தமிழகம் : ஈழ அகதிகளின் வாழ்வும் அலைவும்

கட்டுரை : லிவின் அனுஷியன்

50 feared dead in Christmas Island asylum-seeker boat crash
– The Australian july 9 2012

Sri Lankan Tamils’ bid to cross over to Australia foiled
– The Hindu August 30 2012

Fifty-five Sri Lankan Tamil refugees were detained by the police on Tuesday night while attempting to travel to Australia illegally
-The Hindu October 11 2012

3 Sri Lankan refugees held
-The Hindu October 15 2012
தொடர்ந்து தமிழக ஊடகங்களில் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் கைது என்னும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஊடகங்களில் வராத செய்தி ஒன்றும் இருக்கிறது. கைதின் பின்னர் நடக்கிற விசாரணைகளும், விசாரணையின் போது நடக்கிற அடி உதைகளும் செய்திகளில் வருவதில்லை. ஏஜெண்டுகளிடம் மீட்கப்பட்ட அகதிகளின் பணத்தையும், அவர்களுக்கு திருப்பித்  தருவது பற்றி பின்னர் எவரும் வாய் திறப்பதில்லை.

ஈழத் தமிழ் அகதிகள் ஏன் தமிழகத்தை விட்டு தப்பிச் செல்ல நினைக்கிறார்கள்? அதற்கான மாற்று செயல் திட்டமாக இந்திய, தமிழக அரசுகள் எதனை முன் வைத்திருக்கின்றார்கள்? அகதிகளுக்கான முற்றான உரிமையை எப்பொழுது கொடுப்பார்கள்  என்று அறிவுத் தளத்தில் தமிழகத்தில் எந்த விவாதமும் நடைபெற்றதாகவோ முன்னெடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.

தமிழீழப் போராட்டத்தின் இறுதி நாட்களில் முத்துக்குமாரின் மரணித்திற்குப் பிறகு தமிழகத்தில் எழுந்த  உணர்ச்சியலையையும்,  நடந்த போராட்டங்களையும் முகாம்களில் இருந்து மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த ஈழத்தமிழர்கள், ஒரு சிறு போராட்டத்தையேனும் நடத்த முயன்றால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து, இந்திய தமிழக அரசுகளின், ஈழத் தமிழர் மீதான ஒடுக்குமுறையின் மௌன சாட்சிகளாக அன்று குமுறிக்கொண்டிருந்தார்களே, அது யாருடைய வெற்றி?

0    0    0
தமிழ் நாட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்கள் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன. அகதி முகாமில் இருக்கும் ஒரு அகதி குடும்பத்தில் தலை ஆளுக்கு (குடும்பத்தில் இருக்கும் தந்தை ஃ தந்தை இல்லாத குடும்பத்திற்கு தாய்) 1000 ரூபாய்களும், பதினான்கு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 750 ரூபாய்களும் அதன் கீழ் உள்வர்களுக்கு 400 ரூபாய்களும் ஒரு மாதத்திற்கான உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. சாதாரணமாக  சிறு குடும்பத்திற்கு (தாய் தந்தை இரு குழந்தைகள்) 2550 ரூபாய் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 70,000 க்கும் மேற்பட்ட அகதிகள் இருப்பதாக செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன. மொத்த விகிதத்தை தோராயமாகக் கணக்கிட்டால் சுமார் 5 கோடி இந்திய ரூபாயை தமிழக அரசு செலவழிக்கிறது. ரேஷன் கடைகளிலும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களுக்குத் தர வேண்டிய எல்லாச் சலுகைகளும், இலவச அரிசி உட்பட வழங்கப்படுகிறது.

இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 28 ரூபாய்களும் கிராமத்தில் வசிக்கும் நபருக்கு  22.50 ரூபாய்களும் போதும் என்று இந்திய திட்டக் கமிசன் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கணக்குப் போட்டிருக்கிறார் . இப்படியிருக்க இத்தனை சிறந்த தேசத்தில் இவ்வளவு சலுகைகள் தந்தும் ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிற்கு கோபம் வராமல் என்ன செய்யும்?
0    0    0
கீழே உள்ள துண்டறிக்கை தமிழகத்தின் எந்தவொரு அகதி முகாமிலும் உள்ள சாதாரண பெட்டிக்கடையில் அனைவரின் பார்வையிலும் படும்படியாக ஒட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஓர் அறிவிப்பு
1.இலங்கைத் தமிழர்கள் படகுகளில் ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் கூக்கூ தீவுகளுக்கு முறையான கடவுச்சீட்டுஃபயண ஆவனங்கள் இல்லாமல் முயற்சிப்பது பற்றி தகவல்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளன. கடலில் இதுபோன்ற சட்ட விரோத பயணங்கள் குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. போலி ஏஜெண்டுகள் மற்றும் இடைத்தரகர்கள் அகதிகள் முகாம்களில் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலித்து அவர்களை ஆஸ்திரேலியா அனுப்புவதாக கூறி ஏமாற்றுகிறார்கள்.

