பண்டைத்தமிழர்: நூல் அறிமுகத் திறனுரை

கனடாவில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்திய நூல் அறிமுகத் திறனுரை

முன்னுரை:

தமிழர் புலம்பெயர் நாடான கனடாவிலே இன்று ஒரு புதிய நூல் அறிமுகம் செய்யப்படுகிறது. இப்பணியைக் காலம் தந்த பணியாக நான் ஏற்றுள்ளேன். என் தாய் மொழியான தமிழ்மொழி பற்றியும் எனது முன்னோர் பற்றியும் எழுதப்பட்டுள்ள இந்நூல் பற்றி எடுத்துரைக்கும் வாய்ப்பை என் கடமையாகவும் உரிமையாகவும் கருதுகின்றேன். தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் கைகளில் இந்நூலைப் பக்குவமாகச் சேர்க்கும் பொறுப்பையும் நான் ஏற்று உரையாற்ற முன்வந்துள்ளேன். அந்தவகையில் மூன்று வகையாக என் உரையைக் கட்டமைத்துள்ளேன். தொகுப்பாசிரியர், நூலாசிரியர், நூல்திறன் என அவை அமையும்.

 

தொகுப்பாசிரியர்:

ஈழத்து அறிஞரான சுவாமி ஞானப்பிரகாசரது ஆதித்தமிழ் குறித்தும் தமிழர் குறித்துமான ஆய்வுக்கட்டுரை “பண்டைத் தமிழர்” என மகுடமிட்டு ஒரு தொகுப்பு நூலாக்கியவர்; முனைவர், ஜெ. அரங்கராஜ். இவரும் ஈழத்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகப்பட்டதாரி. தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். முது முனைவர் ஆய்வையும் நிறைவு செய்தவர். தமிழ்ப்பாடநூல்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டவர். இத்தகையதோர் ஆய்வுப் பின்புலம் கொண்ட இளவல் அரங்கராஜ் இந்நூலைத் தொகுப்பதற்கு முனைந்தமைக்கு முக்கிய காரணம் தமது முன்னோர்களின் தமிழாய்வு பற்றிய தேடலே. பதிப்புரையிலே அவரது தேடல் வெளிப்பட்டுள்ளது.

“பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலப் பகுதிகளிலும் தமிழியல் துறை சார்ந்த ஆய்வுகள் பெருகலாயின. அவ்வாய்வு முன்னோடிகளில் ஈழத்தம்மிழறிஞர்களின் ஆய்வுகள் சிறப்பிடம் பெறுவனவாயின. தமிழ் மொழியியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கண்டியில் வாழ்ந்த மாகறல் கார்த்திகேய முதலியார் முன்னின்றார். வேர்ச்சொல் ஆய்வுகளில் பல தமிழியல் அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் சுவாமி ஞானப்பிரகாசர்”

இதனால் மதுரைத் தமிழ்ச் சங்க செந்தமிழ் இதழில் வெளியான சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக ஆக்கியுள்ளார். இக்கட்டுரைகள் 1933, 1935, 1938, 1940, 1941, 1943, 1944 ஆண்டுகளில் வெளிவந்தவை, ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்னர் செந்தமிழ் இதழில் வெளிவந்தவை. அவற்றை இன்று நாம் தேடிப்படிப்பது கடினம். ஆனால் இந்தநூல் நூல் தொகுப்பு எளிதாக எம் கைக்கு வந்து படிக்கத்தூண்டுகிறது. ஆய்வாளர்களுக்கும் தேடலை எளிதாக்கியுள்ளது.

இந்நூலின் அணிந்துரையில் அரங்கராஜின் பணியின் முனைப்பையும் திறனையும் நான் பதிவுசெய்துள்ளேன். ஆய்வுகள் செய்ய எண்ணும் தமிழாய்வாளர்களுக்கு இளைய தலைமுறை எவ்வாறு துணை புரியலாம் என்பதை இந்தத் தொகுப்பு நூல் விளக்குகிறது. தமிழர் பற்றியும், தமிழ்மொழி பற்றியும் வருங்காலத்தில் பிறமொழியாளர் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது முன்னைய தமிழறிஞர்களுடைய மூல ஆய்வுகளையும் படித்தறிய வேண்டும். காலத்தின் தேவை அறிந்த முன்னோடி வழிகாட்டியாக அரங்கராஜ் திகழ்கிறார். தமிழார்வமும் ஆய்வுப் பின்புலமும் நாட்டுப்பற்றும் அவருக்கு இப்பணியைத் தொடர என்றும் துணை நிற்கும்.

