முன்னுரை : தமிழ்ப் பாஷை

(தமிழ்ப்பாஷை நூலுக்கு கலாநிதி செ.யோகராசா அவர்கள் வழங்கிய முன்னுரை)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரது ஆட்சி காரணமாக தமிழ் பேசும் நல்லுலகில் உருவான நவீனமயவாக்கச் சூழலில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் ஈழத்து அறிஞர்கள் பலர் பல்வேறு மட்டங்களிலும் காத்திரமாக பங்களிப்பைச் செய்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துக்குரிய காலம் என்று கூட, தமிழறிஞர்கள் சில குறிப்பிட்டுள்ளனர்.

ஆறுமுகநாவலர், சைமன் காசிச்செட்டி, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, சபாபதி நாவலர், மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை, தி.த. கனகசுந்தரம்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை என்றவாறு நீண்டு செல்கின்ற அவ்வறிஞர் வரிசையில் ஒருவராலும் குறிப்பிடப்படாதிருக்கின்ற திருக்கோணமலை தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் குறிப்பிடத்தக்க இலக்கிய முயற்சிகளுள் ஒன்றான “தமிழ்ப்பாஷை” என்ற நூலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதே என் நோக்கமாகின்றது.

தி.த. சரவணமுத்துப்பிள்ளை ஈழத்தில் திருக்கோணமலையை பிறப்பிடமாகக் கொண்டவர் முற்குறிப்பிட்ட தி.த. கனகசுந்தரம்பிள்ளையின் சகோதரர், இளம்பிராயத்திலேயே தமது தமையனாருடன் சென்னைக்குச் சென்று பச்சையப்பன் கல்லூரி, பிறசிடென்சி கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்று, தமது தமையனாரைப் போலவே தத்துவ சாஸ்திரத்தில் பீ.ஏ. பட்டம் பெற்று தமிழிலும் பாண்டித்தியம் பெற்றவர்.

பிறசிடென்சி கல்லூரியில் (சென்னை துரைத்தனப்¬ பாடசாலை) நூல் நிலைய அதிபராகக் கடமை புரிந்தவர். இவரது முக்கிய இலக்கியப் பணிகளாகிய ,நவீன உள்ளடக்கம் கொண்ட தத்தை விடு தூது (1892), ஆரம்பகால வரலாற்று நாவல்களும் முக்கியமான மோகனாங்கி (1895) ஆகியன அறியப்பட்டளவிற்கு தமிழ்பாஷை என்ற நூல் பற்றி அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். தமிழ்ப்பாஷை, தி.த. சரவணமுத்துப்பிள்ளை கடமைபுரிந்த சென்னை துரைத்தனப் பாடசாலைத் தமிழ்ச் சங்கத்தில் அன்னார் ஆற்றிய உரையின் நூல்வடிவமாகும். தி.த. சரவணமுத்துப்பிள்ளை, தான் தமிழ்ப்பாஷை என்னும் தலைப்பிலே உரையாற்ற முற்பட்டமைக்கான அவசியம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘தற்கால தமிழ்ச் சங்கங்கள் பலவுள, அவை பெரும்பாலும் மாணவர்களால் ஏற்படுத்தபட்டவையே. ஆகவே, தற்கால தமிழ்ச் சங்கங்கள் தமிழ்ப்பாஷையைக் கற்றறியும் பொருட்டேற்படுத்தப்பட்டவைகளே. நமது சென்னைத் துரைத்தன பாடசாலைத் தமிழ்ச் சங்கமும் அவற்றுளொன்றேயாகும். ஒரு பாஷையைக் கற்பதினால் ஊதியம் உண்டாயின் அன்றோ அப்பாஷையை யறிவுடையோனொருவன் கற்கப் புகுவான். அப்பாஷையிலுள்ள நூல்கள் சிறந்தவையினானனோ அவற்றை யிறந்து படாமற் காப்பாற்ற ஒரு சங்கம் ஏற்படுத்த வேண்டும். யாவருக்கும் பிரயோசனமில்லாவொரு வேலையைச் செய்து வாணாளை வீணாய்க் கழிப்பதறியாமையாம். ஆகவே தமிழ்ப்பாஷை சிறந்ததென்பதும், தமிழ் நூல்கள் அழியாது காப்பாற்றப்படும் தகுதியுடையனவென்பதும், நிருபிக்கப்பட்டவன்றைக்கன்றே தமிழ்ச் சங்கங்களவசியம் வேண்டுமென்பது புலப்படும். ஆகவே சென்னைத் துரைத்தன பாடசாலைத் தமிழ்ச் சங்க மேற்படுத்திய நமக்குத் தமிழ் நூல்களின் சிறப்பெடுத்துரைத்தலவசியமாம். அது பற்றியே இவற்றைக்குத் தமிழ்ப் பாஷையின் சிறப்பைச் சிறிது என்னால் இயன்றளவு எடுத்துரைப்பான் றுணிந்தனன்.‘

