About

எழுநா! தமிழ்ச்சூழலில் புதிதாக உருவாகியுள்ள ஊடக கூட்டுச் செயற்பாட்டு இயக்கம். பரந்து வாழும் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பல்வேறு குரல்களை வெளிக்கொணரும் நோக்கத்துடனும் அவற்றின் அறிவாற்றல் மட்டத்தை உயர்த்தும் இலக்குடனும் எழுநா கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

எழுநா ஊடக நிறுவனம், 2012 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற சுதந்திரமான ஓர் ஊடக நிறுவனமாகும். இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பல்வேறு பட்ட குரல்களை, குறிப்பாக அதிக கவனம் பெறாத விளிம்பு நிலைக் குரல்களை பதிவு செய்தலும், அவற்றை வெளிக்கொணர்தலும் எழுநா ஊடக நிறுவனத்தின் முதன்மை நோக்காக உள்ளது.

ஊடக வடிவின் பல்வேறுபட்ட சாத்தியங்களையும் பரிசோதித்து நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டினுாடு தன்னுடைய வருகையை எழுநா அறிவிக்கின்றது. முதற்படியாக மரபார்ந்த ஊடக வடிவமான அச்சு வடிவத்தின் ஊடாக அது தன்னை வெளிப்படுத்துகின்றது. அவ்வகையில், புத்தகங்கள் – சஞ்சிகைகள் – ஆய்விதழ்கள் போன்றவற்றை வெளிகொண்டு வருகின்றோம். தொடர்ச்சியாக எதிர்காலத்தில் பத்திரிகை, மற்றும் அச்சு ஊடகத்திற்கு வெளியே ஆன இலத்திரனியல் வெளி ஆகியற்றிலும் செயற்பாடுகளை விரிவாக்க உள்ளோம்.

இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் சமூக வெளிகளில் செயற்படுவதன் மூலம், அவர்களது கலை பண்பாட்டு விழுமியங்களைப் பதிவு செய்தும், பலதரப்பட்ட முயற்சிகளினுாடாக அவற்றை  ஊக்குவித்தும் எழுநா ஊடக நிறுவனம் செயற்படும். அதாவது, அச்சு ஊடகம், காட்சி ஊடகம், வானொலி மற்றும் இணைய ஊடகம் முதலானவற்றின் வழி, தமிழ் பேசும் சமூகங்களின் சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார பரப்புக்களில் தனது இலக்குகளை பூர்த்தி செய்ய எழுநா ஊடக நிறுவனம் முயற்சி செய்யும்.

ஒரு சுதந்திர அமைப்பாக, எழுநா ஊடக நிறுவனம் பல்வேறுபட்ட சமூகக் குரல்களையும், வெவ்வேறு முரண்பட்ட சிந்தனை நிலைகளைக் கொண்டுள்ள சமூக அமைப்புக்களினது குரல்களையும் வெளிக்கொண்டுவரும்.

மேற்சொன்ன  இலக்குகளை தம்மோடும் கொண்டுள்ள தனி மனிதர்களோடும் அமைப்புக்களோடும் இணைந்து செயற்பட எழுநா விரும்புகின்றது. எழுநாவின் இவ்வாறான செயற்பாடுகளோடு இணைந்து கொள்ள அவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

குறிக்கோள்

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் குரல்களைப் பதிவு செய்தும், வெளியீடு செய்தும் அவர்களது அறிவு சார் திறனை உருவாக்க ஊடக முயற்சிகளில் ஈடுபடுதல்.

