பதிப்புரை : மட்டக்களப்பு வரலாறு

மட்டக்களப்பு வரலாறு

மட்டக்களப்பு வரலாறு

மேற்கத்தேய கல்விப்புலத்தில் வரலாற்றெழுதியல் என்னும் துறையானது பலவித தளங்களில் தன்னை விருத்தி செய்துகொண்டுள்ளது. இதன் தாக்கம் கீழைத்தேய கல்விப்புலங்களிலும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருக்கின்றோம். முக்கியமாக, தமிழ்நாட்டில், கல்விப்புலத்தில் மட்டுமல்லாது சிற்றிதழ்ப்பரப்பிலும் இதன் தாக்கத்தை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இனத்துவ அடிப்படையிலான / சட்டகத்திலான வரலாற்றெழுதியலுக்கு மாற்றாக இதர வரலாற்றெழுதியல் அணுகுமுறைகள் தோற்றம் பெற்றன. இவற்றின் ஓர் அம்சமாக, பண்பாட்டு வரலாற்றெழுதியலைக் குறிப்பிடலாம்.

ஈழத்தைப் பொறுத்தவரை, வரலாற்றெழுதியலானது இனத்துவ அடிப்படையிலான அணுகுமுறைகளைத் தாண்டி அடுத்தகட்டத்திற்கு நகராத நிலமையையே இன்றும் காணலாம். இனத்துவ அடிப்படையிலான முரண்பாடு தொடர்ச்சியாக முன்னிலையிலிருந்த காரணத்தால், ஈழத்துக்கல்விச்சூழலுங்கூட இனத்துவச்சட்டகத்தைத் தாண்டமுடியவில்லை. இனத்துவ அடிப்படையிலான பொதுமைப்படுத்தலுக்கு மாற்றீடான அணுகுமுறைகளின் அவசியத்தை உணர்ந்துகொள்ளமுடியாத நிலமையே இன்றுவரைக்கும் தொடர்கின்றது. பண்பாட்டு அடிப்படையிலான புலமைத்துவ மரபுக்கும் ஈழத்திற்கும் நீண்ட காலத்தொடர்பும் உறுதியான அத்திவாரங்களும் இருந்த போதிலும் அவை தொடரப்பட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

ஈழத்தமிழர் வரலாறு என்பதைக் கவனத்தில் கொண்டால், பெரும்பாலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றையும் அதன் நீட்சியில் அமைந்த இனத்துவ வரலாற்றையும் கருதும் போக்கே காணப்படுகின்றது. பிற்காலங்களில் ‘மட்டக்களப்பு மான்மியம்’ மற்றும் ‘மட்டக்களப்பு தமிழகம்’ போன்ற பிரதிகளை முன்வைத்து மட்டக்களப்புப்பிரதேச வரலாறு அணுகப்பட்டு வந்தாலும், பண்பாட்டு அடிப்படையிலான வரலாறு என்னும்போது பெரும்பாலும் யாழ்ப்பாணப்பண்பாட்டை அடியொற்றியதாகப் பொதுமைப்படுத்தி அணுகும் போக்கே இன்றுவரைக்கும் தொடர்கின்றது.

இவ்வகையில், விஜய் (எ) விஜயரத்தின அவர்கள் மட்டக்களப்பு சமூகத்தின் வழிபாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பிரதியை ஆக்க முனைந்துள்ளார். மட்டக்களப்பின் பூர்விக வழிபாட்டு முறைகளில் ஒன்றான குமார தெய்வ வழிபாடு, மட்டக்களப்பு மக்களுக்குரிய தனித்துவ வழிபாட்டு முறையாகும். மட்டக்களப்பின் கிரான் பகுதியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த விஜய் அவர்கள் தன்னுடைய சமூகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்து, தற்போது அருகிக்கொண்டிருக்கும் வழிபாட்டு முறையை தனது சக்திக்குட்பட்ட வகையில் ஆய்வு செய்து எழுத்தில் வெளிக்கொணர்ந்துள்ளார். பண்பாடு சார்ந்த அம்சங்களைக் கொண்ட வரலாற்றெழுதியல் முறைமை என்றபோதிலும், பெரும்பாலான தர்க்கங்களும் தகவல் மூலங்களும் கடந்தகால ஆவணங்களில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுக்கு மேலதிகமாக, தன்னுடைய அனுபவம் சார்ந்தும் கள ஆய்வு சார்ந்தும் பெற்றுக்கொண்ட தகவல்களை நேர்மையாக முன்வைத்துள்ளார். குமார தெய்வ வழிபாட்டு முறைக்கும் கிழக்கு மாகாண வழிபாட்டு முறைக்கும் கிழக்கு மாகாணத்தை அண்டியுள்ள சிங்கள சமூகங்களுடைய பூர்விக வழிபாட்டு முறைக்குமுள்ள ஒற்றுமைகளையும் தன்னுடைய ஆய்விலே தயங்காமல் வெளிக்கொணர்கின்றார். இதிலிருந்து, இவர் பண்பாட்டுக்கூறுகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய ஆய்வுமுறையை வடிவமைத்துள்ளார் என உறுதியாகக் கூறமுடிகின்றது. இதுவரை காலமும் இனத்துவ அடிப்படையிலான வரலாற்றெழுதியல் புலமைத்துவ மரபும் அதனூடாகக் கட்டமைக்கபப்ட்டிருந்த சட்டகமும் இவ்வணுகுமுறையை, ஆரோக்கியமாக எதிர்கொண்டு முன்னகர்த்தவேண்டும். இந்நூலைப்போன்ற பண்பாட்டு வரலாற்றெழுதியல் முறைமைகளின் அறிமுகமானது, பிற வரலாற்றெழுதியல் முறைகளையும் ஊக்குவித்து வரவேற்கும் என்று கருதுகின்றோம். அதுமட்டுமல்லாது, பண்பாட்டு அம்சங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கான ஊக்கியாகவும் அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

ஆசிரியராகக் கடமையாற்றும் விஜய், ஆய்வை முழுநேரப் பணியாகக் கொண்டவர் அல்ல. தனது பல்கலைக்கழகக்காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்களுள் ஒருவர். பிற்காலத்தில், இயக்க அரசியலில் இருந்து விலகி மனித உரிமைச்செயற்பாட்டாளராக பணியாற்றியவர். அவருடைய ஆய்வு, தனது சமூகம் மீதான நேசத்துடனான தேடலிலிருந்தே வெளியாகின்றது. மட்டக்களப்பு மக்களின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட இவருடைய ஆய்வுகள், இன்னுமின்னும் அதிகளவான தகவல்களுடனும் கள ஆய்வின் மூலமும் விருத்தியாக வேண்டும். பண்பாட்டு வரலாற்றெழுதியலின் ஆரம்ப முயற்சி என்ற வகையில் இப்பிரதியைப் பதிப்பிக்கின்றோம். இப்பிரதி உருவாக்கும் அசைவியக்கம் எதிர்காலத்தில் இவ்வாய்வு முறைமை விருத்தியாகவும் மேலும் பல புதிய ஆய்வாளர்கள் தோன்றவும் வழிசமைக்கும் என்றும் நம்புகின்றோம்.

எழுநா
ஜனவரி 2013