 

நூலாசிரியர்:

நூலாசிரியர் சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்ந்தகாலம் 1875-1947 வரையாகும். இவர் பிறப்பிடம் ஈழத்திலுள்ள மானிப்பாயாகும். தந்தை பெயர் சுவாமிநாதபிள்ளை. ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தாயார் பெயர் தங்கமுத்துப்பிள்ளை. ஞானப்பிரகாசருக்கு பெற்றோர் இட்ட பெயர் வைத்திலிங்கம். இவர் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது தந்தையார் இறந்துவிட்டார். விதவையான தாயார் பின்னர் பெற்றோர் விருப்பப்படி கத்தோலிக்க மதத்தைத் சேர்ந்த தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் செய்ய கத்தோலிக்க மதத்தைத் தழுவ நேர்ந்தது. அதனால் வைத்திலிங்கமும் சமயம் மாற நேர்ந்தது, தம்பிமுத்துப்பிள்ளை தமிழறிஞர். பதிப்பாசிரியராக, எழுத்தாளராக, புலவராக, பத்திரிகையாசிரியராக இருந்தவர், “சன்மார்க்க போதினி” என்னும் பத்திரிகையை ஏறக்குறைய 50 ஆண்டுகள் வெளியிட்டவர். இத்தகைய சிறிய தந்தையாரின் வழிநடத்தலே ஞானப்பிரகாசரின் கல்வியறிவுக்குத் துணைநின்றது. ஆங்கிலக்கல்விப் பேற்றையும் மானிப்பாய் மெமோரியல் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் பெற்றார். கல்வி கற்கும் போதே பஅட்டனார் அழைப்பை ஏற்று புகையிரதப் பகுதி எழுதுவினைஞர் பரீட்சையை கொழும்பு சென்று எழுதித் தேர்ச்சி பெற்றார். கண்டியில் புகையிரதநிலையத்திலே குறி பொறுப்பாளராக நியமனம் பெற்றும்ப் பணியாற்றினார்.

அவரைக் கத்தோலிக்க மதகுருவாக இணைத்துக்கொள்ள அச்சுவேலி கத்தோலிக்க குருவான அந்தோனி அடிகளார் விரும்பினார். சிறிய தந்தைக்கோ ஞானப்பிரகாசருக்கோ இத்தகைய எண்ணம் இருக்கவில்லை. ஞானப்பிரகாசர் தமிழ்மொழியுன், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலே சிறப்பான புலமை பெற்று ஒரு பத்திரிகையாசிரியராக வரவேண்டும் என்றே தம்பிமுத்துப்பிள்ளை விரும்பினார். ஆனால் யாழ்ப்பாணம் மாட்டீன் குருமடம் அதிபராக இருந்த யூல்ஸ் கொலின் அடிகளார் அடிக்கடி ஞானப்பிரகாசருக்கு கடிதங்களை எழுதி நெருங்கிய தொடர்புகொண்டு துறவற நெறியிலே விருப்புறச் செய்தார், ஞானப்பிரகாசர் தனது அரச பணியை உதறிவிட்டு யாழ்ப்பாணம் வந்து பெற்றோரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தபோது அவர்கள் அதை விரும்பவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இன்றியே ஞானப்பிரகாசர் 1896 இல் ஞானப்பிரகாசர் குருமடம் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றார். 1901இல் குருப்பட்டம் பெற்று “சுவாமி ஞானப்பிரகாசர்” ஆனார். தனது முதலாது திருப்பலியை அச்சுவேலி புனித சூசையப்பர் கோயிலில் ஒப்புவித்தபோது பெற்றோரும் வந்திருந்தனர். 1904ம் ஆண்டு தொடக்கம் நல்லூரிலேயே தமது பணியைச் செய்யத் தொடங்கினார். திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட புனித சவேரியார் கோயிலின் அண்மையில் இருந்த குருமனையைத் தனது நிரந்தர வதிவிடமாகக் கொண்டார். அவர் 43 ஆண்டுகள் நல்லூரில் வாழ்ந்ததால் “நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்” என சிறப்பாக அழைக்கப்பட்டார்.