நோக்கங்கள்

 • புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் ஆய்விதழ்களைப் பிரசுரிப்பதன் மூலமாக அறிவினைப் பரவலாக்குதல்.
 • ஆவணப்படங்கள், குறும் படங்கள் மற்றும் உரையாடல் அரங்கம் என்பவற்றினைத் தயாரித்து வழங்குவதற்கான மார்க்கங்களாக‌ பல்லூடக மற்றும் ஊடாடு தொழினுட்பங்களை அறிமுகம் செய்தல்.
 • அறிவுருவாக்கத்தினை வலுவூட்டல் மற்றும் ஊடக விருத்தியினை ஏற்படுத்தல்
 • கலாசார மற்றும் தகவல் உருவாக்க‌ செயன்முறைகள் பற்றிய சந்தைசாரா மாதிரிகளை விருத்தி செய்வதன் மூலமாக அறிவு தடங்கல்கள் அற்ற வகையில் சுயாதீனமாகப் பரம்பல் அடைய வழிசெய்தல்.

வழிகாட்டு நெறிகள்

 • அறிவு அருளுடமை
  எழுநா ஊடக நிறுவனத்தின் செயல்மையமானது வெளிப்படையான தகவல், திறந்த நுழைவுரிமை, வெளிப்படையான அறிவுசார் செயன்முறைகளினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சமூகத்தின் நலனினைக் கருதி அறிவினைப் பரவலாக்குதலினை எழுநா ஊக்குவிப்பதுடன் அவ்வாறான செயன்முறைகளில் தானும் பங்குபற்றும்.
 • பக்கச் சார்பின்மை
  எழுநா ஊடக நிறுவனம் பக்கச்சார்பற்ற ஓர் அமைப்பு. பல்வேறு பட்ட சமூக, கலாசார, அரசியற் பின்னணிகளில் இருந்து எழுகின்ற குரல்களினைப் பதிவு செய்யும் அதேவேளை, எவரும் தமது அரசியல் நோக்குகளுக்காகவும் நலன்களுக்காகவும் இந்த அமைப்பினைப் பயன்படுத்துவது ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டாது. அரசியல் மயமாக்கலிலிருந்தும், அரசியல் முத்திரை குத்தப்படுவதிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள எழுநா ஊடக நிறுவனம் எல்லா விதமான பொருத்தமான நடவடிக்கைகளினையும் மேற்கொள்ளும்.
 • ஊடாட்டம்
  கட்புல, அச்சுசார் மற்றும் இணைய ஊடகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படுவதனை எழுநா ஊக்குவிக்கும். இவ்வாறான ஒத்துழைப்பு, இந்த நிறுவனங்களின் செயற்றிறனினை அதிகரிக்குமாயின், அல்லது எழுநாவின் செயற்றிறனை அதிகரிக்குமாயின், ஏனைய நிறுவனங்கள் தமது செயற்றிட்டங்களை பூர்த்தி செய்ய எழுநா துணை நிற்கும்.
 • வெளிப்படைத்தன்மை
  எழுநாவின் எல்லா செயற்பாடுகளும் வெளிப்படையாக இடம்பெறும். கணக்கறிக்கைகள் தொடர்பாக வெளிப்படையாக இருத்தல், விரிவான நிருவாகத்தினைக் கொண்டிருத்தல், செயற்றிட்டங்கள் மற்றும் அவற்றின் பலாபலன்கள் என்பன பற்றிய தகவல்களைப் பரம்பல் அடையச் செய்தல், தகவல் அறிந்து கொள்வதற்கான விண்ணப்பங்களுக்கு உரிய முறையில் பதிலளித்தல் போன்றன தொடர்பில் நாம் மிகவும் பற்றுறுதியுடன் செயற்படுவோம்.
 • பங்கேற்பு
  பங்குதாரர்களின் பங்களிப்பினை விரிவுபடுத்துவதும், உறுதி செய்வதும் எழுநா உருவாக்க விளையும் கலாசாரத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும். நிறுவனத்தின் செயற்பாடுகளில் தாக்கங்களினை உருவாக்கும் முடிவுகள் மற்றும் கொள்கைகளினை வகுப்பதிலும், மதிப்பீடு செய்வதிலும் எல்லாப் பங்குதாரர்களுடைய கருத்துக்களும் கேட்கப்படும். பங்குதாரரின் பங்களிப்பினை உறுதி செய்யக்கூடிய‌, குழு உணர்வினைப் பேணக்கூடிய‌, புதிய கருத்துக்கள் மற்றும் செயன்முறைகளை வரவேற்று, மதிப்பளிக்கக்கூடிய‌, திறமையினை ஊக்குவித்து பாராட்டுவதனை உறுதி செய்யக்கூடிய பொறிமுறைகளை எழுநா அறிமுகம் செய்யும்.
 • தன்னார்வம்
  சுயமாக கருமங்களினைப் பொறுப்பேற்று செயற்படுதல் எழுநாவின் எல்லா செயற்பாடுகளுக்கும் அடிநாதமாக அமைகிறது. சுய செயற்பாட்டாளர்களின் பங்களிப்பினை முன்னிறுத்தும் வகையிலும், ஒவ்வொரு குழுவினதும் செயற்பாட்டு இலக்குகள் மற்றும் மேலதிகள் செலவுக என்பவற்றினை உச்ச அளவிற்கு கொண்டு செல்லும் வகையிலும் எழுநாவினது வருடாந்த செயற்பாட்டுத் திட்டம் வடிவமைக்கப்படும்.