2.சமீபத்தில் கிறிஸ்துமஸ் தீவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்று இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி அதில் பலர் மரணமடைந்த செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னெச்சரிக்கையாக இது போன்ற கும்பல்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறையினர் ஏஜெண்டுகளைத் தேடிக் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து ஆள் கடத்தும் குற்றச் செயல்களில் ஈடுபட முடியாதவாறு கட்டுப்படுத்த மற்றும் கண்காணிக்க இங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள்.

3.சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாக செல்வதற்காக இடைத்தரகர்கள் ஏற்பாடு செய்யும் படகுகள் கடற்பயணத்திற்கு ஏற்றவை அல்ல. இது போன்ற பயணங்கள் ஆபத்தானவை. ஆஸ்திரேலியா அல்லது கனடாவை சென்றடைந்தாலும் அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளது. இதுபோன்ற பயணங்களை ஏற்பாடு செய்பவர்களும் அவ்வாறான பயணங்களை மேற்கொள்வோரும் இந்திய எல்லையில் பிடிபட்டால் முகாம்களில் அடைக்கப்படுவர்.

4.இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடல் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் மற்றும் போலி ஏஜெண்டுகளிடம் இரையாகாமல் இருக்குமாறும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.

5.கள்ளத்தனமாக வெளிநாட்டிற்கு அனுப்ப அல்லது செல்ல முயற்சி தெரிவிப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் 044-28…. மற்றும் 94444….என்ற எண்ணுக்கு தகவல் தரலாம். சரியான தகவலாக இருந்து சம்பந்தப்பட்ட நபர்கள் பிடிபட்டால் தகவல் கொடுப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும். அவர்களது அடையாளம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜையாக நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி, நாட்டையும் உறவையும் இழந்து அகதிகளாக ஆக்கப்பட்ட தமிழர்கள், அதை விட மோசமாக, சிறை என்று பெயர் மட்டும் இடப்படாத, தமிழக அகதி முகாம்களில் அடைபட்டிருக்கிறார்கள்.

பெரும் நம்பிக்கையோடு படகேறியவர்கள், இந்தியாவில் அவர்களின் இருப்பிற்கான நிலமும், சாதாரண மனிதர்களுக்கு உரிய உரிமைகளும், இயல்பான வாழ்வும்  இல்லாத நிலையில் மீண்டும் அங்கிருந்து படகேறுகின்றனர்.

ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்லும் எந்தவொரு ஈழத்தமிழனையும் கேட்டுப் பார்த்தால் பெரும்பான்மையானவரிடம் இருந்து வரும் பதில் “இங்க இருந்து என்ன செய்யப் போகிறோம்? வேறெங்க போனாலும் உழைச்சு குடும்பங்கள காப்பாத்தாலாம்”.

இவர்கள் சொல்லும் உழைப்பு என்பது வசதியான வாழ்க்கைக்கான காரணம் அல்ல. சுதந்திரமானவர்களாக உலவ வேண்டும். யாருடைய கண்காணிப்பும் எந்த நிலையிலும் தங்கள் மேல் இல்லை என்கிற நிம்மதி உணர்வோடு வாழவேண்டும், என்ற விருப்பங்கள் அவர்களை இறுதியாக இதனையும் முயற்சிக்கலாம் என்று உந்தித் தள்ளுகின்றன.

0    0    0

eelaagathikal1
முள்வேலிகள் இல்லைத்தான். ஆனால், குடிசைகள் வேயப்பட்டு முகப்புக்கு தார் சீட் போடப்பட்ட பத்துக்கு பத்து அறைகளே முகாம் வீடுகள். அறைக்கு மேலாக முற்றம் எடுத்து சில வீடுகளில் தார்பாய் அல்லது கூரையினால் வேலி அமைக்கப்பட்டிருக்கும். அடிப்படை தேவைகளுக்கான எந்தவொரு பொருளும் இல்லாத வீடுகளும் உண்டு. சில முகாம்களில் சேலை அல்லது லுங்கிகளே அறைச்சுவர்களாகவும் இருக்கின்றன.

