பண்டைத் தமிழர்

ஆதித் தமிழ் குறித்தும் தமிழர் குறித்துமான ஆய்வுக் கட்டுரைகள்
சுவாமி ஞானப்பிரகாசர்
தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ.அரங்கராஜ்
எழுநா வெளியீடு 12
மே 2013

சுவாமி ஞானப்பிரகாசரின் இந்நூல், உலகின் ஆதித்தாய்மொழியாகத் தமிழினை முன்வைத்து, தமிழர் தம் ஆதித்தாயகமான நடுநிலக் கடற்பகுதியிலிருந்து சிந்துவெளி பரவிப் பின் தென்னகம் போந்தார்கள் எனும் கருத்தினை நிறுவும்வகையிலே மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் “செந்தமிழ்” இதழ்களிலே வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். இப்போதைய ஆய்வுச்சூழலில் பொருந்தாத சில கருத்துக்கள் இத்தொகுப்பில் இருந்தபோதுங்கூட தமிழ், தமிழர் குறித்த ஆய்வுவரலாற்றில் இந்நூல் இன்றியமையாததாகிறது.

1875 இலே மானிப்பாயிலே பிறந்த பன்மொழிவித்தகர் சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ்மொழி, தமிழினக்குழுவின் வேர்களை காலத்தினாலே முன்னாய்ந்த அறிஞராவார். மொழியியலில்மட்டுமின்றி, கத்தோலிக்க மதகுருவான அவரின் வரலாற்று, தத்துவ ஆய்வுகளின் பெறுபேறுகள் யாழ்ப்பாணவரலாற்று நூலாகவும் சைவசித்தாந்தம் பற்றிய நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.

இந்நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ.அரங்கராஜ் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். தனது கலாநிதிப் பட்டத்தினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்ட இவர் தமிழ்ப் பாடநூல்கள் தொடர்பாக முதுதத்துவமாணி ஆய்வினை மேற்கொண்டார். இரண்டு நூல்களை எழுதியுள்ள ஜெ.அரங்கராஜ் ‘சுவாமி விபுலானந்தரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள்’ மற்றும் ‘சுவாமி ஞானப்பிரகாசரின் ஆய்வுக் கட்டுரைகள்’ ஆகிய இரு நூல்களின் பதிப்பாசிரியர் ஆவார்

pandaithamilar