மேலே தமிழ்ப்பாஷையில் சிறப்பு என கட்டுரையாளர் குறிப்பிடுவதனால், அது தமிழ்ப்பாஷையின் அதாவது, தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி மட்டும் குறிப்பிடுகின்றனது என ஒருவர் கருதக்கூடும். அன்றைய ஆய்வாளர் சிலர் தமிழ்ப்பாஷை என்கிறபோது தமிழ்மொழியோடு தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஒருசேர உள்ளடக்கி தமிழ்பாஷை என்ற பொதுப்பெயரால் குறிப்பிட்டுக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பாஷை என்ற இந்நூல் முக்கியமாகப் பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றது. தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம்.

மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு நுணுகி நோக்குகின்ற போது தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான சில விடயங்கள் பற்றி இந்நூல் முதன் முதலாகப் பேச முற்படுவது புலப்படுபடுகின்றது. அதாவது முற்குறிப்பிட்ட சமகால ஆய்வாளார்களை மனம் கொள்வோம் ஆயின் ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, தி.த. கனகசுந்தரம்பிள்ளை ஆகியோர் நூற்பதிப்பு விடயத்தில் மட்டும் கூடிய கவனமெடுக்கின்றனர். சைமன் காசிச் செட்டியும் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையும் தமிழ்ப் புலவர்களின் வரலாறு பற்றியே அக்கறை கொள்கின்றனர். அத்துடன் சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாற்றைக் காலகட்ட அடிப்படையில் அணுகும் முயற்சியிலும் ஈடுபடுகின்றார்.

மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை தமிழர் சமூக வரலாறு பற்றிச் சிந்திக்கின்றார். ஆக, இத்தகைய ஆய்வாளர்களிடமிருந்து விலகி, தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான சில விடயங்கள் பற்றி, தி.த. சரவணமுத்துப்பிள்ளை சிந்திக்க முற்பட்டிருப்பதனை இந்நூல் வெளிப்படுத்துவது மனங்கொள்ளத்தக்கது. மேற்கூறிய விடயங்களை தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக முக்கியமான புதிய சில சிந்தனைகள் அல்லது கருத்துக்களை இந்நூல் வெளிப்படுத்துவது பற்றி இங்கு சுட்டிக் காட்டுவதன் ஊடாகவே தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப் பாஷையின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்ள முடியும். அன்றைய ஆய்வுச் சூழலில், தமிழ்மொழியின் பிறப்பு அல்லது தோற்றம் பற்றி பாரம்பரியமான சிந்தனையே தெய்வீகக் கொள்கையே அதாவது அது கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்தே ஆழமாக வேரூன்றியிருந்தமை கண்கூடு. பலவிடயங்களில் முற்போக்கான பார்வையைக் கொண்டிருந்த பாரதியாரே தமிழ்மொழியின் தோற்றம் பற்றி இவ்வாறுதான் சிந்தித்துள்ளார்.

ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மேலுள்ள பகுதி கவிதையானமையின் கவிதையில் கற்பனைக்கிடமுண்டென்று அமைதிகூற முற்படுவோமாயின் பாரதியார் தமிழ்நாட்டு மாதருக்கு என்ற தமது கட்டுரை ஒன்றிலே கூட பின்வருமாறு குறிப்பிடும்போது அதற்கு எதுவித அமைதியும் கூறமுடியாதிருக்கின்றது. ஆதியில் பரமசிவனால் படைப்புற்ற மூலம் பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் சமஸ்கிருதமும் தமிழுமே யாம் என்று பண்டைத்தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறும் புராணக் கற்பனையன்று தக்க சரித்திர ஆதாரமுடையது.

தமிழ்நாட்டினர் மத்தியில் மட்டுமின்றி ஈழத்தவர் மத்தியிலும் மொழியின் தோற்றம் பற்றி மேற்குறித்த கருத்தோட்டமே காணப்பட்டது. இன்னொரு விதமாகக் கூறுவதாயின், மொழி பற்றிய முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்தும் போது ஒருவித எதிர்ப்புக்குள்ளாகும். சூழ்நிலைகூட நிலவியது. மேற்குறித்தவாறான ஆரோக்கியமற்ற ஆய்வுச் சூழலிலேயே தி.த.சரவணமுத்துப்பிள்ளை மொழி குறித்து விஞ்ஞானபூர்வமான கருத்துக்கள் பலவற்றைக் கூறிவிட்டு, இவ்வாறு எழுதுகின்றார்.

தமிழ் கடவுள்பேசும் பாஷையெனராயின் மறுபாஷைகள் கடவுகட்குத் தெரியாதா? மறு பாஷைகள் பேசுவோரிடத்து கடவுள் பேச வேண்டுமாயின் தமிழிலேயா பேசுவார்? அல்லது அவரவரிடத்து அவரவர் பாஷையைப் பேசுவாராயின் தமிழைக் கடவுள் பேசினார் என்பதால் தமிழுக்கென்ன பயன்?

மேற்கூறியவாறு குறிப்பிட்ட பின்னர், தமிழ்மொழியின் தோற்றத்தினைக் கடவுளோடு தொடர்புப்படுத்திப் பேசுவோர் ஆதாரமாகக்காட்டும் நூற்கருத்துக்களை மறுதலித்துவிட்டு, மொழியின் தோற்றம் பற்றி விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கூறிகின்றார் தி.த.சரவணமுத்துப்பிள்ளை. தமிழ் என்ற பெயர் உருவானமை பற்றிச் சிந்திக்கும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அது பற்றிய பலரது கருத்துக்களையும் கூறி, இறுதியில், போப்பையர், கால்ட்வெல் ஆகியோர் கருத்துக்களைக் குறிப்பிட்டு விட்டு, அவ்விருவரில் ஒருவரது கருத்துச் சரியாகலாமென்று கூறிச் செல்கின்றார். தமிழ், சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்தும் தி.த.சரவணமுத்துப்பிள்ளையினால் மறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இனி, தமிழ் இலக்கியம் தொடர்பான தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் கருத்துக்களும் கவனத்திற்குரியவை. அகத்தியம் தமிழின் முதல் இலக்கணநூலென்று கருதுவோர் இன்றுமுளராக தி.த.சரவணமுத்துப்பிள்ளை அன்றே அதை மறுத்துவிடுகின்றார். தமிழ்ப்பாஷை தொடங்கியவுடன் ஒரு பேரிலக்கணந் தமிழிலெழுதிய விந்தை நம் பண்டிதர்மார்க்கே புலப்படும். யாதொரு சிறுகாரியத்திற்கும் சூத்திர மெடுத்துக்காட்டும் பண்டிதர், வித்துவான்கள் முதலியோர் இலக்கியங் கண்டதற்கிலக்கணமியம்பலில் என்னுஞ் சிறு நன்னூற் சூத்திரத்தை மறந்து தமிழிலக்கிய முண்டுபடுவதற்கு முன்னேயே அகத்தியர் தமிழிலேயொரு பேரிலக்கணமெழுதினாரெனக் கூறலும் ஒரு பெரும் விந்தையே அகத்தியர் தமிழிலேயொருமெழுந்தன வாக்கியுள்ளங் கையில்லைத் தாசமனஞ் செய்தருளிய அகத்தியருக்கு இலக்கிய மின்றி யிலக்கணமெழுதல் ஒரு பெருங்காரியமோவெனச் சமாதானங்கூறலும் பண்டிதர் பாண்டியத்திற்கெட்டியதன்றிச் சின்னாட்பல்பிணிச் சிற்றறிவினராகிய நமக்குப் புலப்படும் பொருளோ?