முகாம்களில் இருக்கும் ஆண்களிடம் இயல்பான விடயங்கள் உண்டு. ஒன்று கடின உழைப்பாளிகள், இரண்டு, உழைப்பின் களைப்பொதுக்க குடி. 99 சதவீத ஆண்கள் கூலி வேலைக்கே செல்கிறார்கள். வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது , கட்டிட வேலைகளுக்குச் செல்வது, கல் உடைத்தல், சமையல் தொடர்பான வேலைகளுக்குச் செல்லுதல் என இடத்திற்கு இடம் கிடைக்கும் தொழில்களையே அவர்கள் செய்கிறார்கள். எழுத்தறிவு பெற்ற சமூகமாயிருப்பினும், முழுமையான கல்வியைத் தொடரமுடியாது போனவர்கள். அவ்வாறே போனாலும் இலங்கை அகதி என்ற காரணத்திற்காக வேலைகள் வழங்கப்படாது ஒதுக்கப்பட்டவர்கள்.

முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை நான்கு தலைமுறைகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொருவருக்கும் விரிந்திருக்கும் மன உலகங்கள் முற்றிலும் வேறானது. அவர்கள் வாழ்வோடு வாழ்ந்த நிலத்தின் தன்மை கொஞ்சம் குழப்பங்களையே ஏற்படுத்தச் செய்யும். முதல் தலைமுறை ஈழப்போராட்டம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த எண்பதுகளுக்குப்பிறகு, தொண்ணூறுகளின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரையிலான காலங்களில் ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்த தலைமுறை. இவர்கள் பெரும்பாலும் தங்கள் இளவயது முதல், திருமணம் வரை ஈழத்தில் கழித்து பின்னர் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இரண்டாவது தலைமுறை கொஞ்சம் குழப்பான தலைமுறை. ஈழத்தில் பிறந்து தங்கள் பால்யத்தை தாண்டி வளர்நிலைப் பருவத்தையெல்லாம் இந்தியாவில் தொடங்கியவர்கள். மூன்றாவது தலைமுறை தமிழக அகதி முகாம்களிலே பிறந்து வளர்ந்தாலும் தங்களை ஈழத் தமிழர்களாக உணர்ந்து கொண்டு இந்தியாவில் வாழ்பவர்கள். நான்காம் தலைமுறை இறுதிப்போருக்கும் பிறகான காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்து அதனுள் ஒன்றிப் போக இயலாமல் இருப்பவர்கள்.

போர் ஓய்ந்த இன்றைய காலத்தில் மேற்சொன்ன நான்கு தலைமுறைகளும் குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக விளங்கி இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் இந்தியாவில் அல்ல.

அது சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த காலம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 1990களின் நடுப்பகுதி அப்பொழுது அகதி முகாம்களில் இலங்கையில் தமிழர்களிடத்தில் எடுத்த ஆவணப்படத்தை காட்டுவார்கள். அதில் தமிழர்கள் எல்லாம் சதாரண வாழ்க்கைக்குத் திரும்பி விட்ட மாதிரியும் ஈழத்தில் நிம்மதியான வாழ்வை மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பது மாதிரியும் அங்கே சென்றால் தமிழர்களுக்கு உயிர் பயம் எதுவும் தேவை இல்லை என்பது மாதிரி இருக்கும். இதன்மூலம் ஈழ மக்களை இலங்கைக்கு அனுப்புவதை மறைமுகமாக ஹநீங்கள் வெளியேறுங்கள்ஹ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த எவரேனும், தமிழகத்திற்கு வருகை தருவதாக இருந்தால் அவர்கள் வரும் முதல் இரு நாட்களிலிருந்து முகாம்களில் காவல் பலப்படுத்தப்படும். முகாமில் இருப்பவர்கள் முகாமை விட்டு வேறெங்கும் செல்ல இயலாது. கூலி வேலைக்குச் செல்லும் அப்பாவிகளே என்று அறிந்திருந்தும் அன்று வேலைக்குப் போக அனுமதி இல்லை. முகாம்களில் நடக்கும் திடீர் சோதனைகள் ஏராளம்.

