மஞ்சுள : கவிதைப் பொன்மொழிகள்

(தலைப்பற்ற தாய்நிலம் நூலுக்கு கவிஞர் சேரன் வழங்கிய அணிந்துரை)

உற்ற தோழனும் சக கவிஞனுமான மஞ்சுள வெடிவர்தனவின் பெயரில் இருக்கும் ‘வெடி’க்கும் மஞ்சுளவின் இயல்புக்கும் கவிதா ஆளுமைக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. எனினும் நம் எல்லோரையும் போலவே வெடிகுண்டுகளும், துப்பாக்கி வெடிகளும், கண்ணி வெடிகளும், மிதிவெடிகளும் வாழ்க்கையைக் கண்ணீராகவும் குருதியாகவும் மாற்றிவிட்ட காலங்களின் கவிதைச் சாட்சியம் அவர். இந்தத் தொகுதியில் கிடைக்கின்ற அவருடைய கவிதைகள் அவருடைய இலக்கிய சாட்சியத்தினதும் அறம் மேலோங்கிய கோபத்துக்கும் சாபத்துக்கும் ஒரு சிறிய உதாரணம் மட்டும் தான்.

மிக நீண்டகாலமாகவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு நேச சக்தியாக, மிகுந்த உணர்வுத் தோழமையுடன் பணியாற்றி வந்த சிங்கள நண்பர்களில் மஞ்சுளவும் ஒருவர். பத்திரிகையாளனாக, கவிஞனாக, நாவலாசிரியனாக, விமர்சகனாக, நுண்ணுணர்வுமிக்க செயற்பாட்டாளராக இடையறாது வாழ்பவர். அந்த வாழ்வு தந்த அவலத்தாலும், ஆபத்தாலும் இலங்கையை விட்டுப் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டவர். புலம் பெயர்வும் அலைந் துழல்வும் ஈழத் தமிழர்க்கு மட்டுமல்ல நம்மோடு தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றிய பல சிங்களத் தோழர்களுக்கும் தான் என்பதை ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது மெல்ல மெல்ல உணரத் துவங்கியிருக்கிறது.

மே 2009இல் உச்சம் பெற்று முடிவடைந்த ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை சிங்கள மக்கள் மத்தியில் பரவலாகத் தெரியவந்த ஒன்றல்ல. அது அவர்களின் ஆன்மாவையும் உலுக்கியதொன்றல்ல. இலங்கை அரசின் பொய்மையும் மாயையும் ஒன்று சேர்ந்த நிலையில் பெரும்பாலான சிங்கள மக்களின் கண்கள் தற்காலிகமாக மூடப்பட்டு விட்டன.

எனினும் முக்கியமான சில எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என ஒரு சிறு குழுவினர் தமிழ் மக்களுக்கு உணர்வுத் தோழமையை வழங்கியது மட்டுமன்றி இனப்படுகொலையின் பயங்கரமான காட்சிகளும், ஆவணங்களும் ‘சர்வதேச சமூகத்தின்’ பார்வைக்குக் கிடைக்கும் படி செய்திருக்கிறார்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது இந்த முக்கியமான அறப்பணியை அவர்கள் சாதித்திருக்கிறார்கள். உணர்வுத் தோழமையின் மிகச் சீரிய உயர்ந்த தள வெளிப்பாடு இது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடுகளும் எழ நியாயம் இல்லை. பாஷண அபேவர்த்தன, அஜித் ஹேரத், மஞ்சுள வெடிவர்த்தன, மகேஷ் முனசிங்க, கிரிசான் ராஜபக்ஷ, ஜன ரஞ்சன என நீளும் கவிஞர்கள் – எழுத்தாளர்கள் பட்டியல் எங்களுக்கு ஆன்ம வலுவைத் தருகிறது. சுனிலா அபேசேகர, சுனந்த தேசப்ரிய, நிமால்கா பெர்ணாண்டோ, நிர்மால் ரஞ்சித் தேவசிறி போன்ற பல செயற்பாட்டாளர்களையும் நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் உறவாடுதல் சாத்தியம் என்பதற்குரிய நம்பிக்கையின் ஒளிக் கிரணங்களை இவர்கள் எமக்குத் தருகிறார்கள்.

மஞ்சுளவின் கவிதைகள் நுட்பமானவை. சிங்கள சமூகத்தின் இயலாமையையும் மௌனத்தையும் நோக்கிச் சொல்லடிகளை வீசுபவை. சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளைப் பாடுபவை. உடையாத கனவுகளின் கண்ணாடிகளைத் தேடுபவை. கரைந்து போகும் புன்னகைகளைத் துயருடன் பாடுபவை. தமிழ்த் தோழர்களுடனான நெருக்கத்தை இரங்கலுடனும் அளப்பரிய துயரத்துடனும் வடிப்பவை. சுற்றிவர அடைக்கப்பட்ட கொடுமை சூழ்ந்த தடுப்பு முகாம்களின் முட்கம்பிகளைச் சுட்டெரிப்பவை. உணர்வுத் தோழமையின் கவிதா வெளிப்பாட்டிற்கு மஞ்சுளவின் கவிதைகளை மீறி எவருக்காவது வண்ணம் தீட்ட முடியுமா என்னும் மொத்தக் கேள்வி என் மனதில் எழுகிறது. வாழ்க்கைக் கும் போராட்டத்துக்கும் நம்பிக்கை தர வேறெதுவும் இல்லை யெனினும் நம்மிடையே இருக்கிறது: கவிதை.

சேரன்