக்கொணர்கிறது. இவ்வாறான பதிவுகள், அரசால் கைவிடப்பட்ட சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொறியை ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக்கையில் எழுநா இப்பிரதியை வெளியிடுகின்றது. அதுவும், குறிப்பாக வன்னிக்கு வெளியான சமூகத்தின் துயரத்தை வெளிக்கொணர்வது மிக அவசியமானதென எழுநா கருதுகின்றது