அதிகாலைகளில் எந்த முன் அறிவித்தலும் இன்றி காவல்துறையினர் ஏதோ தீவிரவாதிகளைச் சுற்றி வளைத்தது போல் வந்து இறங்குவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் புகைப்பட அடையாள அட்டை (photo identity card) கொடுக்கப்பட்டிருக்கும்.நடக்கும் சோதனையில் புகைப்பட அடையாள அட்டையை சரிபார்த்து அதில் மொத்த குடும்ப உறுப்பினர்களும் இருக்கிறார்களா என சோதனையிடுவார்கள். அப்படி இல்லாதவர்களுக்கு சரியான காரணம் இருத்தல் வேண்டும்.

முன்னர் முகாம்களில் ஒரு வழக்கம் இருந்தது.வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் பெயர்களை முகாமில் வைத்திருக்கும் பதிவேட்டில் பதிந்து விட்டு வேலைக்குச் செல்ல வேண்டும். சில முகாம்களில் எட்டு மணிக்குள் வீடுகளுக்கு திரும்பியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் இருந்தன.

கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எவரும் கல்லூரியில் இருந்து தங்கி படிப்பதற்கான அத்தாட்சி கடிதம் ஒன்றை கல்லூரி முதல்வரிடம் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் முகாம் பதிவு வெட்டப்படும் அகதிப் பணமும் கொடுக்கப்பட மாட்டாது. அகதிகளின் பெரும்பாலான குழந்தைகள் அரசு பள்ளிகளிலேயே படிக்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை ஒடுக்கப்படுகிற சமூகங்களுக்குப் பொதுவானது. சாதிய மனமுள்ள ஒவ்வொரு ஆசிரியனுக்கும் ஈழ அகதி மாணவன் என்பது மற்றுமொரு தலித் ஆகவே தெரிகிறது.

கல்லூரி மற்றும் பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் கிழமையின் இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தங்களின் அன்றாட தேவைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் படிப்பு தேவைகளுக்காகவும் கூலி வேலைக்குச் செல்வது இயல்பு. ஒரு கட்டத்தில், படித்து மட்டும் என்ன செய்வதென்ற நிலையும்? தெளிவற்ற எதிர்காலத்தை நோக்கியிருப்பதாலும் பெரும்பாலும் எல்லோரும் படிப்பை பள்ளியிலேயே இடை நிறுத்தி விடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஈழ அகதிகளுக்கு அரசு தொழிற்துறை கல்லூரியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. சுமார் இருபது மருத்துவ இடங்கள் மற்றும் பொறியியல் இடங்கள் வழங்கப்பட்டன. ஏற்கனவே இருக்கும் தமிழக மாணவர்களின் இடஒதுக்கீட்டை பாதிக்காத வகையில் கூடுதலாக ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதை அறியாமல் தொடரப்பட்ட தவறான ஒரு வழக்கில் ஈழ மாணவர்களுக்கு இருந்த இடங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த தவறான தீர்ப்பை எதிர்ந்து ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக தொண்டு நிறுவனம் சார்பாக வழக்காடியவர் சுப்பிரமணிய சுவாமி என்பது ஒரு முரண்நகைதான்.

இடஒதுக்கீட்டை ரத்து செய்தது தவறுதான் என்று தீர்ப்பு வந்தாலும் இன்றுவரை மீண்டும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொறியியற் கல்லூரிகளில்  தமிழக மாணவர்களால் நிரப்பப்படாமல் எஞ்சி இருக்கும் கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையில் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக் காலத்தில் விடுதலை சிறுத்தைகள் சேர்ந்த ரவிக்குமாரின் முயற்சி ஓரளவேணும் ஈழத் தமிழர்களின் நிலைகளை திமுக அரசுக்கு எடுத்துச் சென்றது. குடியுரிமை வழங்குதல் உட்பட பலதரப்பட்ட நடவடிக்கைகளை ரவிக்குமாரின் அறிக்கை முன்மொழிந்திருந்தாலும் எதுவும் நடைமுறைபடுத்தப்படவில்லை. ஓட்டுநர் உரிமம் சில காலத்திற்கு கொடுக்கப்பட்டது. அதுவும் சிறிது நாட்களில் முன்னறிவிப்பின்றி தடுத்து நிறுத்தப்பட்டது.