ஞானப்பிரகாசருடைய பன்மொழியறிவும் கத்தோலிக்க அடியார்கள் ஆற்றிய தமிழ்ப்பணி பற்றிய அறிவும் புதியதொரு பணியைத் தொடக்க வழிகாட்டின. ஏறக்குறைய 72 மொழிகளைப் பற்றி அறிந்த்ருந்தார். 12 மொழிகளிலே புலமை பெற்றிருந்தார். இதனால் மொழிகளை ஒப்பீட்டாய்வு செய்வது அவருக்கு எளிதாக இருந்தது. தனது மொழிப் புலமையைப் பெற்ற வழியை வருமாறு கூறியுள்ளார்.

“இலக்கிய வளமுள்ள பண்டைய மொழியொன்றில் பாண்டித்தியம் பெறும் அறிஞர் ஒருவரால் அம் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளையும் அம்மொழியை ஒத்த வேறுமொழிகளையும் இலகுவில் கற்றுக் கொள்ளமுடியும்”

எனவே பிறமொழிகளைக் கற்பதற்கு அவருடைய தமிழ்மொழிப்புலமையே அடித்தளமாக அமைந்தது. அவரது மொழி ஆய்வு தொடர்பான கட்டுரைகளை இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மொழியாராய்ச்சி இதழ்களிலும் வெளியிட்டு வந்தார். தமிழிலும் செந்தமிழ், கலாநிதி, கலாநிலையம், கலைமகள், ஈழகேசரி. வித்தியாசமாச்சாரம் போன்ற ஏடுகளில் வெளியிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் நூல்களைப் படிப்பதைவிடப் பத்திரிகைகளையும், மாத ஏடுகளையும் மக்கள் படித்தனர். அதனால் ஆய்வுக்கட்டுரைகளும் அவற்றில் பிரசுரிக்கப்பட்டன. ஆய்வுக்கருத்துகளை உடனடியாக மறுத்து எழுத விரும்பியவரும் தமது கருத்துகளை அதே பத்திரிகைகள், ஏடுகளுக்கு எழுட முடிந்தது.

சுவாமிகளின் “சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி” ஒரு சிறந்த ஆக்கமாகும். பன்மொழிப் புலமையும் ஆழமான இலக்கிய அறிவையும் பயன்படுத்தி 1938ம் ஆண்டு தொடங்கிய பணியை இறுதி மூச்சுவரை தொடர்ந்தார். அதன் முழுமையான நூல் இப்பொழுது கிடைக்கின்றது. ஜேர்மன் நாட்டிலே பணிசெய்ய அழைக்கப்பட்ட அவர் உருவப்படம் தாங்கிய முத்தியை வெளியீட்டின் (1939) மூலமும் பெருமைப்படுத்தப்பட்டார். இலங்கை அரசாங்கம் அவர் மறைந்த பின்னர் 1981ல் முத்திரை வெளியிட்டதுடன் தேசிய வீரராகவும் பிரகடனம் செய்தது. மேலைத்தேய ஆய்வாளர் பலரோடு தொடர்புகொண்டிருந்தமையால் பல்வேறு ஆய்வுத்தரவுகளையும் அவரால் பெற முடிந்தது. மொழியியல், வரலாறு, தத்துவம், சமயம், இலக்கியம், இலக்கணம் முதலிய துறைகளிலும் ஆழமான தேடலைச் செய்துள்ளார். யாழ்ப்பாணச் சரித்திரம், சைவ சித்தாந்தம், செகராசசேகரன் என்பன அவரெழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை. சுவாமி ஞானப்பிரகாசர் நல்ல நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றையும் வைத்திருந்தார், சுவாமிகள் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் நாள் அவர் பிறந்த ஊரான மானிப்பாயிலே காலமானார். தன் தாய்மொழிக்கும் தான் சார்ந்து நின்ற சமயத்திற்கும் இறக்கும்வரை தொண்டுசெய்த இறைமகன் ஆவார்.

 

நூல்திறன்:

பண்டைத்தமிழர் என்னும் இத்தொகுப்புநூல் சுவாமிகளுடைய 12 கட்டுரைகளின் தொகுப்பாகும். இவை “செந்தமிழ்” என்னும் மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டிலே முன்னர் வெளிவந்தவை. 1933-1943 வரையான பத்தாண்டுகளுக்கிடையில் வெளிவந்தவை. 70 ஆண்டு கடந்த பின்னர் நூல்வடிவம் பெற்றுள்ளன. பொருளடக்கம் பின்வருமாறு கட்டுரைகளை நிரைப்பட்டுத்தியுள்ளது.

