அருளியுரை : பண்டைத் தமிழர்

(பண்டைத்தமிழர் நூலுக்கு பேராசிரியர் பா. அருளி அவர்கள் வழங்கிய அருளியுரை )

ஞான ஒளியவர் எனும்
ஞானப் பிரகாச அடிகளாரின்
ஞான விளக்கங்களில் ஒன்று, இது!
இவ்வொளியில் தெளிவும் பொலிவும் பெறுவோமாக!

“யாழ்ப்பாணம் – வரலாற்றுக் கழகத் தலைவர்”, “யாழ்ப்பாணம் – கீழ்த்திசை ஆய்வுகள் கழகத் துணைத் தலைவர்”, “ஆசிய அரையஞ்சார் கழகவுறுப்பினர்” – “கலா நிலையத்தின் மதிப்புறு உறுப்பினர்” என்னும் பல்வேறு அறிவமைப்புக்களின் உறுப்பாண்மையராக விளங்கிய ஞானப்பிரகாச அடிகளார் முக்கால் நூற்றாண்டிற்கும் முன்னீடாகவே தமிழ் ஆராய்ச்சியுலகில் மேம்பட்ட நிலையில் உலாவந்த ஓர் அகராதியியலர் என்பது, 1938-இல் அவரால் வெளிப்படுத்தப்பெற்ற சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language) அக்கால அறிவர்களுக்கிடையில் ஒரு பெரும் புரட்சியைத் தோற்றுவித்தது!’

1912-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் தொடங்கிய தமிழ்ப் பேரகராதித் தொகுப்பும் – பதிப்பும் முற்ற முடிவெய்திய பின்னர்ச் – சுடச்சுட வெளிப்படுத்தப் பெற்றதே திரு. ஞானப்பிரகாச அடிகளின் அரியதான முதல் தொகுதி!

வேர்ச்சொல் அறிவியலின்பால் சற்றும் நம்பிக்கையற்ற அத் தமிழ்ப் பேரகராதித் தொகுப்பாளர்களின் கருத்துக்களில் – குற்றச் சார்த்துக்களில் உண்மையில்லை என்பதை மெய்ப்பிக்கவே தாம் இதனை முயன்று உருவாக்கியுள்ளதாக ஞானப்பிரகாச அடிகள் தெரிவித்தார்.

பரந்துபட்ட – ஆழங்காற்பட்ட – நுண்ணிய மதித்திற ஆராய்ச்சியாளராக இவர் மலர்ந்திருந்தமையைத் தொகுதியின் மிகப் பல்லிடங்களிற் கண்டு அக்கால அறிஞர்கள் பலர் மலைத்தனர்; வியந்தனர்; பாராட்டினர்!

தாம் செய்த மொழியியல் வேரியல் ஆராய்ச்சிகளுக்குத் தாமே உரிய நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு – அவற்றிற்கேற்ற விளக்கங்களையும் உடன் வரைந்த பெருமகன், இவர்! தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி – தமிழ் அமைப்புற்ற வரலாறு ஆகிய நூல்கள் இந் நிலைகளை நமக்கு விளக்கி நிற்பனவாகும்!

சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதியின் முதல் தொகுதியின் முகப்புப் பகுதியில் – தாம் உரியவாகக் கண்ட நெறிமுறைகளைக் கட்டளைகளாகவே பதிவு செய்திருந்தார்.

364 பெரும் பக்கங்களுள் அடைவுபட்டிருந்த முதல் தொகுதியுள் இந்தோ – ஐரோப்பிய மொழிகளின் ஒப்பீட்டுச் சொற்குவியல்கள் ஆங்காங்கும் சொட்டப்பெற்றுப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அக்கால வட்டத்துள் காட்சிக்கும் கருத்துக்குமாகப் புலப்பட்ட மேலைநாட்டு வேரியல்சார் நூல்களிலும் – உலக வரலாற்று நூல்களிலும் தமிழியல்சார் நூல்கள் பலவற்றிலும் இப் பெருமகனார் ஆழ்ந்த கவனமும் ஆர்வமும் செலுத்தி அவற்றை உள்வாங்கியுள்ளார்!

சென்னை – வேப்பேரி – கிருத்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மாகறல் கார்த்திகேயனார் தமிழ் ஆராய்ச்சியுலகில் தொடங்கி வைத்த அரும்பணியை (1907) அழமாகக் கருத்திற் கொண்டு விரிவார அதனுள் தோய்வுற்று நீந்திக் கரைகண்ட பெருமகனார், இவர்!

