நிலத்தினில் புதையும் எழுத்துக்கள்

(கிளிநொச்சி போர் தின்ற நகரம் நூலுக்கு நடராஜா குருபரன் வழங்கிய அணிந்துரை)
இங்கு பெருநிலம் என்பது விடுதலைப் புலிகளின் கனவு நகரமான கிளிநொச்சி. கிளிநொச்சி நகரமும் அதனைச் சுற்றிலுமிருக்கிற சிற்றூர்களும், அதனது மனிதர்களும் 2009 மே மாத பேரழிவின் பின்பாக என்ன நிலைமையில் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனைப் பெருநிலத்தின் கதைகளின் வழி சொல்கிறார் தீபச்செல்வன். காணாமல் போனவர்கள், அகாலத்தில் மறைந்தவர்கள், சித்திரவதையின் பின் மரணமுற்றவர்கள், அவயவங்களை இழந்தவர்கள் என முற்றிலும் சிதைந்த நகரமாக கிளிநொச்சி இந்தக்கதைகள் வழி நமக்கு முன்னால் விரிகிறது.

இத்தகைய கதைகளை வடஅயர்லாந்து, தென் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் இலக்கியங்களில், திரைப்படங்களில்தான் நாம் பார்த்து வந்திருக்கிறோம். இந்நாள் வரை தூரத்து இலக்கியமாக இவ்வகைப் பிரதிகள் நம்முன் கிடந்தன.

இப்போது தீபச்செல்வன் தனது நகரில் உறவுகளையும் நட்புக்களையும் தேடியலைகிறார். வீடுதோறும் எவரேனும் காணாமல் போயிருக்கிறார்கள். தாய்மார் தமது பிள்ளைகளை த் தேடியலைகிறார்கள். மனைவியர் துணைவருக்காக காத்திருக்கின்றார்கள். குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கிறார்கள். கிளிநொச்சி நகரினுள்ளும் புறநகரிலும் இவர்கள் அனைவரையும் தேடித் திரிந்த தீபச் செல்வனின் அனுபவங்கள்தான் இந்தப் பெருநிலத்தின் கதைகள்.

இது ஒரு துயரப் பயணம். நெடிய பயணம். வலி சுமந்த பயணம். வறட்சியும் அழிவும் சாவும் கண்முன் விரியும் பயணம்.

0 0 0

பாண்டியன் சுவையகத்தின் வாசற் பகுதி ஒரு பூங்காவைப்போல குளிர்ந்த நிழலுடன் முன்னர் இருந்தது. அருகாகவே சந்திரன் பூங்காவும் இருந்தது. அந்தப் பூங்காவில் சிறிய வயதில் விளையாடிய நினைவுகள் வந்தன. இப்பொழுது அந்தப் பூங்கா அழிக்கப்பட்டிருக்கிறது. அங்கே இராணுவத்தினர் நினைவுச் சின்னமொன்றை நிறுவத் தொடங்கியிருந்தனர். ஒரு தடித்த சுவர் தமிழீழமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அச்சுவரினைத் துப்பாக்கி ரவையொன்று உடைத்துத் தகர்க்கிறது. அப்பொழுது நீலோற்ப மலரொன்று வெடித்து மலர்கிறது.

0 0 0

பாரதி உணவகம் இருந்ததற்கான தடயங்களை நான் தேடிக்கொண்டே வந்தேன். லோன்றிக்கார அய்யாவின் கடை, ராயு அண்ணனின் அகநிலவு தேனீர்க்கடை, எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருந்தேன். அவை சில துண்டுச் சுவர்களோடு மிச்சமிருந்தன. அவற்றில் கிளிநொச்சியின் வாழ்க்கைச் சுவடுகள் பதிந்திருந்தன.

கஜானந்தின் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். கஜானந்தின் இரண்டு தங்கைகளும் சிறிய கூடாரத்திற்குள் தம்மை அடைத்திருந்தார்கள்.
“தங்கைச்சி தீபண்ணா வாரார்டி…” என்றபடி அவர்கள் என்னை நோக்கி வந்தார்கள். கஜானந் இல்லாத காணிக்குள் காலடி எடுத்து வைக்கும்போது துயரமாக இருக்கிறது.