 1. பண்டைத்தமிழர்

அ) ஒரு புதிய கொள்கை

ஆ) தமிழரின் முன்னைய இருப்பிடக் கொள்கைகள்

இ) மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளில் தமிழரின் முன்னோர்

ஈ) ஒத்த ஐதீகங்களும் பழக்கவழக்கங்களும்

உ) பழங்கால எழுத்துமுறை

ஊ) மேற்காசியாவிலும் ஐரோப்பாவிலும் தமிழ் இடப்பயர்கள்

எ) குறிப்பான தெய்வ வழிபாடுகள்

ஏ) பணியர்களும் பண்டு தேசமும்

ஐ) பரத கண்ட தமிழர் நாகரிகம்

 1. பூனையும் பூசையும்
 2. பனையின் பெயர்கள்
 3. தண்ணீரும் எண்ணெய்யும்
 4. 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்நாட்டெல்லை
 5. தமிழ்ப்பாஷையின் விசித்திரங்கள்
 6. தமிழில் உள்ள நிறச் சொற்கள்
 7. தவறான மனப்பதிவைத்தரும் சரித்திரக் குறிப்புகள்
 8. பழையவற்றில் பழைய குரல் வெண்பாக்கள்
 9. பண்டைய மக்களின் பொது இருப்பிடம்
 10. குடஞ்சுட்டு
 11. இலக்கணமும் இலக்கியமும்

 

முதலாவது கட்டுரை நீண்ட கட்டுரையாக 9 உபதலைப்புகளோடு 122 பக்கங்களில் அடங்கியுள்ளது. ஏனைய 11 கட்டுரைகளும் 72 பக்கங்களில் அடங்கியுள்ளன. ஆனால் தொகுத்து நோக்கும்போது 20 சிறிய கட்டுரைகளே உள்ளட்டங்கியுள்ளன. அவை படிப்போருடைய நன்மை கருதியே சிறிய ஆக்கங்களாக அமைக்கப்படுள்ளன. எனவே இக்கட்டுரைகளின் உள்ளடக்கத்தை வகுத்துக் கூறுவதாயின் பின்வரும் பொருள்களில் அடக்கலாம் : தமிழ்மொழி, தமிழர் இருப்பிடம், புலப்பெயர்வு, பழக்க வழக்கம், பெயர்கள், தெய்வ வழிபாடு, தமிழ்நாட்டெல்லை, நாகரிகம், சொற்பொருள், வரலாறு, எழுத்துநிலை. இன்று தமிழரும் பிற மொழியாளரும் அறிய விரும்பும் விடயங்கள் இவை.

தமிழ்மொழியும், தமிழர்வரலாறும் இன்று தமிழர்களாலேயே அறியப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இவ்விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் இளைய தலைமுறை வாழுகின்ற நாடுகளில் குடியுரிமை பெற்றிருப்பதால் அவர்கள் தம் மூத்தோரின் தாய்மொழியான தமிழ்மொழியை ஒரு பிறமொழியாகவே கருதும்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் தமிழர், தமிழ்மொழி, தமிழர் பண்பாட்டு என்பன பற்றி இணையத்தளங்களில் தமது கற்கை மொழியில் அறியவே விரும்புகின்றனர்.   இந்நிலையில் இந்த நூலை பதிப்பித்து வெளியிடுவதால் என்ன பயன்? என்ற வினாவே எல்லார் மனதிலும் எழக்கூடும். சுவாமி ஞானப்பிரகாசர் மேலைத்தேயக் குருமார்கள் மதப்பரப்பலுக்காகத் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்தபோது தமிழ்மொழியைக் கற்றதையும், ஆய்வு செய்ததையும் எண்ணிப்பார்த்தார். தொன்மையான தமிழ்மொழியைப் பிற மொழிகளுடம் ஒப்பிட்டு ஆய்வுசெய்த கால்டுவெலின் ஆய்வுகள் மதப்பணிக்கு அப்பால் வேறொரு பணி இருப்பதையும் அவருக்கு உணர்த்தியது. தமிழ்மொழியின் சிறப்பை ஏனைய மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வுசெய்யும் தமிழனாக அவர் செயற்படத் தொடங்கினார். அவருடைய எண்ணத்தின் விளக்கமாகவே இக்கட்டுரைகளை எழுதினார். அத்துடன் பிறமொழியாளரது ஆய்வுகளை தமிழ்மொழியிலே பதிவுசெய்தார். ஆங்கில மொழியை அறியாத பொதுமக்களும் தமது மொழிபற்றியும் தமிழர் தொன்மை பற்றியும் அறிவதற்கு வாய்ப்பளித்தார். அன்று அவர் அது பற்றிய தனது கருத்துகளையும் தமிழ்மொழியெலேயே பதிவுசெய்தார். அந்த வகையில் தமிழ்மொழியைப் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்த முதல் தமிழர் என்ற பெருமைக்கும் உரியவர் ஆகிறார். பண்டைத்தமிழர் என்கிற அவருடைய கட்டுரை கட்டாயம் எல்லாருக்கும் பயன் தரும் கட்டுரையாகும். இக்கட்டுரை இன்றைய நவீன ஆய்வுகளையும் கருத்துக்களையும் இணையத்தளத்திலே தேடும் ஆய்வாளருக்கு தனிப்பட்ட தமிழ் ஆய்வாளரை அடையாளம் காட்டும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்ச் சொற்களின் பொருளை விளக்கும் இரு கட்டுரைகள் எல்லாரையும் வாசிக்கத்தூண்டுபவை. பூனை, பூசை, ஓதம், இழுது, என்னும் சொற்களின் பொருளை மிக அழகாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளார். குடம் என்ற சொல்லின் பொருள் காலகதியில் மாறுபட்டிருப்பதை குடஞ்சுட்டு என்னும் கட்டுரையில் எடுத்துக் கூறியுள்ளார். தமிழ்மொழியைக் கற்பவரும் கற்பிப்பவரும் தெளிவாக அறியவேண்டிய கருத்தொன்றையும் “பூனையும் பூசையும்” என்ற கட்டுரையைலே விளக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