முதல் மூன்று சங்கங்களுமிருந்தமை பற்றி அலசுகின்ற தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆழமாகச் சிந்திக்க பின்னர் இவ்வாறான முடிவிற்கு வருகின்றார்.

ஆயின் உள்ளதை யுள்ளபடி கூறல் தமிழ்ப்பண்டிதர் குணமின்னையின் உண்மையும் அவர் வாயில் வரும் பொழுது உண்மை நிறம் மாறிப் பொய்யாயிகின்றது. ஆகவே சங்கங்களைப் பற்றிக் கூறியவற்றுள் உண்மை யெவ்வளவு பொய் புளுகு எவ்வளவெனக் கண்டுபிடிக்கத் தொடங்கல் பகீரதப் பிரயத்தனமாகும். இச்சங்கங்களுள் ஒவ்வொன்றும் பல்லாயிர வருடமிருந்ததாகவும் இச்சங்கங்களில் சிவன், சுப்பிரமணியர் முதலிய கடவுளர் அங்கத்துவராய் வீற்றிருந்தனரெனவும் இச்சங்கங்கட்குத் தெய்வீகமான சங்கப் பலகையொன்றிருந்ததாகவும் இவ்வித பல கதைகளைக் கூறுவதனால் உள்ள உண்மையும் மறைந்து போகின்றது.

தமிழ் இலக்கிய நூல்கள், தமிழ்ப் புலவர்கள் பற்றி விஞ்ஞான பூர்வமான முறையில் வித்தியாசமான முறையில் சிந்திக்கும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழிலிருக்கின்ற புராணங்கள் எழுந்த காலத்தை இருவகைப்படுத்தி விட்டு, முற்கூற்றுப் புராணங்களை (எடு:பெரியபுராணம்) ஏற்றுக்கொண்டு, பிற்கூற்றுப்புராணங்கள் பற்றி பின்வரும் கருத்தை முன்வைக்கின்றமை கவனத்திற்குரியது.

பிற்கூற்றுப் புராணங்களின் காலமே தமிழ்க்குங் கலிகாலம்! விருத்தாப்பியமடைந்த தமிழணங்கிற்குப் பஞ்சப் புலனும் இக்காலத்துக் கெட்டனபோலும். இப்புராணங்களே தமிழைப் பாழாக்கின பெரும் பேறுடையின. ஆலையில்லாவூருக்கு இலுப்பை பூ சர்க்கரை போலவும் தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டைப் பிரசண்டனென்பது போலவும் காரிகைகற்று சொற்றொடர் கற்கப் பழகினோர் யாவரும் புராணம் எழுதத் தொடங்கின தமிழ் – என்ன பாடுதான் படாது.

தனது காலத் தமிழரின் தமிழின் நிலை பற்றியும் ஆழமாகச் சிந்திக்கின்ற தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆங்கில மொழியின் பால் மிகுந்த பற்றும் தமிழ்மீது வெறுப்பும் காணப்படுகின்ற நிலை கண்டு சினமும் கவலையும் கொள்கின்றார்.