சொற்பிறப்பு – தமிழ் ஒப்பியல் அகராதி வெளிவந்த பின்னர்த் – “தமிழ்ப்பொழில்” இதழில் தொடர்ந்து இவர் எழுதி வந்த அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு இங்கு நம் முன் நூலாக வைக்கப்பெற்றுள்ளது. இத்தகு பேரரும் முயற்சினை மேற்கொண்டு வெற்றியாகச் சமைத்து முடித்துள்ள முனைவர் அரங்கராசன் அவர்கள் நம் அனைவரின் போற்றுதலுக்கும் உரியவராகிறார்!

பண்டைத் தமிழர் – தமிழரின் முன்னைய இருப்பிடக் கொள்கைகள் – நடுவண் தரைக் கடலைச் சூழ்ந்த நாடுகளில் தமிழரின் முன்னோர்கள் – பழங்கால எழுத்துமுறை – மேற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தமிழ் இடப் பெயர்கள் – என்றவாறுள்ள ஆய்வுக் களங்களிலெல்லாம் ஆழமாக உள்ளிறங்கி ஆய்துள்ளார், நம் அடிகளார்! அக்கால வட்டத்துள் எழுந்த “இலக்கியம் – இலக்கணம் இவை தமிழ்தாமா?” என்பது போன்ற சொல்லாராய்ச்சிப் போர்களிலும் ஈடுபட்டுத் தாமும் தம் கருத்தைத் தெரிவித்துள்ளார்!

இவர் தமிழ்ப் பொழிலுள் இக்கட்டுரைத் தொடரினை எழுதத் தொடங்குவதற்கும் முந்தைய கால வட்டத்துள், “திராவிடர்” எனுஞ் சொல் எப்படித் தோன்றியது என்னும் கருத்து பற்றிய சிக்கல் அறிஞர்களுக்கிடையே மிகப் பரவலாக எதிரும் புதிருமாக ஊடாடியுள்ளமையைத் தொடரின் தொடக்கத்திலேயே நம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது!
இவ்வகைச் சிக்கல்கள் உறழாட்டுப் பெறுகையில் – “மொழி ஞாயிறு” – தேவநேயப் பாவாணர் அவர்களின் “ஒப்பியன் மொழிநூல்”, அறிஞர் பெருமக்களிடையே தெள்ளிய துலக்கத்தினையும் – தமிழ் முதன்மை பற்றிய அறிவு விளக்கத்தினையும் முன்வைத்தது! தமிழியல் எதிரிகளின் குசும்புகளையும் – அறிவார்ந்தனபோல் அவர் வெற்றாக எழும்பிய வீண் வினாக்களையும் எதிர் நிறுத்தி அவற்றை முறியடித்து முன்நின்றது! பாவாணர் பெருமகனாரும் ஞானப்பிரகாச அடிகளின் கருத்துரைப்புகளைத் தொடர்ந்து தெளிவாகக் கவனித்து வந்துள்ளார்.

“தமிழ்” எனும் சொல் தோற்றம் பற்றிய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் பலராலும் பலவாறு முன்வைக்கப் பெற்றுள்ளன! அவற்றையெல்லாம் நம் ஞானப் பிரகாச அடிகளார் நன்கு கருத்திற் கொண்டுள்ளார்.

தம் + உள் எனும் இரு சொற்களின் கூட்டாலேயே “தமிழ்” என்றாயினது, என்றனர் சிலர்! இனிமை என்னும் பொருட்பாட்டின் வழியே “தமிழ்” எனும் சொல் தோன்றியுள்ளது என்றனர், உரிநூல்கள் தொகுப்பாளர்! (நிகண்டு – ஆசிரியர்கள்). தாமம் (கதிரவன்) எல்லாம் (இலங்கை) ஆகிய சொற்களின் கூட்டு வழியாகவே “தாம் ஈழம்” என மருவித் “தமிழ்” ஆகியது என்றார், கந்தையா! “தமி” (தனித்தது) என முற்பட்ட சொல் கொண்டு ஒப்பற்றது எனும் பொருளில் “தமிழ்” எனும் சொல் தோன்றியது என்றார், தாமோதரம்!

“தமிரலித்தி” என்னும் இந்திய வடகீழ்த் திசைப் பட்டினப் பெயர் வழியே “தமிழ்” எனும் சொல் தோன்றியது என்றார், கனகசபை! (நூல்: 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர்). “வடமொழி” என்றவாறான வழக்குப் போன்று – அதற்குரிய எதிரிடைச் சொல்லாகத் “தென்மொழி” என வழங்கப் பெற்று தெம்மொழி > தெமிழ் என்றவாறாக மருவலுற்று இறுதியில் “தமிழ்” என்றவாறு நின்றது என்றார். போப்பையர்!