செயற்பாட்டு வடிவம்

பொதுவாக தமிழ் சூழலில் கையாளப்படும் நிறுவன முறைமைக்கு மாறான பொறிமுறைகளை எழுநாவின் முகாமைத்துவம், செயற்பாடு போன்றவை தொடர்பில் வடிவமைத்துள்ளோம்.

எழுநா ஊடக நிறுவனம் இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி எழுநாவின் அறங்காவலர் சபையினரோ, அல்லது பங்களிப்பாளர்களோ இலாபத்தைப் பகிரவோ அல்லது அதன் பயன்களை அனுபவிக்கவோ முடியாது. மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புக்கள், நன்கொடைகள், விற்பனைகள் மூலமான வருவாய் அனைத்தும் தொடர்ச்சியான ஊடக செயற்பாட்டிற்கும், அதன் விரிவாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களிற்கும் பயன்படுத்தப்படும்.

எழுநா ஊடக நிறுவனத்தின் அமைப்பு முறைமையானது, அதனுள் அதிகாரம் கருக்கொள்ள முடியாத வகையிலும், இயன்றவரை அதிகாரப் படிநிலைகள் குறைக்கப்பட்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எழுநாவின் செயற்பாட்டு வடிவம் தமிழ்ச் சமூகங்களின் மத்தியில் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட கூட்டுறவு முறைமையை பெரிதும் ஒத்துள்ளது. அறங்காவலர்கள் – பங்களிப்பாளர்கள் – நன்கொடையாளர்கள் – மன்ற உறுப்பினர்கள் என்ற நான்கு வகையான வெளிகளில் யாரும் பங்களிக்க முடியும்.

எழுநாவின் ஆரம்ப முயற்சிகளை இலகுபடுத்தும் நோக்கோடு, தெரிவு செய்யப்பட்ட 5 அறங்காவலர் சபை உறுப்பினர்களைக் கொண்டதாக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் அச்சபையின் பொறுப்புடமையை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள எவரும் அறங்காவலர் சபை உறுப்பினராக வர முடியும். அதே போல, நிறுவன செயற்பாடுகளை முன்னகர்த்தும் வகையிலான ஆலோசனை, சிந்தனைப் பகிர்வு போன்ற தளங்களிலும் விருப்பம், திறமை சார்ந்து பங்களிப்பாளராக இணைந்து இயங்க முடியும்.

பொருளாதாரம்

எழுநா ஊடக நிறுவனம் தனது நிதி ஆதாரத்தினை பின்வருமாறு வரையறுக்கின்றது. மன்ற உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், விற்பனை போன்றவையே அவையாகும். மேற்கூறிய வழிமுறைகளினுாடாகப் பெறும் நிதியை ஆதாரமாகக் கொண்டே, எழுநாவின் செயற்திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன.