வெளிநாட்டு நிதி உதவி பெற்று வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக (offer) தொண்டு நிறுவனம் குறிப்பிடத் தக்க உதவிகளை முகாமில் செய்து வருகிறது. வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து அடிப்படைத் தேவையான மருத்துவ உதவிகள், முகாம்களில் கழிப்பறை கட்டுதல், கர்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை அளித்தல், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், ஆற்றுப்படுத்துதல் என இதன் நிகழ்வுகள் தொடக்க காலத்தின் முதல் இருந்து வருகிறது. இன்றும் இவையாவும் தொடர்ந்து முறைப்படி நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறியே!

ஈழ முகாம்களில் பெண்களின் நிலைகள் தனியாக நோக்க வேண்டியவை. ஆண்கள் அற்ற குடும்பத்தில் குழந்தைகள் இருக்கும் இளம் விதவைகள் மற்றும் வயதான பெண்களின் இருப்பு என்பது பரிதாபத்தின் உச்ச நிலையாக இருக்கிறது. இளவயதுத் திருமணங்களினால், பெண்களின் கல்வி இடைநிறுத்தப்படுகிறது. எதிர்காலம் அர்த்தமற்று இருக்கும்போது திருமணம் செய்து கொள்வது மட்டுமே  வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். சாதி கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது பெரும் ஆறுதல்.

முகாமில் நடக்கும் சின்னச் சின்னச் சச்சரவுகள் சண்டைகள் எல்லாம் போலீசிடம் சென்றாலும் நேரடியாக க்யூ பிரிவு போலிசுக்கும் தகவல் தரப்படும். க்யூ பிரிவு போலீசே தன் இறுதித் தீர்ப்பை ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி நிரந்தர தீர்வை வழங்கும். முகாமில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.  முகாமில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவரே பொறுப்பு. விசாரணைகள் சமயங்களில் அவரிடமே நடைபெறும்.
2
தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலான ஈழ அகதிகள் கனடா அல்லது ஐரோப்பா நாடுகள் அல்லாமல் ஆஸ்திரேலியாவை தேர்ந்தெடுத்து செல்ல குறிப்பான காரணங்களில் ஒன்று மேற்கத்தைய நாடுகளுக்கு செலவுகள் அதிகம் என்பதுதான். ஆஸ்திரேலியா செல்வதற்கு ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்ச ரூபாய் போதும். உலக வரை படத்தில் இலங்கை தமிழ்நாடு ஆஸ்திரேலியா மூன்றையும் கடல் மட்டுமே பிரித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முக வடிவம் ஆஸ்திராலியாவை தொலைவில் பார்த்துக் கொண்டிருக்கிறது. தெளிவான கடல் வழி மார்க்கம்.

தாய் நிலம் என்பது தோற்கடிக்கப்பட்டு அடிமைப்பட்ட நிலையில் உலகின் வேறெங்கான அடிமைப்படுத்தாத நிலத்தை தேடிச் செல்லும் பறவைகளாக ஈழ அகதிகள் மாறிவிட்டார்கள். ஆனால் இந்த பயணம் எளிமையானதாக இருப்பதில்லை. உயிரைப் பணயம் வைக்க வேண்டும். முறையான பயண உரிமம் அவர்களிடம் இருப்பதில்லை. தன் மழைக்காலத்திற்கான உணவை சேர்த்து வைத்த பறவையின் சேமிப்பை போல் தான் சேர்த்து வைத்த அத்தனையும் தன் கண் முன்னே கரையக் காணுதல் வேண்டும். தன் மனைவியை தாயை குழந்தைகளை நம்பிக்கை என்னும் அடிப்படையில் மட்டும் விட்டு காணா தேசத்துக்கு உயிர் பயத்தோடு சென்று உழைத்து வர வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக அடைக்கலம் தேடிச் செல்பவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமென்றில்லை.  பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் என அதன் பட்டியல் நீள்கிறது. அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. 2010ஆம் ஆண்டு முதல் ஆள் கடத்தல் மேற்கொள்ளலை தடுப்பது என்ற போர்வையில் ஹபசிபிக் தீர்வுஹ (Pacific solution) கொள்கையை வகுத்திருக்கிறது. அதன் படி அகதிகள் வௌ;வேறான தடுப்பு முகாம்களில் (Detention centers) வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.