தம் + இல் > தமிழர் தம் இல்லத்துள் (தம் இல்லங்களுக்குள்) பேசுவதற்கென உருவாகிய மொழியே தமில் > தமிள் > தமிழ் என ஆயிற்று என்றார், மாகறல் கார்த்திகேயனார்! (நூல்: மொழிநூல். 1907).

(திர் (திரை) + (ம்) + இல் (குடி) + அர் (பலர்பாலீறு) > திரமிலர் = கடற்கரையில் குடி கொண்டவர்) – இத் “திரமிலர்” என்பதுவே “தமிழர்” எனத் திரிபெய்தியது என்பதுவும் – இத் “தமிழர்” எனும் சொல்லினின்றே இவர்கள் பேசும் மொழி “தமிழ்” எனும் பெயர் பெற்றது என்பதுவும் ஞானப்பிரகாச அடிகளாரின் கருத்துக்கள்!

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் தந்தை எனப் போற்றப் பெறுகின்ற “எறோடோத்தசு” என்னும் வரலாற்று அறிஞரின் குறிப்புக்களையெல்லாம் அகப்படுத்திக்கொண்டு, அடிகளார் இவ்வாறாகத் தம் கட்டுரை நூலுள் கருத்துரைத்துள்ளார்!

“இல்” என்பது வீட்டையும் – குடியையும் – ஊரையும் உணர்த்தும்! (காண்க: “இற் பிறந்தார்” (குறள்: 915) ( = குடிப் பிறந்தார். அன்பில் – கிடங்கில் – பொருந்தில் என்பன ஊர்ப்பெயர்கள். (தம் + இல்) தம் இல் மொழியாவது, தம் வீட்டில் அல்லது நாட்டில் பேசும் மொழி! “தம்மில்” என்பது “தமில்” எனத் தொக்குத் “தமிழ்” எனத் திரிந்திருக்கலாம் என்றார், “மொழிஞாயிறு” – பாவாணர்! (நூல்: தமிழ்வரலாறு – முதல் தொகுதி: பக்கம்: 35). (பாவாணரின் இக் கருத்து, மாகறல் கார்த்திகேயனாரின் முடிபினை அடியொற்றியதாகும்!)

“திரவிடம்” எனும் சொல்லே “தமிழ்” என்றவாறு திரிந்தது எனக் கால்டுவெல் அவர்கள் கருத்துரைத்தார்! (அறிஞர் கிரையர்சன் இதனை ஏற்காது, திருத்தமுரைத்தார்!)

“தமிழ் வரலாறு” என்னும் நூலின் முன்னுரைப் பகுதியில் பாவாணர், அவர்கள், “தமிழ்” எனும் சொல் தோற்றத்து முடிபாக இவ்வாறு இறுதியுரைத்துச் சென்றார்!

“இதுகாறுங் கூறியவற்றால், “தமிழ்” என்னும் பெயருக்குக் கூறப்பட்ட பொருட் கரணியங்கள் எல்லாவற்றுள்ளும் தனியாக ழகரத்தையுடையது: தந் நாட்டு மொழி (தம் + இல்) என்னும் இரண்டே பொருத்தமானவை என்றும், இவற்றினும் சிறந்தது தோன்றும் வரை இவையே கொள்ளத் தக்கன என்றும் எண்ணிக் கொள்க! (பக்கம்: 39. தமிழ் வரலாறு).
பாவாணர் பெருமகனார் மறைவெய்திய 1981 முதலாந் திங்கள் முன்னீடாக அவர் வரைந்து புறந்தந்த ஆய்வுச்செய்திகள் அனைத்திலும் ஆழ மூழ்கித் தோய்ந்து படிந்து உறைந்து உரம்பெற்று மறமேறிய அருளியாகிய நான், அவர்க்குப் பிறகு முப்பானாண்டுகட்கும் மேலாக அவற்றினுக்கும் மேம்பட்ட ஆராய்ச்சிகளில் தொடர்ந்து துருவி நோடி மிகப் பன்னிலைத் துலக்கங்களை எய்தினேன் (அவற்றுள் இரண்டு அல்லது மூன்று விழுக்காட்டளவு ஆய்வுப் பகுதிகளே புறவுலகுக்குப் புலப்பாடு கொண்டுள்ளன!). ஆய்வு நிலைகள் படிநிலைகளிலாக மேம்படுவன என்னும் உண்மையும் எனக்குத் தெளிவாகியது!