மன்ற உறுப்பினர்கள், மற்றும் விற்பனை நிதி ஆதாரத்தினுாடாக எழுநாவின் பொதுவான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் மன்ற உறுப்பினர் எண்ணிக்கையும், விற்பனையும் விரிவாகும்போது எழுநாவின் செயற்திட்டங்களும் விரிவடைந்து செல்லும். அது இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களிடையேயும் எதிர்காலத்திற்கும் நாம் விட்டுச்செல்லும் பெறுமதியை மேலும் அதிகரிக்கும். அவ்வாறான ஒரு இலக்கை அடையும் பெருவிருப்போடு செயற்படும் இளையவர்களின் இம்முயற்சிக்கு பெருவாரியான ஆதரவினை வழங்கும்படி அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலுமொரு வகையில் நன்கொடையாளர்களின் நிதி ஆதாரத்தில், எழுநாவின் நிதிக்கொடை மீள்வெளியீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களில் நுாறாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய, காலத்தால் அழியாது பாதுகாக்கப்படவேண்டிய ஓலைச்சுவடிகள், கால ஓட்டத்தில் அழிந்து கிடைப்பதற்கு அரிதான நுால்கள் முதலானவை நிதிக்கொடை மீள்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் மீள் பதிப்புச் செய்யப்படுகின்றன. எழுநா நிறுவனம் அவ்வாறான அறிவுக் கரூவூலங்களை தொடர்ச்சியாக தேடி ஆவணப்படுத்தி வருகின்றது. அவற்றை மீள் வெளியீடு செய்வதற்கு, ஆர்வலர்கள், தொழில் முனைவர்கள், புரவலர்கள் முதலான நன்கொடையாளர்களின் முழுமையான பங்களிப்பினைக் கோருகின்றோம.

அரசியல்

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த ஊடக செயற்பாட்டு இயக்கம் என்ற நிலையிலேயே எழுநா தனது அரசியலை வகுத்துக் கொண்டுள்ளது. ஓர் அரசியல் இயக்கத்திற்கு இருப்பதைப் போன்ற கறாரான அரசியலை வரித்துக் கொள்ளவேண்டிய தேவையில்லாத போதிலும், வெறுமனே கருத்துக்களை வெளிக்கொணரும் ஊடகமாக எம்மைக் கருதிக் கொள்ளவில்லை. ஊடகங்கள் ஒருபோதும் சம்பவங்களைப் பட்டியலிடுவதுடனும் விடயங்களை வெளிக்கொணர்வதுடனும் மாத்திரம் தமது பாத்திரத்தை மட்டுப்படுத்தி விடமுடியாது. அறம் சார்ந்த நிலைப்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவற்றிற்கு அவசியமானது. மேலும், எழுநா வெகுசன மட்டத்தில் மாத்திரம் உரையாடக் கூடிய ஊடக அமைப்பல்ல. அதற்கும் அப்பால் சீரிய தளங்களிலும், அரசியல் செயற்பாட்டாளர்களுடனும், மதியுரைஞர் சமூகத்துடனும் தொடர்பிலிருந்து செயற்பட வேண்டியுள்ளதால், அறம் சார்ந்து எம்முடைய அரசியலை முன்வைக்க வேண்டிய தேவையுள்ளது. நம் அரசியலை தெளிவாக அறிவிக்க வேண்டியது அவசியமாகின்றது.

எழுநாவின் செயற்படு பரப்பு இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களை மையப்படுத்தியது. அவர்களது அறிவார்த்த தளத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்காகக் கொண்டது.

