பதிப்புரை : பண்டைத் தமிழர்

பண்டைத்தமிழர்

பண்டைத்தமிழர்

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலப் பகுதிகளிலும் தமிழியல் துறைசார்ந்த ஆய்வுகள் பெருகலாயின. அவ்வாய்வு முன்னோடிகளில் ஈழத்தறிஞர்களின் ஆய்வுகள் சிறப்பிடம் பெறுவனவாயின. தமிழ் மொழியியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கண்டியில் வாழ்ந்த மாகறல் கார்த்திகேய முதலியார் நமக்கு முன்னின்றார். வேர்ச்சொல் ஆய்வுகளில் பல தமிழியல் அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் சுவாமி ஞானப்பிரகாசர்.

மதுரைத் தமிழ்ச்சங்கச் ‘செந்தமிழ்’ இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்த வேளையில் சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் இன்றைய ஆய்வுச் சூழலுக்கு ஏற்பில்லாத பல முரண்பட்ட கருத்துக்கள் இருந்தபோதும் தமிழியல் ஆய்வின் வரலாற்றுப் போக்குகளில் அவை தவிர்க்க முடியாத நிலையில் அமைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாயிருந்தது. எனவே இக்கட்டுரைகளைத் தொகுக்கலானேன்.

இக்கட்டுரைகளில் இன்றைய ஆய்வு நிலைக்கு முரண்பட்டதாய்த் தமிழர்களின் தோற்றுவாய் குறித்துப் பல்வேறு வகையான கருதுகோள்கள் உண்டு. தமிழர்கள் நடுநிலக்கடல் பகுதிகளில் இருந்து கைபர், போலன் கணவாய்களைக் கடந்து சிந்துவெளியில் பரவி, அங்கு மிகப்பெரும் நாகரிக வளர்ச்சியை எட்டிய பின் மெல்ல மெல்லத் தென்னகம் போந்தனர் என்பது தமிழர்களின் தொடக்கக்காலத் தோற்றுவாய் குறித்த ஆய்வுக் கருதுகோள்களில் ஒன்றாக அமைகிறது.

இன்றைக்குத் தமிழியல் சூழலில் கிடைக்கக்கூடிய ஆய்வுத்தரவுகளின் வழியும் ஆய்வியல் மேம்பாட்டின் வழியும் இக்கருத்துகள் ஏற்புடையனவாகா. தொடச்சியான நாகரிகத்தினையும் அதனையொட்டிக் கிடைக்கின்ற வரலாற்றுச் சான்றுகளையும் திராவிட மொழிகளின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய செம்மையினையும் நோக்கும் போது தென்னகத்தில் செழிப்புற்று வாழ்ந்த இனக்குழுக்களோடு சில இனக்குழுக்கள் வந்து இணைந்தனவாக இருக்கலாமேயல்லாமல், புதியதாய் ஒரு கட்டமைவே பிறிதோர் இடத்திலிருந்து வந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டது எனும் கருத்தியலை ஏற்கலாகா. இதே கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளியினை ஆய்ந்த அறிஞர் ஹிராஸ் பாதிரியார் அவர்களின் நட்பும் ஞானப்பிரகாசருக்கு இக்கருத்தியல் உருவாகக் காரணமாக அமைந்திருக்கலாம். ஆயினும் தமிழியல் ஆய்வுப் போக்குகள் அனைத்தினையும் அறிதல் ஆய்வாளர்களுக்கு இன்றியமையாதது. அதுவும் இத்தொகுப்பின் தேவையாகிறது.

யாழ்ப்பாணத்தின் பழங்குடிகள் குறித்ததாய் இவரது கருத்துக்களும் ஏற்புடையனவாகா. ஆயினும் தமிழில் வந்த இடப்பெயர் ஆய்வுகளிலும் இவரது ஆய்வுகள் இன்றியமையாததாக அமைகின்றன. மொழிநடை என்பது தமிழில் பல்வேறு வகையான மாறுபாடுகளைக் கொண்டதாக அமையும். அதில் ஞானப்பிரகாசரின் மொழிநடைக்குச் சிறந்ததொரு இடமுண்டு.

இவரின் பரந்துபட்ட பன்மொழி அறிவினை ஒட்டிக் காட்டப்படும் மேற்கோள்கள் இவரது வேர்ச்சொல் ஆய்வின் திறத்தினை விளக்குவனவாக அமைகின்றன. இதுவே இவரைத் தேவநேயப் பாவாணர் முதலாய வேர்ச்சொல் ஆய்வாளர்களின் முன்னோடியாகக் காட்டுகிறது. பல்சமயத் தொன்மங்கள் குறித்த இவரது பார்வை இவரது ஆய்வுப் போக்கின் பண்பட்ட தரவியல் தன்மையைக் காட்டுவதாக அமைகிறது. இவை போன்ற காரணங்களின் பொருட்டு இப்பதிப்பு இன்றியமையாததாக அமையும்.

இப்பதிப்புக்கு அணிந்துரை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ப. அருளி அவர்களுக்கும் ஈழத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த நூலினைத் தட்டச்சு செய்து உதவிய யாழினி சதீஸ்வரன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். இந்த நூல் வருவதற்கு ஊக்கம் வழங்கிய சற்குணம் சத்தியதேவனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுநா சார்பாக முனைவர் ஜெ. அரங்கராஜ்
மே 2013