“மொழிநூல் வேறு. இலக்கண நூல் வேறு. முன்னையது தனிச் சொற்களின் இயல்பையும் அவை தம்முள் அடையும் மாற்றங்களையும் கூறும். பின்னையது சொற்கள் ஒன்றோடொன்று கூடும்போது முன்னிலை இறுதிநிலைகளில் கொள்ளும் விகாரங்களை எடுத்தோதும்”

இது சுவாமிகளின் எழுத்தாற்றலுக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. தமிழ்மொழி கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழாசிரியர்கள் இக்கட்டுரைகளை கட்டாயம் படிக்கவேண்டும். இன்றைய மாணவர்கள் மொழியறிவு மட்டும் பெற்றால் போதாது. தமிழ்மொழியின் தொன்மை, மாற்ற நிலை, தமிழர் வரலாறு, சான்றுகள் பற்றியும் அறிய வேண்டும். அத்தகைய கற்பித்தலுக்க்கு ஒரு தரவு நூலாகவும் இந்நூல் பயன்படும். மேலும் இந்த நூல் சுவாமிகளின் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியையும் தேடிச்செல்ல வைக்கும்.

நூலின் நிறைவாகத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் முதலில் வெளிவந்த “செந்தமிழ்” தொகுதியின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளமை மிகவும் பயன் தருவதாகும். மதுரைத் தமிழ்ச் சங்க ஏடான செந்தமிழ் தமிழ்மொழி ஆய்வாளாருக்கு அளித்த நல்வாய்ப்பை இன்றும் நாம் உணர முடிகிறது. தமிழ் ஆய்வுகள் கையெழுத்துப் படிகளாகக் காலவெள்ளத்தில் அள்ளுண்டுபோகாமல் இன்று நூல்வடிவாக நாம் பெறச் சிறந்த பணியைச் “செந்தமிழ்” ஆற்றியுள்ளது.

இந்த நூலாக்கம் பற்றி இன்னொரு சிறப்பான செய்தியும் பகிரப்படவேண்டும். இந்நூலை எழுநா ஊடாக நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்குரிய நிதியை புலம்பெயர் தமிழரான சுஜன் சண்முகசிங்கம் வழங்கியுள்ளார். இது ஒரு காலம் அறிந்த கொடை. ஈழத்துச் சான்றோன் சுவாமி ஞானப்பிரகாசரைப் புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழர் தலைமுறை நினைத்துப் பெருமையடைய வகைசெய்துள்ளார். எனவே இந்த நூலை வாங்குவோர் தமது தலைமுறைக்கு ஒரு தமிழ்ச் சொத்தை வாங்கியவர்களாகப் பெருமையும் மனநிறைவும் அடைவார்கள். அவர்கள் கொடையால் எழுநா ஊடக நிறுவனமும் இன்னொரு தமிழ்நூலை வெளியிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.