இலங்கைத் தமிழ் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய சிந்தனைப் பள்ளிகளாக தேசிய சிந்தனைப்பள்ளி, மார்க்சிய சிந்தனைப்பள்ளி, தலித்திய சிந்தனைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைக் குறிப்பிட முடியும். சமூக அமைப்பையும் அதன் இயங்கியலையும் இம் மூன்று சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறுவிதமாக அணுக முற்படுவர்.

தமிழ்ச்சமூகக் கட்டமைப்பும் உறவுகளும் சாதிய அடிப்படையிலானது என்ற புரிதலோடு செயற்படுபவர்கள் தலித்திய சிந்தனைப் பள்ளிக்குள்ளும், சமூகக் கட்டமைப்பை வர்க்க அடிப்படையிலானதாக அணுகிச் செயற்படுபவர்கள் மார்க்சிய சிந்தனைப் பள்ளிக்குள்ளும், சமூகக் கட்டமைப்பின் அடிப்படையான கூறு இன ரீதியானது என்ற அணுகுமுறையில் செயற்படுபவர்கள் தேசியவாத சிந்தனைப் பள்ளிக்குள்ளும் அடங்குவர். இம்மூன்று சிந்தனைப் பள்ளிகளுக்குள்ளிருந்த செயற்பாட்டாளர்களும் அசமத்துவ சூழ்நிலையை மாற்றியமைக்க கடந்த காலங்களில் போராடியுள்ளனர். போராட்ட முறைமைகள் சார்ந்து வெவ்வேறு சிந்தனைப் போக்குகளும் அவற்றை முன்னெடுக்க வெவ்வேறு இயக்கங்களும் தோன்றி மறைதிருக்கின்றன.

எழுநா ஊடக நிறுவனம், இம்மூன்று சிந்தனைப் பள்ளிகளினதும் தற்கால சிந்தனைப் போக்குகளை வளப்படுத்தக் கூடியவாறான அறிவுச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதென்று தீர்மானித்துள்ளது. வெவ்வேறு சிந்தனைப் போக்குகளுடைய உருவாக்கங்களும் நகர்வுகளும் சமத்துவ ரீதியான சமூகத்தைப் உருவாக்கும் நோக்கமுடையதாக இருக்க வேண்டும். வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளிலிருந்து தோன்றும் புதிய சிந்தனைப் போக்குகள் மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரே சிந்தனைப் பள்ளிக்குள்ளிருந்து வெளிப்படும் சிந்தனைகள் தம்முடைய சக பயணிகளை நேச முரணோடு எதிர்கொள்ள வேண்டிய அதேநேரம், பிற சிந்தனைப் பள்ளிக்குள்ளிருந்து செயற்படும் செயற்பாட்டாளர்களுடன் தோழமையான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதும் அவசியமானது. அதுமட்டுமன்றி, முரண்பாடுகளை பெருக்க முற்படும் அதிகாரத்திற்கு ஆதரவான போக்குகளை இனம் கண்டு, அவற்றுக்கு எதிராகச் செயற்பட வேண்டியதும் அவசியமானது.

மேற்கூறிய மூன்று சிந்தனைப் பள்ளிகளில் இருந்தும் மக்கள் நலன் சார்ந்து பலர் இயங்குகிறார்கள். அவ்வாறானவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த தளமாக எழுநா ஊடகத் தளம் அமையும். அதே நேரம் இச் சிந்தனைப் பள்ளிகளிலும் அதிகாரத்திற்குச் சார்பான சிந்தனைப் போக்குகளும் அதிகார வர்க்கத்தால் திட்டமிட்டு உருவாக்கபப்பட்டிருக்கும். அவ்வாறான சிந்தனைகளோடும் நகர்வுகளோடும் எழுநா ஊடக நிறுவனம் இணைந்து இயங்காது.

மாறாக, அதிகாரத்திற்கு எதிரான மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும், வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளில் இருந்தும் மனிதர்களை இணைத்துச் செயற்படக்கூடிய கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காகவும் எழுநா ஊடக நிறுவனம் பாடுபடும்.