0 0 0

துயிலுமில்ல வீதியில் களத்தில் மரணித்த போராளிகளின் உடல்கள் சுமந்து செல்லப்படுவதை எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறோம். பழகிய பல நண்பர்கள் வீரச்சாவு அடைந்து பெட்டிகளில் வருவார்கள். சமயங்களில் ஒருநாளிலேயே நாலைந்து உடல்களும் கொண்டு வரப்படும். கனவுகளைச் சுமந்து மரணித்த வீரர்கள் உறங்கும் நிலம், முறிப்பு என்ற இடத்தில்தான் இருந்தது.

அங்கு சென்றோம். மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசரால் அழிக்கப்பட்டு சாய்க்கப்பட்டிருந்தது. உடைக்கப்பட்ட கல்லறைகளின் மேலாக எருக்கம் மரங்கள் வளர்ந்திருக்கின்றன.

0 0 0

ஸ்கந்தபுரம் முழுமையாக அழிந்துவிட்டது. முன்பொரு காலத்தில் எப்படி இருந்த இடம். அங்கிருந்த கடைகள் வீடுகள் எல்லாம் அழிந்து விட்டன. மிதி வெடி அகற்றும் பணியாளர்களே ஆங்காங்கே தெரிகின்றார்கள். அவர்களில் ஒருவரை எங்கேயோ பார்த்தது போல தோன்றியது. சசி அக்கா. சசி அக்கா தேவையான பாதுகாப்புகள் இன்றி, சாதாரணமாக மிதி வெடி அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபட்டிருந்தார்.

“சசி அக்கா” என்று அழைத்தவாறு, அருகே நகர்ந்தபோது “அண்ணை தள்ளி நில்லுங்கோ.… மிதிவெடி அகற்றுற இடத்திற்கு வரக்கூடாது. சில வெடிப்புகள் ஏற்படலாம்” என்று பணியாளர் ஒருவர் தடுத்தார். சசி அக்கா என்னைக் கண்டு கொண்டார்.

“தள்ளி அங்கால நில்லுங்கோ, நான் வாறன்…”

சசி அக்கா, கிழங்குகளைப் பிடுங்க நிலத்தில் துார் வாருவது போல முழந்தாளில் இருந்து மிதிவெடிகளை வெளியே எடுத்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த பலரும் அப்படித்தான் மிதிவெடிகளை அகற்றிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பெண்கள்.

0 0 0

தமிழ்ச் சூழலுக்கு இந்த பேரழிவும், அதனைச் சொல்லும் மொழியும், மொழி முன்வைக்கும் அனுபவமும், முற்றிலும் வேறானது. நம்பிக்கை கொள்ள இந்தக் கதைகளில் ஒன்றும் இல்லை. வசந்தாக்கா, சசிஅக்கா, கோபி, அப்பண்ணா, சுகி அக்கா, குழந்தை டெனிஷா என கால்கள், கைகள், கண்கள், செவிகள், உயிர் என அனைத்தையும் பறிகொடுத்த மாந்தர்களின் கதைகளை உன்மத்த நிலையிலான சொற்களில் தீபச்செல்வன் சொல்லிக்கொண்டு போகிறார். கால்கள் அற்றவர்களின் நிலம் என்று கிளிநொச்சியை அழைக்கத் தோன்றுகிறது என்று தீபச்செல்வன் குறிப்பிடுகிறபோது மொழி தாங்கொணாது நிலத்தினுள் புதைந்து கொள்கிறது.

தீபச்செல்வனின் வார்த்தைகளில் கோபம் இல்லை. சீற்றம் இல்லை. அவரது சொற்கள் எழுப்பும் மௌனச்சுவர்களால் அடைபட்ட நகரின் சிதையின் மீதான சுடுசாம்பலில் மறைந்து நிற்கிறது கிளிநொச்சி பெருநிலம்.

நடராஜா குருபரன்
15 டிசம்பர் 2011