அகதி உரிமை கோரி வரும் மக்கள் எவரும் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற ராணுவ குடில்கள் போன்று இருக்கும் நவ்ரு (Nauru) மற்றும் மானுஸ் (Manus) தீவுகளில் ஐந்து வருடங்கள் தனித்து தடுத்து வைக்கப்படுகிறார்கள். வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விசாரணைகள் முடிந்த பின்னரும்,  தீவுகளை விட்டு வெளியே செல்ல இயலாது. அடிப்படை வசதிகளற்ற தீவுகளில் வாழ நேரும் மக்கள் தொடர் மனச் சிதைவுக்கும் உளவியில் பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள்.இவ்வாறான தீவுகளின்  சீர்கேடான சூழ்நிலைகளுக்கு எதிராக கொதித்தெழும் அகதிகள் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்படலாம் என குடிபெயர்வுத் துறை அமைச்சர் கிரிஸ் ப்ரொவ்ன் தெரிவித்திருக்கிறார். நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு US $  3,300 அளிப்பதாகவும் அரசு அறிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலியா 1951 சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இன்று அது இலங்கை அரசுடன் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் யாவும் அந்த உடன்படிக்கையை மீறும் செயலன்றி வேறெதுவுமில்லை.இலங்கையின் கடல் நீர்ப் பரப்பில் 2300 அகதிகள் தடுக்கப்பட்டு விட்டதாக இலங்கை உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த இரு மாதங்களில் மட்டும் முறையற்று குடிபெயர முயன்ற1000 பேரை கைது செய்து இருப்பதாக இலங்கை கப்பற்படை துணைத் தளபதி ஜெயந்த் கொலம்பேஜ் தெரிவித்திருக்கிறார். அதைப்போல் ஆஸ்திரேலிய அரசு இந்திய அரசுக்கு அகதிகள் நிமித்தமாக கொடுக்கும் அழுத்தமே தமிழகத்தில் இருந்து வெளியேற நினைக்கும் இத்தனை ஈழ அகதிகளை தடுத்தலுக்கும் கைதுகளுக்கும் காரணமாக உள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள், சர்வதேச அகதிகள் உடன்படிக்கைக்கு மாறாக விசாரணைக்கும் துன்புறுத்துலுக்கும் ஆளாகிறார்கள். மனித உரிமைகள் கண்காணிப்பு என்னும் அமைப்பு 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட அகதிகளின்நிலை குறித்து நடத்திய ஆய்வில் இதனைத் தெரிவித்திருக்கிறது.

2010ஆம் ஆண்டில் எட்மண்ட் ரைஸ் செண்டர் என்னும் ஆஸ்திரெலிய கத்தோலிக்க அமைப்பு நடத்திய விசாரணையில் திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் யாவரும் கைது செய்யப்படுகிறார்கள். அதில் சிலர் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டது. இலங்கை அதிகாரிகள் தங்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் ஈழத் தமிழர்களை விடுதலைப்புலிகளின் அனுதாபிகளாகவும் சிங்களவர்களை துரோகிகளாகவும் பார்க்கிறார்கள்என்பதை தன் அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது. அக்குழு நடத்திய ஆய்வில் ஆஸ்திரேலிய அரசால் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 9 பேர் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. திரும்பிப் போன அகதிகள் இரண்டாம் முறையும் வேறுநாடுகளுக்கு தப்பிச் செல்லுதல் என்பதும் கண்கூடானது.

உலகெங்கிலும் புகலிடம் கோரும் அகதிகளை திருப்பி அனுப்புதல் துரிதமாக முடக்கிவிடப்பட்டு சட்டங்களும் இயற்றப்பட்டு வருகிறது. அமெரிக்க ஐரோப்பா நாடுகளில் இதுவொரு தலையாய  பிரச்சனையாக மாறி வருகிறது. இஸ்ரேலிய அரசு தன் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான எரித்திரியர்கள், சூடானியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களை விரட்டியடிக்க Go back home என்னும் நடவடிக்கையை செய்து வருகிறது. கிரீஸில் மட்டும் 4500 காவல்துறையினர் முறையற்ற புகலிடம் புகுந்தவர்களை கண்டு பிடிக்க பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். இதுவரை 6700 பேர் அந்நியர்களாக அடையாளம் காணப்பட்டு அதில் 1555 பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் உலகெங்கும், தமது சொந்த நிலங்களில் மறுக்கப்பட்ட வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தேடி அகதிகள் பயணித்தபடியே இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, சொந்த நிலத்திலும், சொந்தம் என நம்பி வந்த தமிழக நிலத்திலும் மறுக்கப்பட்ட உரிமைகளை, நிலம், மொழி, பண்பாட்டுத் தொடர்புகள் ஏதும் அற்ற உலகின் ஏதேனும் ஒரு நாட்டில் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:world socialist web site