“தமிழ்” என்னும் சொல் தோற்றம் பற்றிய நம் தெளிவுக் கருத்து:

“மொழி” “முய்” = (கூடுதற்கருத்து) வேர்ச்சொல்.
முய் + அக்கு > முயக்கு = தழுவுகை, சேர்கை, புணர்ச்சி.
முயக்கு > மொயக்கு > மயக்கு. மயக்கு + அம் > மயக்கம் = சேர்க்கை
முய் > முய்ல் > முல். முல்+து > முற்று (முற்றும் = முழுவதும்)
முய் > முய்+உ > முயு > முழு = பருத்த; முற்றிய.
முழு > முழு+இ > முழி > மொழி = சொற்களின் திரட்சிக்கூறு.
தமிழுக்கு முதன் முதலில் வழங்கிய பெயர், “மொழி” என்பதுவே!
தம் + மொழி > தம்மொழி > தமொழி > தமிழ்

தமிழுக்குள்ளேயே மொழி ”மொழி” என்பதுவும் உட்செறிவார்ந்துள்ளமையை உணரவியலாவாறு காலப்பழமை மிகு தொலைவிற் சென்றமையின், நாம் மீண்டும் அதனுடன் மொழியை நட்டித் தமிழ்மொழி என்கின்றோம். (காண்க : ”நம் செம்மொழி” பக்கம்: 37 – 39)

தமிழ் + அம் > தமிழம்.

தமிழம் > த்ரமிள > த்ரமிட > த்ரவிட > திரவிட > திராவிட (திராவிடம்).

தமிழே திராவிடமாகியது! பாவாணர் பெருமகனாரின் கருத்தும் இஃதொத்ததே!

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தெளிவும் இவ்விடத்திற் கருதிப் பார்க்கத் தக்கது. (நூல்: மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு” பக்கம்:74. (1948).
“திராவிடா” எனும் சொல், ஒரு மூலச் சொல் அன்று! “தமிழ்” என்பதன் சமற்கிருத வடிவமே, அது! “தமிலா” (Damila) > தமில்லா (Damilla) > த்ரமிடா (Dramida) > “திராவிட” என்றவாறு படிப்படியாக மருவியுள்ளது! “திராவிட” என்பது ஒரு மொழியின் பெயரைக் குறிப்பது! ஒரு மக்களினத்தைக் குறிப்பதன்று! “தமிழ்” அல்லது “திராவிடா” என்ற மொழியானது தென்னிந்தியாவில் மட்டும் பேசப்பட்ட மொழி அன்று! ஆரியர்களின் வருகைக்கு முன் அனைத்திந்திய அளவிலும் காசுமீர் முதல் கன்னியக்குமரி வரை பேசப்பட்ட மொழியாகும். (இம் மொழிக்குச் சொந்தக்கார்களே இந்தியா முழுமையிலும் நிறைந்து வாழ்ந்த முன்னோர்கள்!)

பேரறிஞர் ஞானப்பிரகாச அடிகளாரின் இக் கட்டுரைத் தொகுதி நூல் – தமிழ் மொழி – இன – நாட்டு வரலாற்றுப் பகுதிகளுக்குள்ளாக ஆழங்காற்பட ஆய்வு செய்யப் பெற்றுள்ள அருநூற் பேழையாகும். உலக வரலாறுகளின் சாறுகளும் ஆங்காங்கும் பிழிந்து வடித்தெடுத்து உரியநிலையில் முன்வைக்கப் பெற்றுள்ளன! அக்கால வட்டத்தின் புத்தம் புதுக் கருத்தோட்டங்களை முன்வைத்துத் தமிழியல் அறிஞர் உலகத்தை ஆய்வுத் தெளிவு நோக்கி இட்டுச் சென்ற சிந்தனைக் கருவூலமாக இருந்துள்ளது! மொழி வரலாறு – இனவரலாறு – சொல்வரலாறு ஆகியன உணர்தற்கென விருப்பார்ந்த அறிவுத்துறையினர் இதனுள் இறங்கி மேலும் துருவி உண்மைகாண ஒல்லும்!

இப் பழைய பெரு முயற்சிகள் காலச் சுழற்சிகட்கிடையில் மட்கிப் போய் – மங்கிப் போய் – மழுங்கலுற்று மறைந்து விடாதவாறு மீட்டெடுத்து முன்வைத்துப் பயன்பரப்பியுள்ள அறிவுத் திறவோர் முனைவர் அரங்கராசன் அவர்கள் நம் நெஞ்சினிக்கும் அன்புக்கும் – வணக்கத்திற்கும் – வாழ்த்துதலுக்கும் – பாராட்டுதலுக்கும் – போற்றுதலுக்கும் உரியவராகிறார்! அவரின் சீரிய முயற்சிகள் மேன்மேலும் சிறந்து மிக்கோங்குக!

பேராசிரியர் பா.அருளி
முன்னாள் தலைவர்
தூய தமிழ்ச் சொல்லாக்க அகரமுதலித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்