ஈழத் தமிழ் தேச உருவாக்கத்தில் ஒரு படி

மீராபாரதி

மார்கழி மாதம் 7ம் நாள் மாலைப் பொழுதில் எழுநா வெளியீடுகளின் அறிமுகம் டொரன்ரொவில் நடைபெற்றது. அருண் மொழிவர்மன் அவர்கள் தனது வரவேற்புரையை வாசிக்க நிகழ்வு ஆரம்பமாகியது. பேராசிரியர் சேரன் அவர்கள் தலைமையுரை வகித்தார். இவர் தனது உரையில் எவ்வாறு தொலைக்காட்சிகளின் வருகை திரையரங்குகளை இல்லாமல் செய்து விடவில்லையோ அதேபோல் கையடக்க மின்நூல்களின் வருகை நூல்களின் வருகையை இல்லாது செய்து விடாது. மின்நூல்களில் வாசிப்பது நாற்பது வீதம் வாசிப்பின் வேகத்தை குறைப்பதுடன் கிரகிக்கும் தன்மையையும் குறைக்கின்றது என்றார். அந்தவகையில் சில இளைஞர்களின்(?) கூட்டு முயற்சியில் உருவான எழுநா பதிப்பகம் முக்கியத்துவமானது. இன்றைய அரசியல் தேவைகளுக்காக நமக்கு ஏற்றவாறு நமது மரபைப் பேணிக் காப்பது என்பது மாகாவம்சத்திற்கு மாற்றாக இன்னுமொரு தமிழ் மகா வம்சத்தை பொய் புரட்டுகள் மற்றும் கற்பனைகளுடன் உருவாக்குவதல்ல. இதனால் எந்தப் பயனுமில்லை. இதற்கு மாறாக நமது மரபுகளைப் பேணிக் காக்கும் முயற்சியில் பழைய நூல்களின் மீள்பதிப்பு மிக முக்கியமானது. ஏனெனில் தேசத்தைக் கட்டி எழுப்புவதில் பழயை வரலாறுகள் முக்கியமானவை. அந்தவகையில் சுவாமி ஞானப்பிரகாசரின் பண்டைத் தமிழர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை இயற்றிய தமிழர் பாசை, அ.கௌரிகாந்தன் எழுதிய யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் ஆகிய நூல்களின் மீள்பதிப்புகள் முக்கியமானவை என்றார்.

ஈழத் தமிழ் தேச உருவாக்கத்தின் குறியீடாக இந்த மூன்று நூல்களின் வேர்களும் கிழக்கு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை கொண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இது தற்செயலானதா அல்லது திட்டமிட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் எழுநா பதிப்பகத்தின் சரியான தெரிவுகளாகும் இவை. இவற்றைத் தவிர வன்னி, முஸ்லிம், மலையக எழுத்தாளர்களினது மட்டுமல்ல சிங்கள எழுத்தாளர்களினதும் எழுத்துக்களை பதிப்பதித்து வரலாறு படைத்துள்ளது. இவர்கள் முயற்சி மேலும் தளைத்தோங்க அனைவரும் பங்களிப்போமாக.

பொன்னையா விவேகானந்தன் அவர்கள் தி.த.சரவணமுத்துப்பிள்ளை இயற்றிய தமிழர் பாசை நூல் தொடர்பாக அழகாக இரசிக்கும் படியான அறிமுகத்தை செய்தார். சரவணமுத்துப்பிள்ளை திருகோணமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 120 வருடங்களுக்கு முன்பே பகுத்தறிவின் அடிப்படையில் தமிழ் மொழியின் வரலாற்றை சமய ஆதிக்கத்திலிருந்து கடவுளிடமிருந்து பிரித்து பார்த்தமை ஆச்சரியமானது. அகத்தியம் சிவன் தந்தது என்பது பொருந்தாதது. ஏனெனில் இலக்கணம் இல்லாமல் இலக்கியம் வந்திருக்க முடியாது. ஆகவே அகத்தியருக்கு முதலே தமிழ் இருந்திருக்க வேண்டும் என தன் வாதத்தை அன்றே முன்வைத்துள்ளார் சரவணமுத்துப்பிள்ளை. மேலும் தமிழ் மொழியின் வரலாற்றை மிகத் தெளிவாக பகுத்தறிவின் அடிப்படையில் சிறிய கட்டுரையிலையே அவர் முன்வைத்துள்ளார். இது மட்டுமின்றி பாரதியாருக்கு முன்னமே சுயமாக பெண்ணிய சிந்தனையை “தத்தைவிடு தூது” என்ற கவிதையாக முன்வைத்தமை இரட்டிப்பு ஆச்சரியமானது என்றார் விவேகானந்தன்.

பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் சுவாமி ஞானப்பிரகாசரின் பண்டைத் தமிழர் தொடர்பான அறிமுகத்தை செய்தார். பல்வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஞானப்பிரகாசர் தனது சமய பங்களிப்புக்கு அப்பால் தமிழ் மொழிக்கு முக்கியமான பங்களிப்பை செய்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் தமிழ் மொழி தொடர்பான இவரது ஆய்வுகள் பொது மக்கள் வாசிக்கக் கூடிய வகையில் பத்திரிகைகளில் வெளிவந்தமை முக்கியமானது. இக் கட்டுரைகளை இலங்கையைச் சேர்ந்த தமிழகத்தில் வசிக்கின்ற முனைவர் ஜெ.அரங்கராஜ் அவர்கள் தொகுத்துள்ளார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழுக்கு பங்களித்த ஞானப்பிரகாசருடைய படைப்புகளை ஒரு நூல் வடிவில் படிக்க கிடைக்கின்றமை மிகவும் பயனுள்ளது என்றார்.

எஸ்.கே.விக்கினேஸ்வரன் அவர்கள் கௌரி காந்தனின் யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் என்ற நூலை அறிமுகம் செய்தார். மட்டக்களப்பை பூர்விகமாக கொண்ட விபுலானந்தர் தமிழ், இசை, அரங்கியல் என்பவற்றில் முக்கியமான பங்காற்றியது மட்டுமில்லாமல் யாழில் இயக்கிய வாலிபர் காங்கிரசிலும் இணைந்து அரசியல் பங்காற்றியுள்ளார். ஆறுமுக நாவலரினால் ஆரம்பத்தில் ஈர்க்கபட்ட போதிலும் பிற்காலங்களில் சாதியத்திற்கு எதிராக நின்றவர் விபுலானந்தர் அவர்கள். இந்த நூல் விடுதலைப் புலிகள் ஆட்சி ஆரம்பமான 90களின் ஆரம்பத்தில் அவர்களின் தூண்டுதலினால் வெளியானது ஒரு ஆச்சரியம். முதல் இரண்டு நூல்களை எழுதியவர்களுக்கு சில பிரச்சனைகள் இருந்திருக்கலாம். ஆனால் கௌரி காந்தனுக்கு இருந்த கட்டுப்பாடு அவர்களுக்கு இருந்திருக்க முடியாது. இதனை நூல் ஆசிரியரே தனது எழுநாவிற்கான பதிப்புரையில் குறிப்பிடுகின்றார். விடுதலைப் புலிகளினால் வெளியீடப்பட்டபோதும் அவர்களுக்கு உள்ளேயே இந்த நூலுக்கு ஆதரவான எதிரான போக்குகள் இருந்ததாக கூறினார்.

இந்த நூலின் அறிமுக நிகழ்வொன்றை கடந்த வருடம் கரவெட்டியில் குகணேஸ்வரன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். அக் கூட்டத்தில் இந்த நூல் தொடர்பான ஆரோக்கியமான உரையாடல் வாதப் பிரதி வாதம் நடந்தது. அந் நிகழ்வில் இந்த நூல் தமிழ் தேசியத்திற்கு ஆதரவானதாக குற்றம் சாட்டப்பட்டதாக நினைவு. அதைப் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் பயணத்தில் இருந்ததால் முடியவில்லை. மீள வாசித்து விரிவான பதிவொன்றை இந்த நூல் தொடர்பாக வைப்பது பயனுள்ளது எனக் கருதுகின்றேன்.

இறுதியாக அருண்மொழிவர்மன் எழுநாவின் நோக்கங்களை குறிப்பிட்டார். இதனை நீங்கள் எழுநாவின் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

இவர்களது நிலைப்பாட்டின் படி தமிழ் சமூகத்தில் வர்க்க தேசிய சாதிய சிந்தனைப் பள்ளிகளின் பங்களிப்பே இருக்கதாக குறிப்பிடுகின்றனர். இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே அவர்களுடன் உரையாடினேன். அவர்களிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்கவில்லை. இக் கேள்வியை பெண்கள் கூட்டம் ஒன்றில் கேட்டபோது இவர்களது கூற்றை மறுக்கும் வகையில் ஒளவையும் பார்வதி கந்தசாமி அவர்களும் கருத்துரைத்தார்கள். ஆகவே அக் கேள்வியை இங்கு மீளவும் பதிவு செய்கின்றேன். பேராசிரியர் சேரன் மற்றும் விக்கினேஸ்வரன்  மற்றும் பெண்ணிய ஆர்வலர்களும் இதற்கான பதிலைத் தரலாம் என நம்புகின்றேன்.

இவர்கள் மார்க்சிய, தலித்திய (சாதிய), தேசிய சிந்தனைப் பள்ளிகள் தொடர்பாக குறிப்பிடுகின்றனர். ஆனால் பெண்ணிய சிந்தனைப் பள்ளி தொடர்பாக குறிப்பிடவில்லை. தமிழ் தேச உருவாக்கத்தில் பெண்ணிய சிந்தனைப் பள்ளியின் பங்கு இல்லையா?
இக் கேள்வியை கூட்டத்தில் கேட்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. ஆகவே இங்கு முன்வைக்கின்றேன்.

இறுதியாக எழுநாவினது முயற்சிகளையும் அருண்மொழிவர்மன் இந்த நூல்களின் அறிமு நிகழ்வை இங்கு நிகழ்த்தியதையும் வாழ்த்தி வரவேற்போம்.
மீராபாரதி

08.12.2014