முன்னுரை : தலைப்பற்ற தாய்நிலம்

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு சந்தர்ப்பமாகும். தமிழ் மக்கள் குறித்து சிங்களத்தில் கவிதையெழுதும் மனித னொருவனின் புத்தகம்.

வரலாறு நீளவும் தமிழ்ச் சமூகத்துக்குச் சிங்களவர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் இறுதியில் நாற்பத்தொன்பதாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில் சிங்களத்தில் கவிதை எழுதுவது மிலேச்சத்தனமானது என்பதைத் தெரிந்து கொண்டே கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்த போது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களவர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியிலிருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும் இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களவர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்.

ஃபஹீமா ஜஹானும் எம்.ரிஷானும் அவர்களின் சிங்கள -தமிழ் அறிவுக்கும் இலக்கிய அறிவுக்கும் அரசியல் அறிவுக்கும் ஏற்ப நான் சிங்களத்தில் எழுதிய அனைத்தையும் தமிழில் உங்கள் கரங்களில் முன்வைத்திருக்கிறார்கள் என உறுதியாக நம்புகிறேன். நன்றி.

மஞ்சுள வெடிவர்தன
என்சி
பிரான்ஸ்.