தற்காலத் தமிழருக்கும் நிலைமையெடுத்துரைக்கவும் வேண்டுமா? அருமறையோதுமந்தணாளர்க்கெல்லாம் ஆங்கிலேயே பாஷை சுயபாஷையும் அன்னிய பாஷை தமிழுமானது இக்கலிகாலத்தின் கூத்தோ@ ஆங்கிலேய பாஷையிலோர் சிறு கிரகந்தெரியாதிருத்தல் அவமானமாக, கம்பர் பாடியது இராமர் கதையோ தருமர் கதையோவென வினாவில் மரியாதையாவது கலிகால விநோதமே ஆங்கிலேய பாஷையை அடுப்படியிற் கேட்பேமேல் தமிழ்தானெங்கு போயிற்றோ! தந்தைக்குத் தலையிடிக்க மயானத்தில் விறகடுக்கிய சண்டாளன் கெதியாயிற்றன்றே தமிழர் கெதி! தொட்டில் பழக்கஞ் சுடுகாடுமட்டும் என்னும் பழமொழியும் பாஷைவிஷயத்திற் தவறிற்றன்றோ!…..

சமகால இலக்கியம் பற்றிச் சிந்திக்கின்றபோது, குறிப்பாக கவிதை உலகில் அவலநிலை பற்றிப் பலப்படக் கூறி, ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றமை மனங்கொள்ளத்தக்கது. தமிழ் திருந்த வேண்டுமெனும் விருப்பமுடையோர் அந்தாதி, கலம்பகம் முதலியவை எழுதுவதாலென்ன பயன்? அவ்வாறு எழுதினும் அதிலும் புதிதேதாவது சொல்வாரா? சொல்வார். அந்தோ அது தவறென்பார். கூறும் பொருளும் கூறும் விதமும் முன்னோர் கூறிய விதமே கூற வேண்டுமாயின் திருந்துவதற்கு வழி எங்கனோ? உருவகம் உவமை முதலியனவும் முன்னோர் கூறியவற்றிற் பிறிது கூறிற்றவறென்பரேல். ஐயன்மீர், தமிழுய்யும் வழிதானெவ்வாறோ? முன்னொருகால், யான் இயற்றிய செய்யுளொன்றில் காக்கையிற் கரிய கூந்தல் என்றெழுதியதற்கு பண்டிதர் மூவர் முன்னோர் யாவரும் இவ்வாறு கூறவில்லையே இது தவறு என்றனர். முன்னோர் காக்கை கரிது என்று சொல்லாவிடிற் காக்கை கரிதல்ல என்று கூறக்கூடிய பண்டிதருடன் யாம் யாது செய்யலாம்…

சமகால தமிழிற்கு முக்கியமான தேவை என்று தி.த.சரவணமுத்துப்பிள்ளை கருதுபவை புதிய செய்யுள் ஆக்கங்கள், மொழிபெயர்ப்புகள், வசன கிரந்தங்கள் என்பனவாம். மேற்குறிப்பிட்ட தமிழ்ச் சூழலில் தவிர்க்கவியலாதவாறு தமிழபிமானம் பற்றி வற்புறுத்துகின்றார். தி.த. சரவணமுத்துப்பிள்ளை: தமிழர்களே உங்கள் சுதேசாபிமானம் எங்கு போயிற்று? தமிழின் ஆயுள் முடிந்ததென்பீரோ? அவ்வாறு கூறற்க. அதைரியப்படாது தமிழை விருத்தி பண்ண வேண்டியதே சுதேசாபிமானிகளின் கடமை. சுருங்கக்கூறின் ஈழத்தவரான தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப்பாஷை என்ற நூல் தமிழ்மொழி வரலாற்று உருவாக்கத்திலும் தமிழ் இலக்கிய வரலாற்று உருவாக்கத்திலும் முக்கியமான நூலாகும்.

கலாநிதி செ. யோகராசா
மொழித்துறை – கிழக்குப் பல்கலைக்கழகம்