முன்னுரை : கிளிநொச்சி ! போர் தின்ற நகரம்

கிளிநொச்சியின் கதை
போர் கிளிநொச்சி மண்ணில் பல கதைகளை உருவாக்கியிருக்கிறது. போர் அழிவும் இடப்பெயர்வும் துயரங்களும் அதற்குள்ளான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இவை என்னுடைய கதைகளல்ல. யுத்தம் தந்த வாழ்வில் நான் சந்தித்த மனிதர்களின் கதைகள்.நான் பிறந்து வளர்ந்த கிளிநொச்சியின் கதை. கிளிநொச்சி நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களின் கதைகள். அந்தக் கிராமத்தின் மனிதர்களின் கதைகள்.யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வாழும் நம்பிக்கையுடன் நிலத்திற்குத் திரும்பிய எனது சனங்களை தேடிச் சென்ற அனுவமும் நினைவுகளுமே இந்தக் கதைகள். நான் தேடிச்சென்ற என்னுடைய சனங்களுக்குப் பின்னால் இப்படி குருதியொழுகும் கதைகள் பல இருந்தன.

இவை புனைவற்றவை. இங்கு வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்துமே உண்மையானவை. இக் கதைகள் என்னில் ஏற்கடுத்திய பாதிப்புக்களை, கவிதைகளுக்குள்ளும் கட்டுரைகளுக்குள்ளும் அடக்க முடியாதிருந்த பொழுது அவற்றை அப்படி அப்படியே எழுதினேன்.

கிளிநொச்சி நான் மிகவும் நேசிக்கும் நகரம். எனது சொந்த நகரம். சிறு வயதுகளில் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் பொழுது மீண்டும் இந்த நகரத்திற்கு திரும்புவோமா?என்று ஏங்கியிருக்கிறேன். மேலும் மேலும் எங்கள் வாழ்வில் துயரம் குடிகொள்ளும் விதமாக இடப்பெயர்வுகளை தொடர்ந்து சந்தித்தோம். கட்டிய வீடுகளும் வாழ்க்கையும் மீண்டும் மீண்டும் உடைந்தன. இரண்டாயிரமாம் ஆண்டுகளில், போருக்குப் பின்னர் கிளிநொச்சி மீள உயிர்த்தெழுகையில் எனக்குள் இருந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மீண்ட நகரத்தை பார்த்து ஆர்ப்பரித்திருக்கின்றேன். வாழ்வு மீதான நம்பிக்கையை அப்போது நகரம் தந்தது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் எங்கள் நகரம் உருக் குலைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரும் போரால் ஒட்டுமொத்த வன்னி நிலமும் சிதைந்து போனது. மீண்டெழப்போராடும் ஈழத் தமிழ் இனத்தில் அதிகம் யுத்தத்தை சந்தித்த கிளிநொச்சி நகரத்தினதும் அந்த நகரத்தின் சனங்களினதும் கிளிநொச்சிப் பிரதேச மக்களினதும் கதைகள் ஈழப்போராட்டத்தில் மிக முக்கியமானவை.இதுபோலவே ஈழத்தின் ஒவ்வொரு நகரம் பற்றிய கதைகளும் பதிவு செய்யப்படவேண்டும். ஒவ்வொரு நகரைப் பற்றியும் அங்கு வாழ்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் ஈழ மக்களின் வாழ்க்கை பற்றிய கனவுகளும் நினைவுகளும் காலங்களும் பதிவாகும். நெருக்கடியான காலத்தில் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கும் மக்களின் கதைகளை பதிவு செய்வதன் மூலம் வரலாற்றில் உண்மையை சேர்க்க முடியும்.

தீபச்செல்வன்,
கிளிநொச்சி.
24.10.2012